இலங்கைக்கு கடத்த இருந்த ரூ.300 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல்: இரண்டு பேர் கைது!

இலங்கைக்கு கடத்த இருந்த ரூ.300 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல்: இரண்டு பேர் கைது!

ராமநாதபுரம் அருகே இலங்கைக்கு கடல் வழியாக கடத்த சரக்கு வாகனத்தில் கொண்டுவரப்பட்ட ரூ.300 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல்… இருவர் கைது மேலும் ஒருவருக்கு வலை வீச்சு… கியூ பிரிவு மற்றும் போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசார் இணைந்து அதிரடி நடவடிக்கை…

ராமநாதபுரம் மாவட்ட கடற்கரை இலங்கைக்கும் மிக அருகில் இருப்பதால் கடல் வழியாக இலங்கைக்கு நாட்டுப்படகுகளில் கஞ்சா, மெத்தப்பெட்டமன், ஹெராயின், கொக்கைன் உள்ளிட்ட உயர்ரக போதை பொருட்கள் அதிகளவு கடத்தப்பட்டு வருகிறது.

இந்த கடத்தல் சம்பவங்களை தடுக்க இந்திய இலங்கை சர்வதேச கடல் எல்லையில் இந்திய இலங்கை கடற்படையினர் மற்றும் கடற்கரை ஓரங்களில் மரைன் போலீசார், மத்திய, மாநில உளவுத்துறை, சுங்கத்துறை உள்ளிட்டோர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இலங்கைக்கு கஞ்சா, மெத்தப்பெட்டமன் உள்ளிட்ட போதை பொருட்களை பாம்பன் அடுத்த மண்டபம் தெற்கு கடல் பகுதியில் இருந்து கடல் வழியாக கடத்துவதற்கு சரக்கு வாகனத்தில் சாலை மார்க்கமாக போதைப்பொருட்கள் ராமநாதபுரம் வழியாக மண்டபம் நோக்கி கொண்டுவரப்படுவதாக ராமநாதபுரம் கியூ பிரிவு ஆய்வாளர் ஜீவமணிக்கு கிடைத்த நம்பகத்தன்மையான தகவலின் அடிப்படையில் கியூ பிரிவு மற்றும் போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசார் இருவரும் இணைந்து ராமநாதபுரம் அடுத்த மதுரை தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை உள்ள காரிக்கூட்டம் பேருந்து நிலையத்தில் வாகன சோதனை நடத்தினர்.

அப்போது அவ்வழியாக மண்டபம் நோக்கி சென்ற ஈகோ சரக்கு வாகனம் ஒன்றை நிறுத்தி வாகனத்தில் இருந்தவர்களிடம் விசாரித்த போது அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகமடைந்த கியூ பிரிவு மற்றும் போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசார் வாகனத்தின் இருக்கைகளை தூக்கி சோதனை செய்து பார்த்த போது அதில் மெத்தப்பெட்டமன், ஹெராயின், கஞ்சா உள்ளிட்ட உயர் ரக போதைப் பொருட்கள் இருந்தது தெரிய வந்தது.

இதனையடுத்து இருவரையும் வாகனத்துடன் பிடித்து ராமநாதபுரம் ஈசிஆர் ஜங்ஷன் பகுதியில் உள்ள ராமநாதபுரம் கியூ பிரிவு அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

கியூ பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில் ஆந்திராவிலிருந்து போதை பொருட்கள் சாலை மார்க்கமாக சென்னை கொண்டுவரப்பட்டு பாதுகாப்பாக அவரு இடத்தில் வைத்திருந்ததாகவும் பின்னர் சென்னையில் இருந்து தாங்கள் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு மண்டபம் நோக்கி கொண்டு சென்ற போது பிடிபட்டதாக தெரிவித்தனர்.

மேலும் இந்த போதைப் பொருட்கள் அனைத்தும் மண்டபம் தெற்கு கடல் வழியாக இலங்கைக்கு நாட்டுப்படகில் கடத்த திட்டமிட்டு இருந்தது தெரிய வந்தது.

பின்னர் வாகனத்தில் இருந்த போதை பொருட்களை எடையிட்டு பார்த்தபோது அதில் 18 கிலோ மெத்தப்பெட்டமன், 10 கிலோ ஹெராயின், 218 கிலோ கஞ்சா இருந்தது அதனை தொடர்ந்து வாகனத்தில் இருந்த மண்டபம் சிங்காரத்தோப்பு வலசை சேர்ந்த இப்ராஹிம் பாதுஷா (29), மற்றும் மண்டபம் அலங்கார தோப்பு பகுதியைச் சேர்ந்த முகைதீன் பயாஸ் (27) ஆகிய இருவரையும் கைது செய்து பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருளுடன் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைப்பதற்கான நடவடிக்கைகளை கியூ பிரிவு மற்றும் போதை பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்

இந்த கடத்தல் சம்பவத்தின் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான மண்டபத்தைச் சேர்ந்த சேக் ரகுமான் என்பவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்களின் சர்வதேச மதிப்பு ரூ.300 கோடி எனவும் கடற்கரை ஓரத்தில் சட்டவிரோத கடத்தல் நடவடிக்கையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் கியூ பிரிவு போலீசார் எச்சரித்துள்ளனர்.

கடந்த 15 நாட்களில் ராமநாதபுரம் கியூ பிரிவு ஆய்வாளர் ஜீவமணி தலைமையில் ரூ.300 கோடிக்கும் அதிகமான கடத்தல் பொருட்கள் அடுத்தடுத்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!