போராட்டக்களமாக மாறும் சுங்கச்சாவடி… ப்யூஸ் போன பேச்சுவார்த்தை…ஒப்பந்தகாரர் பிடியில் நிர்வாகம்..? என்ன செய்யப் போகிறது அரசு .

கப்பலூர் டோல்கேட்டில் வாகனங்களுக்கு வசூல் வேட்டை போராட்டக்களமாக மாறிய சுங்கச்சாவடி

மதுரை திருமங்கலம் அருகே கப்பலூர் சுங்கச்சாவடி கடந்த 12 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. கப்பலூர் சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகனங்கள்,செங்கோட்டை, தென்காசி,ராஜபாளையம் டி கல்லுப்பட்டி , பேரையூர் வழியாக வந்து செல்லும் வாகனங்கள் இரண்டு கிலோ மீட்டர் தூரம் மட்டுமே நான்குவழிச்சாலையை பயன்படுத்துவதால் சுங்கச்சாவடியினர் கட்டணம் கேட்டு அடாவடி வசூல் செய்து வருவதாலும் நகராட்சி எல்லையிலிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவிலும், மாநகராட்சி எல்லையிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவிலும் சுங்கச்சாவடி அமைக்கக்கூடாது என்ற விதிகளை மீறி சட்டவிரோதமாக செயல்படும் சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள், நாம் தமிழர் கட்சியினர் உட்பட ஏராளமான அமைப்புகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

வட இந்தியர்கள் அடாவடி:

அப்போராட்டத்தின் விளைவாக உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கக்கூடாது என உயர்நீதிமன்றம் உத்திரவிட்டது. ஆனாலும் சுங்கச்சாவடி நிர்வாகம் வடஇந்தியர்கைளை பணியில் அமர்த்தி உள்ளூர் வாகன ஓட்டிகளிடம் அடாவடி செய்து வசூலில் ஈடுபட்டு வந்தனர். இதையடுத்து மீண்டும் மீண்டும் சுங்கச்சாவடி போராட்டக்களமாக மாறியது.

மாவட்ட ஆட்சியர் உத்தரவு:

பல்வேறு கட்ட போராட்டத்திற்கு பின் கடந்த அக்டோபர் மாதம் 20ஆம் தேதி முன் மதுரை மாவட்ட ஆட்சியர், சுங்கச்சாவடி நிர்வாகம் மற்றும் சுங்கச்சாவடி எதிர்ப்புக்குழுவினருன் இடையே நடந்த பேச்சுவார்த்தையின் போது திருமங்கலம்,கல்லுப்பட்டி, பேரையூர், ராஜபாளையம் மார்க்கமாக செல்லும் வாகனங்கள் உள்ளிட்ட சுற்றுப்புற உள்ளூர் வாகனங்களுக்கும் கட்டணம் வசூலிக்கக் கூடாது என மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் அறிவித்திருந்தார்.

மாவட்ட ஆட்சியர் உத்தரவை மதிக்காத நிர்வாகம்:

ஏற்கனவே பல்வேறு விதியை மீறி செயல்படும் சுங்கச்சாவடி நிர்வாகம் தற்போது மதுரை மாவட்ட ஆட்சியரின் உத்தரவை மீறி தே.கல்லுப்பட்டி,பேரையூர் ராஜபாளையம் மார்க்கமாக வந்து செல்லும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலித்ததைக் கண்டித்து கடந்த நவம்பர் மாதம் 13ம் தேதி வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை சுங்கச்சாவடியில் நிறுத்தி முற்றுகைப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வாகன ஓட்டிகள் ஆவேசம்:

இரண்டு மணி நேரத்திற்கு மேலாக போராட்டக் களமாக மாறிய சுங்கச்சாவடிக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு வாரத்தில் முடிவை அறிவிப்பதாக தெரிவித்ததை அடுத்து போராட்டக்குழுவினர் களைந்து சென்றனர். இந்நிலையில் வரும் நவம்பர் மாதம் 24ம் தேதி முதல் திருமங்கலம், தக.ல்லுப்பட்டி மற்றும் பேரையூர் பகுதியில் இருந்து வந்து செல்லும் வாகனங்களுக்கு கட்டாயம் கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் அனைத்து வாகனங்களுக்கும் ‘பாஸ்டேக்’ கட்டாயம் எனவும் அறிவித்தது சுங்கச்சாவடி நிர்வாகம். இதையடுத்து கப்பலூர் சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகனத்திற்கு கட்டண விலக்கு இருந்தும் வாகன ஓட்டிகளிடம் அடாவடி வசூலில் ஈடுபட்டதால் வாகன ஓட்டிகள் ஆவேசம் அடைந்துள்ளனர்.

2 மணி நேரத்திற்கு மேல் நடந்த போராட்டம்:

இதன் காரணமாக நேற்று திருமங்கலம் நகர்,உச்சப்பட்டி,கப்பலூர், கருவேம்பட்டி,கூத்தியார்குண்டு, தோப்பூர்,தே.கல்லுப்பட்டி,பேரையூர் விருதுநகர் மாவட்டத்தை சார்ந்த அழகாபுரி,ஸ்ரீவில்லிபுத்தூர்,ராஜபாளையம் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த தென்காசி ஆலங்குளம்,கடையநல்லூர்,குற்றாலம் செங்கோட்டை ஆகிய பகுதியின் வாகன ஓட்டிகள் 500க்கும் மேற்பட்டோர் சுங்கச்சாவடியில் அமர்ந்து இந்தியதேசியக் கொடியுடன் முற்றுகை போராட்டத்தின் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் இரண்டு மணி நேரத்திற்கு மேல் சுங்கச்சாவடி வழியே போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

வாகனங்களுக்கு தனி வழி:

காவல்துறை முன்னிலையில் போரட்டக்குழுவினரும் சுங்கச்சாவடி நிர்வாகமும் நடத்திய பேச்சுவார்த்தையின் போது திருமங்கலம் மற்றும் சுங்கச்சாவடிையை சுற்றியுள்ள உள்ளூர் வாகனங்களுக்கும் NH208 சாலையில் பயணிக்கும் தே.கல்லுப்பட்டி, ராஜபாளையம் மார்க்கம் வழியே சென்று வரும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கக்கூடாது எனவும் கட்டணம் இல்லாமல் செல்ல கூடிய வாகனங்களுக்கு சுங்கச்சாவடியில் தனி வழியை ஏற்படுத்தி தர வேண்டும் எனவும் போராட்டக்குழுவினர் கோரிக்கை வைத்தனர். உள்ளூர் வாகனங்கள் மற்றும் ராஜபாளையம் சென்று வரக் கூடிய வாகனங்கள் தங்களது அடையாள அட்டைையை காண்பித்து கட்டணமின்றி செல்லலாம் என பேச்சு வார்த்தையின் போது சுங்கச்சாவடி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

மீண்டும் வசூல் வேட்டை:

ஆனால் போராட்டம் முடிந்த பின் அவ்வழியே சென்று வந்த உள்ளூர் வாகனங்களுக்கும் தே.கல்லுப்பட்டி,ராஜபாளையம் மார்க்கமாக செல்லக்கூடிய வாகனங்களுக்கும் மீண்டும் கட்டணம் வசூலிக்கப்படுகின்றனர்.

பகல் கொள்ளை-அச்சப்படும் நிர்வாகம்:

போராட்டத்தைக் கலைப்பதற்காக பொய்யான அறிவிப்புகளை சுங்கச்சாவடி நிர்வாகம் தெரிவிக்கும், மதுரை முதல் கன்னியாகுமரி வரை சாலை பராமரிப்பு பணிக்கு என 30 வருடத்திற்கு தனியார் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் இன்றி வாகனங்களை அனுப்பினால் மதுரை முதல் கன்னியாகுமரி சாலை பராமரிப்பு பணிக்காக புதிய டெண்டர் எடுக்கப்பட்டவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அச்சப்படுகிறது.மக்கள் நலனில் அக்கறை கொண்டு செயல்படாமல் தனிப் பெரும்முதலாளிகளின் தேவைக்கு சுங்கச்சாவடி நிர்வாகம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.உள்ளூர் வாகனங்கள் நாங்கள் நான்கு வழிச்சாலையை பயன்படுத்த வேண்டிய தேவையே இல்லை. அதேபோல் ராஜபாளையம் மார்க்கத்தில் இருந்து மதுரை வந்து செல்லக்கூடிய வாகனங்கள் இரண்டு கிலோமீட்டர் மட்டுமே நான்கு வழி சாலைையை பயன்படுத்துகிறார்கள், அதற்கும் பகல் கொள்ளை அடிப்பதற்கு சமமாக கட்டணம் வசூலித்து அடாவடி வேலையை செய்துவருகிறது சுங்கச்சாவடி நிர்வாகம் என்று உள்ளூர் வாகன ஓட்டிகள் வேதனை தெரிவித்து வருகின்றனர். சுங்கச்சாவடியை அகற்றக்கோரி தொடர் போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கும் நிலையில்தமிழக அரசும் இந்திய ஒன்றிய அரசு என்ன செய்யப் போகிறது என்று சமூக ஆர்வலர்களும் நிலவழி போக்குவரத்து அமைப்பினரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!