
புதுடெல்லி: பத்து வருடங்களுக்கு பின் மத்தியில் மீண்டும் கூட்டணி ஆட்சி அமைகிறது. இதனால் 2024 மக்களவைத் தேர்தலில் மோடி அலை ஓய்ந்து விட்டதாகக் கருதப்படுகிறது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மக்களவை தேர்தல் முடிவுகள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்திவிட்டது.
இந்தமுறை 370 தொகுதிகள் கிடைக்கும் என்று எதிர்பார்த்த பாஜகவிற்கு 240 இடங்களே கிடைத்துள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணிக்கு (என்டிஏ)) எதிர்பார்க்கப்பட்ட 400 க்கு பதிலாக 291 தொகுதிகள் கிடைத்துள்ளன. என்டிஏவிற்கு 11 நிறுவனங்களும், ஊடகங்களும் தேர்தலுக்கு பிந்தயக் கணிப்பில் வெற்றியை அள்ளித் தந்திருந்தன. அனைவரும் ஒரே குரலில் 300 முதல் 400 வரையிலான தொகுதிகள் கிடைக்கும் எனக் கணித்ததும் தவறாகப் போனது.
கடந்த 1999 தேர்தலில் பாஜக 182 தொகுதிகள் பெற்றும் கூட்டணி ஆட்சியை அமைத்திருந்தது. இதில், ‘இந்தியா ஒளிர்கிறது’ எனப் பிரச்சாரம் செய்திருந்தது அப்போதைய பிரதமர் வாஜ்பாய் அரசு. இந்தச் சூழலில், 2004 மக்களவைத் தேர்தலில் மீண்டும் பாஜக தலைமையிலான என்டிஏ ஆட்சி அமையும் என பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், பாஜகவுக்கு மேலும் குறைந்து 138 தொகுதிகள் கிடைத்தன.
இதன் காரணமாக, வாஜ்பாய் தலைமையிலான என்டிஏ ஆட்சி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியிடம் பறிபோனது. அப்போது, காங்கிரஸ், பாஜகவை விட ஏழு தொகுதிகள் 145 மட்டுமே அதிகம் பெற்றிருந்தது. எனினும், காங்கிரஸ் தலைமையில் தொடங்கிய கூட்டணி ஆட்சி 2009 மக்களவை தேர்தலுக்கு பிறகும் தொடர்ந்தது. இந்த கூட்டணி ஆட்சி நிலையை 2014-ல் மாற்றிக் காட்டிய மோடி அலை, 2024-ல் ஓய்ந்து விட்டதைக் காட்டுகிறது.
இதனால், பத்து வருடங்களுக்கு பிறகு மத்தியில் மீண்டும் கூட்டணி ஆட்சி அமைய உள்ளது. இதற்கு மீண்டும் பாஜகவே தலைமை ஏற்றாலும் அது, நித்திய கண்டம் பூர்ண ஆயுசாகவே தொடரும் எனக் கருதப்படுகிறது. இதை பாஜகவிடமிருந்து பறிக்க எதிர்க்கட்சிகளின் கூட்டணியான இண்டியா இப்போதே வியூகம் அமைக்கத் தொடங்கி விட்டது. இதற்கு ஏதுவாக இண்டியா கூட்டணிக்கு 234 தொகுதிகள் கிடைத்துள்ளன.
என்டிஏவின் முக்கிய உறுப்பினராக பிஹாரின் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளம் தலைவருமான நிதிஷ்குமார் உள்ளார். மற்றொரு உறுப்புக் கட்சியின் முக்கியத் தலைவராக தெலுங்கு தேசத்தின் தலைவர் சந்திரபாபு நாயுடு இடம் பெற்றுள்ளார்.
அவ்வப்போது இந்த இரண்டு தலைவர்களும் முன்வைக்கும் கோரிக்கைகள் பாஜகவிற்கு பெரும் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களை சமாளிக்க இண்டியா கூட்டணியின் உறுப்பினர்களையும் பாஜக குறிவைக்கும் வாய்ப்புகள் உள்ளது.
இந்த குறிக்கு என்டிஏவின் பழைய உறுப்பினர்களாக மகராட்டிராவின் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா முதலாவதாக இருக்கும் வாய்ப்புகள் உள்ளன. இக்கட்சிக்கு அதிலிருந்து பிரிந்து என்டிஏவில் இருக்கும் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனாவை விட 2 தொகுதிகள் உள்ளன.
இரண்டாவது குறியில் பஞ்சாபின் சிரோமணி அகாலி தளம் கட்சியும் இருக்கும் வாய்ப்பு உள்ளன. இக்கட்சிக்கு ஓரே ஒரு தொகுதி கிடைத்திருந்தாலும் அதன் நட்பு, பஞ்சாபின் சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுக்கு பயன் தரும்.
இந்தியாவில் கூட்டணி ஆட்சி புதிதல்ல. இது 1977 இல் ஜனதா கட்சியின் பேரில் துவங்கிய போது நிலைக்கவில்லை. பிறகு காங்கிரஸின் பிரதமர் பி.வி.நரசிம்மராவ் ஆட்சிக்கு பெரும்பான்மை இல்லை என்றாலும் அவர் பல்வேறு கட்சிகளின் மறைமுக ஆதரவுடன் ஆட்சியை நீட்டித்தார்.
இதுபோல், கட்சிகளை உடைக்கும் புகார் பாஜக, காங்கிரஸ் கட்சிகள் மீது ஏற்கெனவே உள்ளது. தற்போதய சூழலில் கூட்டணி ஆட்சி அமைந்தால் மீண்டும் கட்சிகள் உடைப்பும் இருக்குமா? எனும் கேள்வி எழுந்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.