
நமது முன்னோர்கள் பல்வேறு திருவிழாக்களையும் பண்டிகைகளையும் உருவாக்கி வைத்துள்ளார்கள். இந்த திருவிழாக்கள் கூறக்கூடிய ஜோதிட செய்திகள் இதனுள் புதைந்திருக்கின்றது.
எந்த ஒரு பண்டிகையும் ஜோதிடத்திற்கு அப்பால் இருப்பதில்லை. ஒவ்வொரு பண்டிகையும் ஒவ்வொரு விதமான தோஷங்களை நீக்கி தருகிறது என்பது அற்புதமான உண்மையாகும்.
உதாரணமாக தைப்பூசம்.
தைப்பூசம் ஒருவருடைய வாழ்க்கையில் உண்டாக்கக்கூடிய மாற்றங்கள் என்ன என்பதைப் பற்றிய சிறு ஜோதிட சிந்தனையை பார்ப்போம்.
தைப்பூசம் வரக்கூடிய தை மாதம் என்பது மகர மாதம் ஆகும். சூரியன் மகர ராசியிலே இருக்கும் பொழுது சந்திரன் பூசம் நட்சத்திரத்திலே ஆட்சி பெற்று இருக்க கூடிய ஒரு முகூர்த்த வேலை தான் தைப்பூசம் ஆகும்.
கால புருஷ தத்துவ படி நான்காம் அதிபர் நான்காம் இடத்தில் ஆட்சி பெற்று இருப்பதும்,
பதவி புகழ் கௌரவம் மனதிற்கு இனிய சம்பவங்களை பெறுதல் ஆகிய பலன்களை தரும் சூரியன் தனது வீட்டிற்கு ஆறாம் இடத்தில் மறைந்து, கடினமான உழைப்பை வெளிப்படுத்தக் கூடிய கால புருசனுக்கு பத்தாம் இடமான மகரத்தில் இருப்பதும், ஒருவர் செய்யக்கூடிய தொழிலில், ஜீவனத்தில் சங்கடங்களை உருவாக்கக்கூடிய அமைப்பாக இருக்கிறது.
இதனை சமாளிக்க கூடிய ஆற்றலை ஒருவர் பெற மகரத்தில் உச்சம் பெறக்கூடிய செவ்வாய் பகவானின் அருளாசி தேவை.
இதன் படி செவ்வாயினுடைய அதிதேவதை முருகன். செவ்வாய்க்கான இடம் குன்று. ஆகவே தான் குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடமாக உள்ளது.
தைப்பூச திருநாளன்று முருகப்பெருமானை வணங்குபவர்கள் தனது முன் ஜென்ம வினை காரணமாக தனது கர்மாவில் உண்டாக கூடிய சங்கடங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம். மேலும் தொழில் விஷயத்தில் மனம் மகிழும் படியான புகழ் கவுரவம் அந்தஸ்து உயர்வு இவைகளை பெறலாம்.
இதை ஆன்மீகத்துடன் இணைத்து திருவிழாவாக செய்யும் பொழுது குரு பகவானையும் பலப்படுத்துகிறோம்.
காலபுருசனின் நான்காவது வீடான கடகத்தில் குரு உச்சம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
எப்படி பார்த்தாலும் தைப்பூச வழிபாடு என்பது நான்காம் இடத்தில் குரு சந்திர யோகத்தையும், பத்தாவது இடத்தில் செவ்வாய் சூரியன் இணைவையும் தந்து, ஒரு உன்னதமான வெற்றியையும் மகிழ்ச்சியும் ஆனந்தத்தையும் தரும் என்பது இதன் மூலம் அறியலாம்.
செந்தில்குமார் – ஜோதிட ஆலோசகர்
9380419671
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.