ஒரே நாள் இரவில் தேங்காய் கடை, மளிகை கடை, பல்ஆஸ்பத்திரி உள்பட 6 இடங்களில் தொடர் திருட்டு. மர்ம நபர்கள் கைவரிசை. சிசிடிவி கேமரா பதிவுகளின் அடிப்படையில் தனிப்படை போலீசார் விசாரணை.
குமரி மாவட்டம் மயிலாடி அருகே ஒரே நாள் இரவில் தேங்காய் கடை, மளிகை கடை, பல்ஆஸ்பத்திரி உள்ளிட்ட 6 இடங்களில் பூட்டை உடைத்து தொடர் திருட்டில் மர்மநபர்கள் ஈடுபட்டது தெரியவந்தது. இது பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தத் தொடர் திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
தென்தாமரைகுளம் பால்பண்ணை தெருவைச் சேர்ந்தவர் ராஜசேகர் 58. இவர் மருங்கூர் சந்திப்பு அருகில் தேங்காய் கடை நடத்தி வருகிறார். வழக்கம் போல் நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார். பின்னர் நேற்று காலை சுமார் 7 மணி அளவில் கடைக்கு வந்தவர் கடையின் முன்பக்க
பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் இதுகுறித்து அஞ்சுகிராமம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவலின் அடிப்படையில் அஞ்சுகிராமம் போலீசார் மற்றும் தனிப்படை போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
அப்போதுமயிலாடி, மருங்கூர் சந்திப்பு உள்ளிட்ட இடங்களில் ஒரே நாள் இரவில் இரண்டு தேங்காய் கடைகள், மளிகை கடை, பல் ஆஸ்பத்திரி, பேன்சி கடை டீ கடை உள்ளிட்ட 6 இடங்களில் பூட்டுக்களை உடைத்து மர்ம நபர்கள் தொடர் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. மேலும் திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்கள் பெரும்பான்மையான கடைகளில் எதிர்பார்த்து வந்த பொருள்கள் எதுவும் கிடைக்காத சூழ்நிலையில் மயிலாடி மரச்செக்கு எண்ணெய் கடையில் இரண்டு லிட்டர் நல்லெண்ணெய், ஒரு லிட்டர் தேங்காய் எண்ணையும் திருடிவிட்டு, மருங்கூர் வேப்பமூடு சந்திப்பு அருகில் உள்ள ராஜசேகரின் தேங்காய் கடையில் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து அங்கிருந்து ரூபாய்12,500 யை திருடிச் சென்றதும் தெரியவந்தது.
மேலும் இந்தத்திருட்டு குறித்து ராஜசேகர் அஞ்சுகிராமம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் அஞ்சுகிராமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர் திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். தொடர்ந்து அந்த பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி அதன் அடிப்படையில் தனிப்படை போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். தொடர் திருட்டுச் சம்பவங்களினால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.