மதுரை ரயில் நிலையம் முன்பு அகற்றப்பட்ட மீன் சிலை நாளை மறுநாள் மீண்டும் நிறுவப்படுகிறது. பாண்டிய நாட்டு சின்னத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலும், மதுரையின் அடையாளச் சின்னமாகவும் மூன்று மீன்கள் நீருற்றில் துள்ளி விளையாடுவது போன்று பித்தளை உலோகத்திலான பிரம்மாண்ட மீன் சிலை மதுரை ரயில் நிலையம் முன்பு அமைக்கப்பட்டிருந்தது.
தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் 1999ல் இந்த சிலையை நிறுவியது. இது அனைத்து தரப்பு மக்களின் பாராட்டையும் பெற்றதுடன், மதுரை ரயில் நிலையத்திற்கான அழகு அடையாளமாகவும் மாறியது. இந்நிலையில், ரயில்நிலைய முன்பகுதியை அழகுபடுத்தி, விரிவாக்கம் செய்யும் பணிகளின்போது,

அரசு டவுன் பஸ்கள் உள்ளே வந்து செல்ல வசதியாக இந்த சிலையை அகற்றவும், இதற்குப் பதிலாக வேறொரு பொருத்தமான இடத்தை ரயில் நிலையம் முன்பு ஒதுக்கித் தருவதாகவும் அதிகாரிகள் உறுதியளித்தனர்.
அதன்பின் இந்த மீன் சிலை அகற்றப்பட்டு, ரயில் நிலையத்தின் ஒரு அறையில் வைக்கப்பட்டது. பணிகள் முடிந்து பல மாதங்களாகியும் இந்த சிலையை இங்க அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. இந்நிலையில் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தலைவர் ஜெகதீசன் உள்ளிட்ட நிர்வாகிகள் தொடர் முயற்சி மேற்கொண்டனர்.

தற்போது மதுரை ரயில்வே கோட்ட மேலாளராக புதிதாகப் பொறுப்பேற்றிருக்கும் ஆனந்த் மதுரை ரயில் நிலையத்தின் முன்புறம் தேசிய கொடிக் கம்பத்திற்கு அருகில் மதுரையின் அடையாளச் சின்னமான மீன் சிலையை மீண்டும் அமைத்திட இடத்தை தேர்வு செய்து கொடுத்துள்ளார்.இதுகுறித்து வர்த்தக சங்கத்தலைவர் ஜெகதீசன் கூறும்போது, ‘‘மீன் சிலையை மீண்டும் அமைப்பதற்கான பூமி பூஜை நாளை மறுநாள் (நவ.6ம் தேதி) காலை 10.30 மணிக்கு நடக்கிறது. இதில் மதுரை எம்பி சு. வெங்கடேசன், மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் ஆனந்த், மதுரைக் கோட்ட வர்த்தக மேலாளர் மற்றும் ரயில்வே உயரதிகாரிகள், தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்’’ என்றார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.