கல்வி உரிமைச் சட்டத்தில் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் ஜூலை 5 முதல் ஆரம்பம்; ஆன்லைனில் rte.tnschools.gov.in என்ற இணையதள பக்கத்திற்குச் சென்று விண்ணப்பிக்கலாம்.
கல்வி உரிமைச் சட்டம் என்பது 6 முதல் 14 வயது குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாய கல்வியை வழங்க வழிவகை செய்யும் சட்டமாகும். இந்த சட்டத்தின் கீழ், ஏழை மாணவர்கள் தனியார் பள்ளிகளில் இலவசமாக படிக்கலாம்.
சமூகத்தில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகள் தனியார் பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்பில் (எல்கேஜி அல்லது முதல் வகுப்பு) அதாவது பள்ளி எந்த வகுப்பில் ஆரம்பிக்கிறதோ அந்த வகுப்பில் சேரலாம். இதற்காக, ஒவ்வொரு தனியார் பள்ளியும் தங்கள் பள்ளியில் உள்ள மாணவர் சேர்க்கையில் 25% இடங்களை கல்வி உரிமை சட்டத்திற்காக ஒதுக்க வேண்டும். இந்த இடங்களில் சேரும் மாணவர்களுக்கான கட்டணத்தை அரசே செலுத்திவிடும்.
கல்வி உரிமைச் சட்டத்தில் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் ஜூலை 5 முதல் ஆரம்பமாகியுள்ளது. இதற்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். அதற்கு rte.tnschools.gov.in என்ற இணையதள பக்கத்திற்குச் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
தேவையான ஆவணங்கள்:
மாணவரின் புகைப்படம்
மாணவரின் பிறப்புச் சான்றிதழ்
பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆதார் அல்லது குடும்ப அட்டை
வருமான சான்றிதழ் (நலிவடைந்த பிரிவினர்)
சாதி சான்றிதழ் (வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினர்)
தகுதிகள்
பெற்றோரின் ஆண்டு வருமான 1 லட்சம் ரூபாய்க்கும் குறைவாக இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும்போது வருமான சான்றிதழ் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த 2021 கல்வியாண்டுக்கு எல்கேஜிக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் 31-07-2017 முதல் 31-07-2018 க்குள் பிறந்திருக்க வேண்டும். முதல் வகுப்புக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் 31-07-2015 முதல் 31-07-2016 க்குள் பிறந்திருக்க வேண்டும்.
RTE விண்ணப்பிப்பது எப்படி?
- முதலில் பள்ளிக்கல்வித் துறையின் http://tnschools.gov.in/ என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
- அங்கு, சேவை பிரிவில் உள்ள RTE என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
- அடுத்து http://rte.tnschools.gov.in/tamil-nadu என்ற பக்கத்திற்கு செல்வோம்.
- இங்கு ‘Start Application’ என்பதை கிளிக் செய்த உடன் விண்ணப்ப பக்கம் வரும்.
- விண்ணப்பத்தில் மாணவரின் விவரங்கள், பெற்றோர் விவரங்கள், முகவரி, பிறப்பு சான்றிதழ், முகவரி சான்றிதழ், போன்றவற்றை நிரப்ப வேண்டும்.
- அடுத்து உங்கள் முகவரிக்கு அருகில் உள்ள, நீங்கள் சேர்க்க விரும்பும் தனியார் பள்ளியைத் தேர்வு செய்ய வேண்டும்.
- பள்ளியைத் தேர்வு செய்து விண்ணப்பத்தை முழுவதுமாக நிரப்பிய பிறகு சமர்ப்பி என்பதை அழுத்தவும்.
- இப்போது உங்கள் தொலைப்பேசிக்கு ஒரு பதிவு எண் குறுந்தகவல் மூலம் கிடைக்க பெறும்.
- இந்த பதிவு எண் குலுக்கலுக்கு முக்கியமானது. ஏனெனில், நீங்கள் தேர்ந்தெடுத்த தனியார் பள்ளியில் நிர்ணயிக்கப்பட்ட இடங்களை விட அதிகமான விண்ணப்பங்கள் இருந்தால், குலுக்கல் முறையி இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.
கல்வி உரிமைச் சட்டம் மூலம் விண்ணப்பிக்க ஆகஸ்ட் 3 ஆம் தேதி இறுதி நாளாகும். ஆகஸ்ட் 10 ஆம் தேதி குலுக்கல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது