
வீட்டின் சாவி கிடைக்காததால் புகைக்கூண்டு வழியே சென்ற நபர்.. மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழப்பு. பெரும் சோகம்.!!!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரத்தை சேர்ந்த பிரபாகரன் (35), மது பழக்கத்திற்கு அடிமையானவர் என கூறப்படுகிறது.
இதனால், கடந்த சில மாதங்களாக குடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் இருந்த அவரை, மனைவி விட்டு விட்டு, தந்தை வீட்டிற்கு சென்றுவிட்டார். பின்னர், மனைவியுடன் சமரசம் பேச பிரபாகரன் மாமனார் வீட்டிற்கு சென்று, காலை வீட்டிற்கு அழைத்துச் செல்லுமாறு மனைவியிடம் கூறினார். அதன் பின்னர், மதுபோதையில் தனது வீட்டிற்கு வந்த பிரபாகரன், வீட்டின் சாவி தொலைந்ததை அறிந்து குழப்பமடைந்தார்.
இதையடுத்து, வீட்டுக்குள் செல்லும் வழியாக மாடியில் உள்ள புகைக்கூண்டு வழியை தேர்வு செய்தார். புகைக்கூண்டின் மேல்புறம் அகலமாக இருந்தாலும், உள்புறம் குறுகலாக இருந்ததால், பாதி வரை சென்று மாட்டிக் கொண்டார். மதுபோதையிலிருந்த பிரபாகரன், வெளியே வர முயன்றும் சிக்கியதால் அங்கேயே போராடி அலறினார். யாரும் கவனிக்காத நிலையில், அவர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு, அங்கேயே உயிரிழந்தார்.
காலை கணவர் வராததால், மனைவி மதியம் வீட்டிற்கு வந்து, தண்ணீர் வாளிக்குள் இருந்த சாவியை எடுத்து கதவைத் திறந்தார். ஆனால் கணவர் காணாமலிருந்ததால் அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்து தேடியபோதும் கிடைக்கவில்லை. பின்னர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, புகைக்கூண்டில் சிக்கிய நிலையில் உயிரிழந்திருந்த கணவரை கண்டு அதிர்ச்சியடைந்தார். தகவல் அறிந்து வந்த மீட்பு குழுவினர் புகைக்கூண்டை உடைத்து உடலை மீட்டு காவல்துறையிடம் ஒப்படைத்தனர். இந்தச் சம்பவம், ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.