
பா.ம.க வில் இருந்து நீக்கம்… திருவண்ணாமலையில் அன்புமணி ராமதாஸ் தரிசனம்!
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் ஆகிய இருவருக்கு இடையே ஏற்பட்ட கருத்து மோதலால், கட்சி இரண்டு பிரிவுகளாக பிரிந்து செயல்பட்டு வருகிறது. 95 சதவீதத்திற்கும் மேற்பட்ட மாவட்ட செயலாளர் மற்றும் மாநில நிர்வாகிகள் அன்புமணியின் பக்கம் இருப்பதால், கட்சிக்கு அன்புமணி ராமதாஸ் தலைவராக நீடிப்பதாக அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.
அன்புமணி ராமதாசை கட்சியிலிருந்து நீக்கி ராமதாஸ் அறிவித்ததை தொடர்ந்து, அவரது மூத்த மகள் ஸ்ரீகாந்திக்கு கட்சியின் செயல் தலைவர் பொறுப்பை வழங்கினார். கட்சிக்கு அறிமுகப்படுத்தப்பட்ட சில நாட்களிலே, அவருக்கு செயல் தலைவர் பதவி அளிக்கப்பட்டது பரபரப்பு ஏற்படுத்தி இருந்தது. ஆனால் தொடர்ந்து அன்புமணி ராமதாஸ், ராமதாஸின் குற்றச்சாட்டுகளுக்கு எந்தவித பதிலும் அளிக்காமல் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.
திருவண்ணாமலையில் அன்புமணி ராமதாஸ்
அந்த வகையில் இன்று திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு, மனைவி சௌமியா அன்புமணி, தனது தங்கை கவிதா ராமதாஸ் மற்றும் இளைய மகள் சஞ்சுத்ரா ஆகியோருடன் சாமி தரிசனம் செய்தார். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சியில் ஏற்பட்டிருக்கும் பிரச்சினை, கட்சி ரீதியான கருத்து முதலாக ஒரு புறம் பார்க்கப்பட்டாலும், அன்புமணி மீது அரசியலை தாண்டி ராமதாஸ் தனிப்பட்ட முறையில் ஊடகங்கள் முன்னிலையில் விமர்சித்து இருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக குடும்பத்தினர் தொடர்ந்து மௌனம் காத்து வந்தனர். இந்தநிலையில், கவிதா தான் அன்புமணி உடன் இருப்பதை வெளிப்படுத்தும் விதமாக, அன்பு மணியுடன் இணைந்து சாமி தரிசனம் மேற்கொண்டதாக கூறப்படுகிறது. ஒருபுறம் ஸ்ரீகாந்தி ராமதாசுடன் இருக்கும் நிலையில், கவிதா அன்புமணியுடன் கைகோர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.