டெல்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடியை கடுமையான முறையில் தனிப்பட்ட தாக்குதலை தொடுத்துள்ளார். ‘மிஸ்டர் மோடி’ ஏன் சீனர்களுக்கு ‘எங்கள் நாட்டின் நிலத்தை’ வழங்கியுள்ளார் என்று ராகுல் கேள்வி எழுப்பினார்.
செய்தியாளர்கள் மத்தியில் பேசிய ராகுல் காந்தி, பிரதமர் ஒரு ‘கோழை, சீனர்களை எதிர்த்து நிற்க முடியாது’ என்று குற்றம் சாட்டியதோடு, மத்திய அரசு ‘இராணுவத்தின் தியாகத்தை அவமதிக்கிறார்’ என்றும் கடுமையாக விமர்சத்தார்.
சீனா நுழைந்த இடத்திலிருந்து மிக முக்கியமான பகுதியான டெப்சாங் சமவெளி பற்றி பாதுகாப்பு அமைச்சர் ஏன் ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்றும் ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்.
ராஜ்நாத் சிங் அறிக்கை
டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி பேசுகையில். காஷ்மீரின் கிழக்கு லடாக் எல்லையில் என்ன நிலைமை என்பது தொடர்பாக நேற்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிக்கை வெளியிட்டார். இப்போது, நமது படைகள் பிங்கர்-3 மலைப்பகுதிக்கு செல்வதாக அவர் கூறினார்.
ஏன் விட்டுக்கொடுத்தார் மோடி
பிங்கர்-4 பகுதி நமது பிராந்தியம். இப்போது, அந்த பிங்கர்-4 பகுதியில் இருந்து பிங்கர்-3 பகுதிக்கு நமது படைகள் சென்றுள்ளன. நமது பிராந்தியத்தை பிரதமர் மோடி ஏன் சீனாவுக்கு விட்டுக்கொடுத்தார்?
ஒரு வார்த்தை பேசவில்லை
சீனா நுழைந்த இடத்திலிருந்து மிக முக்கியமான பகுதியான டெப்சாங் சமவெளி பற்றி பாதுகாப்பு அமைச்சர் ஏன் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. உண்மை என்னவென்றால், பிரதமர் இந்தியப் பகுதியை சீனாவுக்குக் கொடுத்திருக்கிறார். இதுபற்றி நாட்டு மக்களுக்கு அவர் பதில் அளிக்க வேண்டும்.
சீனாவிற்கு எதிராக நிற்க முடியாது
பிரதமர் ஒரு கோழை, அவரால் சீனாவுக்கு எதிராக நிற்க முடியாது. அவர் நமது ராணுவத்தின் தியாகத்தை அவமதிக்கிறார். ராணுவத்தின் தியாகத்திற்கு துரோகம் செய்கிறார். இவ்வாறு செய்வதை இந்தியாவில் உள்ள யாரும் அனுமதிக்கக்கூடாது.” என்றார்.