விவசாயிகள் போர்வையில் நீர் நிலைகளில் மண் எடுத்துச் செல்வதில் நடைபெறும் மெகா முறைகேடு… மாவட்ட ஆட்சியருக்கு தெரிந்துதான் இச்செயல் அரங்கேறி வருகிறதா?

தேனி மாவட்ட விவசாயிகளின் நலனில் அக்கறை கொண்ட தேனி மாவட்ட நிர்வாகமெனில், வருட கணக்கில் சமூக நல ஆர்வலர்கள் மற்றும் தனி நபர்கள் தேனி மாவட்டத்து நீர்நிலைகளில் இருந்து வரும் ஆக்கிரமிப்புகளை அகற்றிட வேண்டி பல வழக்குகள் நிலுவையிலும், ஆட்சியர், வட்டாட்சியர்களது அலுவலகம் தொட்டு நகர, பேரூர், கிராம நிர்வாக அலுவலகங்கள் வரை நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு சம்பந்தமான பல்வேறு புகார் மனுக்கள் பண்டல் கணக்கினில் குவித்து வைக்கப்பட்டு இருப்பதற்கு முதலில் தீர்வு கண்டு, நீர்நிலைகளை மீட்டெடுத்து, விவசாயிகளின் நலன் தான் நமக்கு முக்கியமென நிரூபித்துக் காட்டுங்கள் பார்ப்போம் என இயற்கை நல ஆர்வலர்கள் கேள்வி?

தேனி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தங்களின் விவசாய நிலங்களை மேம்படுத்துவதற்கு பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கண்மாய் மற்றும் குளங்களில் வண்டல் மண் எடுத்துக் கொள்ள தமிழக அரசு அனுமதி வழங்கிய நிலையில் தேனி மாவட்ட ஆட்சியர் சார்பாக கடந்த மார்ச் 18 அன்று விவசாயிகள் வண்டல் மண் எடுத்து பயனடைய வேண்டி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதனடிப்படையில் வண்டல் மண் தேவைப்படும் விவசாயிகள் அதற்கான உரிய ஆவணங்களுடன் கடந்த மார்ச 21ம் தேதியன்று பெரியகுளம் கோட்டத்திற்குட்பட்ட ஆண்டிபட்டி பெரியகுளம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகள் தேனி வட்டாட்சியர் அலுவலகங்களிலும், உத்தமபாளையம் கோட்டத்திற்குட்பட்ட விவசாயிகள், உத்தமபாளையம் மற்றும் போடிநாயக்கனூர் வட்டாட்சியர் அலுவலகங்களிலும் கடந்த மார்ச் 24ம் தேதியன்று விண்ணப்பிக்கலாம் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருந்தார்.

இவையெல்லாம் ஒருபுறம் இருக்க, தேனி மாவட்டத்தை பொறுத்தவரை ஒரு விவசாயி உண்மையாகவே தன் நிலத்தை மேம்படுத்துவதற்குத்தான் அந்த மண்ணை கொண்டு செல்கிறானா?அதன் வரைமுறை தான் என்ன? தமிழக அரசினைத் தொடர்ந்து, கலெக்டர் கொடுக்கின்ற முறையற்ற அனுமதி ஊழல் செய்வதற்கு வழிவகுப்பதோடு, மேற்கொண்டு விஞ்ஞானபூர்வமான ஊழலுக்குத்தான் இத்திட்டமே செயல்படுத்தப்பட்டுள்ளதா?

மேலும்,தேனி மாவட்டத்தை பொறுத்தவரை எத்தனை விவசாயி மண்ணை எடுத்து நிலத்தை சரி செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது?மேலும்,குளத்தை தூர்வாரி கரைகளை பலப்படுத்துவதாக கூறி குளத்து மண்ணை ஏன் வெளியே எடுத்துச் செல்ல வேண்டும்?* *சுருங்கச் சொல்ல வேண்டுமானால், நீர் நிலைகளில் மண் எடுப்பு மற்றும் அதனைத் தொடர்ந்த பயன்பாடு என்பது விவசாயிகள் என்ற போர்வையில் “விவசாயிகளின் நலன் காக்க வேண்டி” என்ற ஒற்றைச் சொல்லை தாரக மந்திரமாக சொல்லிக்கொண்டு, ஆளும்/எதிர் அரசியல் பின்புலம் வாய்ந்தவர்கள் டிராக்டர்,டிப்பர்,லாரி உள்ளிட்ட வாகனங்கள் வைத்திருப்பவர்கள் தான் வியாபார நோக்கில்,துறை சார்ந்தவர்களுக்கு ஏதோ ஒரு விதத்தில் சைகை காட்டி,அதிக அளவில் மண்ணை அள்ளி இலாபம் ஈட்டும் பொருட்டு விற்பனை செய்தும் வருகிறார்களே தவிர,**உண்மையான விவசாயிகள் யாரும் இத்திட்டத்தின்படி பயனடைந்ததாக தெரியவில்லை.

மாவட்ட ஆட்சியர் அவர்களே, உங்களது மனசாட்சியை கொஞ்சம் கேட்டுச் சொல்லுங்கள், தேனி மாவட்டத்தில், எந்த விவசாயியாவது மண்ணெடுத்து தன்னிலத்தை சீர் செய்கிறானா, இல்லையா என்று..?

மொத்தத்தில், தமிழக அரசினைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தின் இந்த மண் எடுப்பு திட்டமானது, முழுக்க முழுக்க விவசாயிகளின் நலன் காக்க வேண்டியே என விவசாயிகளின் பெயரை சொல்லி மண் வளம் சுரண்டப்படுவதாகவே தெரிகிறது என அடுக்கடுக்கான கேள்விக்கணைகளை தொடுத்து இயற்கை நல ஆர்வலர்கள் குற்றச்சாட்டுடன் தங்களது ஆதங்கத்தை தெரிவித்து வருகின்றனர். மேலும், இதுகுறித்து பெண் விவசாயி ஒருவரிடத்தில் நாம் கேட்டபோது,அவரும் நாம் சொன்ன மேற்கண்ட குற்றச்சாட்டுகளை முன்மொழிந்ததோடு, தேனி மாவட்ட கிராம நிர்வாக அலுவலகங்கள் தொட்டு வட்டாட்சியர் அலுவலகம் வரை விவசாயி அல்லாதவர்கள் தான் விவசாயி என்ற போர்வையில், இத்திட்டத்தை தங்களுக்கு சாதகமாக்கி மண்களை வியாபாரமாக்கி பணம் ஈட்டி வருகின்றனர் என்ன நம்மிடத்தில் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும்,குறிப்பாக விவசாய நிலங்களே இல்லாதவர்கள் தான் இத்திட்டத்தை பயன்படுத்தி, மண்ணை எடுத்து பணம் பார்த்து வருகின்றனர் எனச் சொன்னால் அது மிகப் பொருந்தும். அதுசமயம்,தேனி மாவட்ட ஆட்சியர் நீர் நிலைகளில் இந்த மண்ணெடுப்பு திட்டம் சரியான முறையில் முன்னெடுத்து சரியான நபர்களான விவசாயிகள் தான் பயன்படுத்தி வருகிறார்களா, என்பதை களஆய்வு செய்து, தீர விசாரித்து விதிமுறைகளை மீறிய துறை சார்ந்த அலுவலர்களுக்கு தகுந்த தண்டனையும் வழங்கி,தேனி மாவட்டத்தில் நீர்நிலைகளில் உள்ள மண்வளங்களை காக்க வேண்டுமென தேனி மாவட்ட அன்னமிடும் விவசாயப் பெருங்குடி மக்களுக்காகவும், வளரும் நமது சந்ததிகளுக்காகவும், சந்ததிகளின் பந்தங்களுக்காகவும் மாவட்ட இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இறுதியாக, தமிழகம் முழுவதும் இத்திட்டத்தை ஒரு சில விவசாயிகளை தவிர்த்து, தமிழகத்தில் காலம் காலமாக பணம் ஈட்டும் நோக்கில் இதையே தொழிலாக நடத்தி மண் வளத்தை சுரண்டும் பெருச்சாலிகள், விவசாயிகள் என்ற போர்வையில் மண் வளங்களை சுரண்டுதலுக்கு தமிழக முதல்வர் அவர்கள் உரிய. நடவடிக்கை எடுத்து முற்றுப்புள்ளி வைத்திட உத்திரவிடுவாரா? மாறாக,தற்போது தமிழகத்தில் பிரதான எதிர்கட்சியும் ஆளும் தமிழக முதல்வர் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தி வருபவருமான தமிழக பாஜக-வின் தலைவர் அண்ணாமலை அவர்களாவது உலகிற்கே அன்னமிடும் விவசாயம் என்ற மாய பிம்பத்தின் மூலமாக இயற்கை வளமான மண் சுரண்டப்படுதலை கட்டுக்குள் கொண்டு வர பிள்ளையார் சுழி இடுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்…. எது எப்படியோ, ஏற்கனவே, கேரளாக்காரன் நமது இயற்கை வளத்தை எல்லாம் எடுத்துச் செல்ல சிவப்பு கம்பளம் விரித்து வைத்து வருகின்றோம் என்பது ஒரு புறமிருக்க, இதே நிலை இனியும் நீடிக்குமெனில் தமிழகத்தில் வளரும் நமது சந்ததியினருக்கு காடு,கரடு,மரம், மண் (செம்மண், சரளைமண், சவுடுமண், கரிசல்மண், வண்டல்மண்) கல், கருங்கல் உள்ளிட்ட இயற்கை வளங்களை எல்லாம் ஏதாவது ஒரு கண்காட்சிக்கு பயணச்செலவுடன் (அப்போது பணமும் நம்மிடம் இருக்கப் போவதில்லை) அழைத்து சென்று, கட்டணம் அளித்து பார்த்து அதை யாராவது சொல்ல கேட்டு அறிந்து, தெரிந்தால் மட்டுமே முடியும் எனும் நிலமையும், காலமும் தொட்டுவிடும் தூரத்தில் தான் இருக்கிறதென்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!