கண்மாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி காஷ்மீர்-கன்னியாகுமரி நான்கு வழிச்சாலையில் 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் சாலை மறியல் போராட்டம்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் நிலையூர் பெரிய கண்மாய் பகுதியில் அமைந்துள்ள ஹார்விபட்டியிலிருந்து-தனக்கன்குளம் பகுதி வரை ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி விவசாயிகள் 300க்கும் மேற்பட்டோர் காஷ்மீர்-கன்னியாகுமரி நான்கு வழி தேசிய நெடுஞ்சாலையில் கூத்தியார்குண்டு விலக்கல் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருப்பரங்குன்றம் அருகே உள்ள 742 ஏக்கர் பரப்பளவுள்ள, சாத்தனூர் அணையை விட 7 மடங்கு கொள்ளளவு கொண்ட நிலையூர் பெரிய கண்மாய்க்கு வைகை ஆற்று பாசன நீர் ஆண்டுதோறும் திறந்துவிடப்படும். கண்மாயின் மூலம் கூத்தியார்குண்டு கருவேலம்பட்டி, சம்பக்குளம்,சூரக்குளம்,சொக்கநாதன்பட்டி , கப்பலூர், புளியுங்குளம், விடத்தகுளம், விரிசங்குளம், எட்டுநாழி உள்ளிட்ட 20 கிராமங்களில் சுமார் 3500 ஏக்கருக்கு மேல் பாசன வசதி பெறுகின்றது.
இந்த நிலையில் 742 ஏக்கர் பரப்பளவு உள்ள பொதுப்ணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள கண்மாயில் சட்டத்திற்கு புறம்பாக வருவாய்த்துறையினர் பட்டா வழங்கியதாலும், மின்சாரத்துறையினர் மின்சாரம் வழங்கியதாலும்,கட்டிடம் கட்ட அனுமதி அளித்ததாலும்,100 ஏக்கருக்கு மேல் தனக்கன்குளம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் ஆக்கிரமிப்பு குடியிருப்புகள், பள்ளிகள்,தொழிற்சாலைகள் என பல்வேறு கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளதால் கண்மாயில் நீர் நிரம்பும்போது குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் செல்வதால் அப்பகுதியில் குடியிருப்பவர்கள் தண்ணீரை அப்புறப்படுத்த வேண்டும் என அதிகாரிகளிடம் கோரிக்கை விடுப்பதால் அதிகாரிகள் விவசாயத்திற்கு வரக்கூடிய நீரை கொள்ளளவை எட்ட விடாமல் தடுத்து நிறுத்தி வருகின்றனர்.

இதற்கு கண்டனம் தெரிவித்த கூத்தியார்குண்டு-கருவேலம்பட்டி விவசாயிகள் நீர்பிடிப்பு பகுதிகளில் வீடுகள் கட்ட அனுமதித்ததால் ஆண்டுதோறும் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் செல்வதை காரணம் காட்டி அதிகாரிகள் கண்மாயில் உள்ள தண்ணீரை திறந்து விடுவதாகவும் இதனால் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாயம் பாதிக்கப் படுவதாகவும் கூறினர்.
தொடர்ந்து அதிகாரிகளிடம் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி பல முறை கோரிக்கை விடுத்தும், ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி உயர்நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்தும் வருவாய்த்துறை, பொதுப்பணித்துறையும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என ஆவேசம் அடைந்த கூத்தியார்குண்டு-கருவேலம்பட்டி மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் காஷ்மீர்-கன்னியாகுமரி நான்கு வழிச்சாலையில் கூத்தியார்குண்டு கிராம பிரதான சாலையான நான்குவழிச்சாலையில் 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் நெல்நாற்றுகளுடன்,ஏர்க்கலைப்பை மற்றும் வாழைக் கன்றுடனும் அமர்ந்தும்,படுத்துக் கொண்டும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

தொடர்ந்து கண்மாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் எனவும் “கண்மாயை காணோம்” எனவும் கோஷங்க களை எழுப்பினர். இந்நிலையில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டம் குறித்து தகவல் அறிந்து வந்த ஆஸ்டின்பட்டி காவல் நிலைய போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் திருமங்கலம் DSP சிவகுமார் மற்றும் திருப்பரங்குன்றம் வட்டாட்சியர் சரவணன், ஆஸ்டின்பட்டி காவல்நிலைய சார்பு ஆய்வாளர்கள் சாமியப்பன், பிச்சைப்பாண்டி உள்ளிட்டோர் பேச்சு வார்த்தை நடத்தியதில் உரிய அதிகாரிகள் வரும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் எனக்கூறி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து., போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் திருமங்கலம் DSP சிவகுமார் ஆஸ்டின் பட்டி காவல் நிலைய சார்புஆய்வாளர்கள் மற்றும் திருப்பரங்குன்றம் வட்டாட்சியர் சரவணன் இந்தக்கண்மாயில் பல்வேறு துறை சார்ந்தவர்கள் சம்பந்தப்பட்டிருப்பதால் (பீஸ் கமிட்டி) அமைதிப்பேச்சுவார்த்தை குழு ஏற்படுத்தி பிரச்சனைக்கு தீர்வு காணலாம் என போலிசார் மற்றும் வட்டாட்சியர் தெரிவித்த நிலையில், போராட்டத்தை களைப்பதற்காக நீங்கள் பல காரணங்களை கூறி விட்டு பின்பு வழக்கம் போல கண்மாயை ஆக்கிரமித்து பல கட்டிடங்கள் கட்டிக் கொண்டுதான் இருப்பார்கள்,தண்ணீர் திறந்து விட மாட்டார்கள் என வட்டாட்சியரிடம் விவசாயிகள் குறை கூறினர்.

இதையடுத்து சமாதான பேச்சு வார்த்தைக்கு வட்டாட்சியர் அழைத்ததன் பேரின் திருநகரில் உள்ள திருப்பரங்குன்றம் வட்டாட்சியர் அலுவலகத்தில் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட நிலையூர் 1 & 2 பிட் ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டதில் ஏற்கனவே வழங்கப்பட்ட நீர்ப்பிடி பட்டாக்களை ரத்து செய்து மீண்டும் கண்மாயை மறு நிர்ணயம் செய்யப்படும், புதிதாக கட்டப்படும் கட்டிடங்கள் ஏதும் கட்டக்கூடாது எனவும் நிலையூர் கண்மாய் முழுமையாக நிரப்பவும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டத்தில் முடிவு செய்தனர்.

சமாதான பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் விவசாயிகள் தங்களது ஒரு மணி நேர போராட்டத்தை கைவிட்டனர். இந்த போராட்டத்தால் காஷ்மீர்-கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.