
மாசி திருவிழா: மாசி திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூரில் சுவாமி சண்முகர் தங்கச்சப்பரத்தில் எழுந்தருளி சிவப்பு சாத்தி வீதி உலா நேற்று வெள்ளிக்கிழமை நடந்தது. இன்று சனிக்கிழமை அதிகாலை வெள்ளை சாத்தி கோலத்திலும், பகல் 11.30 மணிக்கு பச்சை சாத்திய கோலத்திலும் வீதி உவாவும் நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் திங்கட்கிழமை காலை நடைபெறுகிறது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2ம் படை வீடாக போற்றப்பட்டு வரும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில். பிற முருகன் கோவில்கள் மலை மீது இருக்கும் போது கடற்கரை அருகில் உள்ளதால் இந்த ஆலயம் ஆன்மிக சுற்றுலா தலமாகவும் திகழ்ந்து வருகிறது.
இந்த கோயிலுக்கு தினமும் உள்ளூர், வெளியூர் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும், சிங்கப்பூர், மலேசியா போன்ற பிற நாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இங்கு நடைபெறும் கந்தசஷ்டி, தைப்பூச திருவிழாக்களில் விரதம் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
வருடத்தில் குறிப்பிட்ட சில மாதங்கள் தவிர ஆண்டு முழுவதும் திருவிழா நடைபெறும். தற்போது மாசித் திருவிழா தொடங்கி நடைபெற்று வருவதையொட்டி பல்வேறு பகுதிகளில் இருந்தும் விரதம் இருந்த பக்தர்கள் பால்குடம், காவடி, பறவைக்காவடி,அலகு குத்தி பாதயாத்திரையாக வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். பக்தர்கள் பறவை காவடி எடுத்தும், அலகு குத்தியும் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் அவர்கள், கடற்கரையில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்து சென்றனர்.

திருச்செந்தூரில் முருகப் பெருமான் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளின் அம்சமாகவும் திகழ்ந்து அருள்பாலிக்கிறார் என்பது அர்த்தமாகும். அதை காட்டும் வகையில் ஆவணி, மாசி திருவிழா நாட்களில் சிவப்பு சாத்தி, வெள்ளை சாத்தி, பச்சை சாத்தி கோலத்தில் சண்முகர் எழுந்தருளி அருள்பாலிப்பார். சிவப்பு சாத்தி சப்பரத்தின் போது அலங்காரம், ஆராதனைகள் சுவாமி அம்சம், சப்பரம், எல்லாம் சிவப்பு நிறத்தில் இருக்கும்.
மாசி திருவிழாவின் முக்கிய அம்சமாக நேற்று மாலையில் சண்முகர் சிவப்பு சாத்தி கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். சிவப்பு நிற பட்டாடை அணிந்து செவ்வரளி, ரோஜா நிற மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பிரகாரத்தை வலம் வந்தார். சண்முகர் சிவப்பு சாத்தி கோலத்தின் பின்புறமாக நடராஜர் அலங்காரத்தில், சிவன் அம்சமாக பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

அதுபோல வெள்ளை சாத்தி சப்பர ஊர்வலத்தின் போது எல்லாம் வெள்ளை மயமாக இருந்தது. வெள்ளை சாத்தியை கண்டு இறைவான தரிசனம் செய்தால் பிரம்மாவின் அருளால் நம் தலை எழுத்தே மாறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இன்று அதிகாலை 5 மணிக்கு சுவாமி சண்முகர் வெண்பட்டு அணிந்து, வெள்ளை நிற மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வெள்ளை சாத்தி கோலத்தில் எழுந்தருளி உள்பிரகாரத்தில் வள்ளி தெய்வானை சமேதராக உலா வந்தார் சண்முகர்.
தொடர்ந்து 11.30 மணிக்கு சுவாமி சண்முகர் பச்சை நிற பட்டாடை அணிந்து, பச்சை நிற மலர்கள் சூடி பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி கோவில் உள்பிரகாரத்தில் உலா வந்தார். பச்சை நிறமாக தோற்றமளிக்கும் சண்முகரைப் பார்த்தால் வாழ்வில் செல்வம் சேரும் என்பது ஐதீகமாகும். எனவே பச்சை சாத்திக்கு மிகுந்த வரவேற்பு காணப்படுவதுண்டு.

சிவப்பு சாத்தி, வெள்ளை சாத்தி, பச்சை சாத்தி மூன்றையும் கண்டு மும்மூர்த்திகளின் அருளைப் பெற்றால் எளிதில் முக்தி பெற முடியும் என்று திருச்செந்தூர் தல வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. மாசி திருவிழாவின் முக்கிய அம்சமான தேரோட்டம் 6ஆம் தேதி திங்கட்கிழமை நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து 7ம் தேதி செவ்வாய்கிழமை தெப்பத் திருவிழா நடைபெற்று மாசித்திருவிழா நிறைவடைகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.