
திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபத் திருவிழா… அரோகரா கோஷம் முழங்க பட்டாபிஷேகம் நடைபெற்றது.
தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கார்த்திகை தீப திருவிழாவின் முக்கிய நிகழ்வான பட்டாபிஷேக நிகழ்ச்சி நடைபெற்றது.
பக்தர்களின் அரோகரா கோஷம் முழங்க திருவாச்சி மண்டபத்தில் சுப்பிரமணிய சுவாமிக்கு பட்டாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 25ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது விழாவின் உச்சநிகழ்ச்சியான மலைமேல் தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நாளை மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது.

கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு விழாவின் முக்கிய நிகழ்வான சுப்பிரமணிய சுவாமிக்கு பட்டாபிஷேகம் செய்யும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. சுப்பிரமணிய சுவாமி தெய்வானை மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் திருவாச்சி மண்டபத்தில் எழுந்தருளினர்.
தொடர்ந்து கோவில் சிவாச்சாரியார்கள் சிறப்பு யாக பூஜை செய்தனர். பின்னர் கோவில் ஸ்தானிகப்பட்டர் நவரத்தின கற்கள் பதிக்கப்பட்ட கிரீடத்தை கையில் ஏந்தி புனித நீரால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து கிரீடம் சுப்பிரமணிய சுவாமிக்கு சூட்டப்பட்டு கையில் செங்கோல் ஏந்தி பக்தர்களின் அரோகரா கோஷம் விண்ணைப்பிளக்க மேள தாளங்கள் முழங்க பட்டாபிஷேக நிகழ்ச்சி விமர்சையாக நடைபெற்றது தொடர்ந்து சிறப்பு ஆராதனை நடைபெற்றது.
கார்த்திகை திருநாளான நாளை காலை 9 மணிக்கு சிறிய வைரத்தேரில் 16 கால் மண்டபத்தில் இருந்து புறப்பட்டு நான்கு ரத வீதிகளை சுற்றி வந்து சன்னதியை அடையும்.
தொடர்ந்து நாளை மாலை 6 மணி அளவில் கோயிலில் பாலதீபம் ஏற்றப்பட்டு, மலை மேல் மகா தீபம் ஏற்றப்படும். கார்த்திகை தீபத் திருவிழாவை ஒட்டி அதிகாலை 4:30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு இரவு 9:00 மணி வரை திறந்திருக்கும். மதியம் நடை சாத்தப்படாது. ஆண்டுக்கு 2 முறை 16 கால் மண்டபம் முன்பு நிலை நிறுத்தப்பட்டுள்ள சிறிய வைரத் தேர் தெப்பத் திருவிழா, கார்த்திகை திருவிழாவில் ரத வீதிகளில் வலம் வரும். நாளை காலை தேரோட்டம் நடக்கிறது. அதற்காக தேர் அலங்கரிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் இந்த ஆண்டு முதல் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கோயில் நிர்வாகம் சார்பாக மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த வழக்கு நாளை விசாரணைக்கு எடுப்பதற்கு பட்டியலிடப்பட வாய்ப்புள்ள நிலையில் திருப்பரங்குன்றம் முழுவதும் நாளை 1000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.