குழந்தை பிறந்தநாளை கொண்டாடுவார்களா.? பெயர் வைத்த நாளை கொண்டாடுவார்களா.? தமிழர்களை திசை திருப்பி குழப்பும் திமுக..

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் 18.7.2022ஐ, “தமிழ்நாடு நாள்” என்று கடைபிடிக்குமாறு தனது அரசின் துறைகளுக்கு ஆணை இட்டிருக்கிறார்.

1967 சூலை 18 அன்று அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணா அவர்கள் சட்டப் பேரவையில், சென்னை மாகாணம் என்பதைத் தமிழ்நாடு என்று பெயர் மாற்ற வேண்டும் என்று இந்திய அரசைக் கேட்டுக் கொண்டு ஒரு தீர்மானத்தை முன்மொழிந்தார். அனைத்துக் கட்சியினரும் ஆதரித்து அத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அது இந்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அன்றைய இந்திய காங்கிரசு ஆட்சியாளர்கள் 1968-பிற் பகுதியில், மேற்படி தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி, குடியரசுத் தலைவர் கையொப்பம் பெற்று அரசமைப்புச் சட்டத்தில் ஏற்றினர்.

முதலமைச்சர் அண்ணா அவர்கள் 1969 தொடக்கத்தில் சென்னை கோட்டையில் “தமிழ்நாடு அரசுத் தலைமைச் செயலகம்” என்ற பெயர்பலகையைத் திறந்து வைத்து, தமிழ்நாடு என்ற பெயரைத் தொடங்கி வைத்தார்.

ஆனால், தமிழ் இன, மொழித் தாயகமாகத் தமிழ்நாடு இந்திய அரமைப்புச்சட்டப்படி அமைக்கப்பட்ட நாள் 1956 நவம்பர் 1. அந்த நாளைத் தான் தமிழ் இன உணர்வாளர்களான ம.போ.சி. போன்றோர் தமிழ்நாடு நாளாகக் கடைபிடித்து வந்தனர்.

ஐயா, நா. அருணாசலம் அவர்கள் தொடங்கி நடத்திய தமிழ்ச்சன்றோர் பேரவை, 1990களின் தொடக்கத்திலிருந்து, நவம்பர் 1-ஆம் நாளை தமிழ்நாடு நாளாகத் தமிழகப் பெருவிழாவாக சென்னையிலும் மாவட்டங்களிலும் ஆண்டு தோறும் நடத்தி வந்தார்.

எங்களது தமிழ்த்தேசியப் பேரியக்கமும் மற்றும் பல தமிழ் அமைப்புகளும் அப்போதிலிருந்து நவம்பர் 1 ஐத் தமிழ்நாடு நாளாக்க் கடைபிடித்து வருகிறோம்.

இதுவரை காலம் திமுக தமிழ்நாடு நாளை நவம்பர் ஒன்றிலும் கொண்டாடியதில்லை, இப்போது ஸ்டாலின் கூறுகிற சூலை 18-ஆம் நாளிலும் கொண்டாடியதில்லை.

ஆனால் நடப்பாண்டில் மேற்படித்தீர்மான நாளான சூலை 18ஐத் தமிழ்நாடு நாளாகக் கடைபிடிக்குமாறு மு.க. ஸ்டாலின் அறிவித்திருப்பது அதிர்ச்சியாக இருக்கிறது.

கன்னடர்களுக்கான தாயகமாக மைசூர் மாநிலம் அமைந்ந நாள் 1956 நவம்பர் 1. அதன் பிறகு பல ஆண்டுகள் கழித்தே அவர்கள் கர்நாடகம் என்று பெயர் மாற்றினர்.

ஆனால் கர்நாடக அரசு நவம்பர் 1 ஐத் தான் கர்நாடக நாளாக கடைப்பிடிக்கிறது.

வளர்ந்து வரும் தமிழின உணர்ச்சியையும் தமிழ்மொழிப் பற்றையும் திசை திருப்பித் திராவிடமாகச் சீர்குலைப்பதற்கு மு.க. ஸ்டாலின் திராவிட மாடல்படி கண்டுபிடித்தது தான் சூலை 18 தீர்மானத்திருநாள் விழா.

தமிழர், தமிழ்மொழி மறைப்புக்கான திராவிட மாடல் சூழ்ச்சியைப் புரிந்து கொண்டு, நவம்பர் 1- தான் தமிழர் தாயக நாள் – தமிழ்நாடு நாள் என்பதை ஆட்சியாளர்களும் அவர்களைச் சார்ந்தவர்களும் சீர்குலைக்க அனுமதிக்காமல் தமிழர்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன் என தமிழ்த்தேசிய பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

2 thoughts on “குழந்தை பிறந்தநாளை கொண்டாடுவார்களா.? பெயர் வைத்த நாளை கொண்டாடுவார்களா.? தமிழர்களை திசை திருப்பி குழப்பும் திமுக..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!