ஊர் பஞ்சாயத்தில், கூலித்தொழிலாளியின் காதை கடித்து துப்பிய நண்பரை போலீசார் கைது செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள பாண்டூர் பகுதியைச் சேர்ந்த சிவக்குமாரும், சந்துருவும் வேலைக்குச் சென்றுவிட்டு, ஒன்றாக வீடு திரும்பியுள்ளனர். அப்போது, இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் சண்டையாக மாறியுள்ளது.
இதுகுறித்து ஊர் முக்கியஸ்தர்களுக்கு புகார் சென்றதால், அன்று இரவு, இருவரையும் அழைத்து அவர்கள் சமரசம் செய்ய முயன்றுள்ளனர். ஊர் பஞ்சாயத்தார் முன்னிலையில், பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்தபோது, சிவக்குமாருக்கும், சந்துருவுக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.அப்போது, ஆத்திரமடைந்த சந்துரு, சிவக்குமாரின் காதை கடித்து துப்பியதாக கூறப்படுகிறது. அப்போது, சிவக்குமாரின் உறவினர் காத்திகேயன், இதனை தடுக்க முயன்றுள்ளார். அருகே கிடந்த கட்டையை எடுத்து, கார்த்திகேயனையும் சந்துரு பலமாக தாக்கியதாக தெரிகிறது. இதையடுத்து, சிவக்குமாரையும், கார்த்திக்கேயனையும் பொதுமக்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். புகாரின் பேரில், போலீசார் சந்துருவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.