முல்லைப் பெரியாறு அணை மற்றும் வைகை ஆகிய இரண்டு அணைகளிலும் போதிய தண்ணீர் இருந்தும், தண்ணீரை முறைப்படுத்த தெரியாததால், 500 கன அடிக்கு மேல் வைகை அணையில் இருந்து வங்கக் கடலுக்கு சென்று கொண்டிருக்கிறது தண்ணீர்…
வீணாக கடலுக்குச் செல்லும் நீரை சிவகங்கை மாவட்ட ஒரு போகப் பாசனத்திற்கு திறப்பதில் இவர்களுக்கு(அதாவது பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு)என்ன பிரச்சனை…
6300 ஏக்கர் பரப்பளவு கொண்ட சிவகங்கை மாவட்ட பெரியாறு பாசனம், பிரதான பாசனமாகும். முறையான பொதுப்பணித்துறை ஆயகட்டின் கீழ் செயல்படும் இந்த பாசன கால்வாய்களுக்கு கடலுக்குச் செல்லும் நீரை திறந்து விடுவதில் எதற்கு அலட்சியம்…
கடந்த சில நாட்களுக்கு முன்னால், வைகை அணையில் இருந்து திறந்து விடப்பட்ட உபரி நீர் (கிட்டத்தட்ட 2,000 கன அடி தண்ணீர்) ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் மதகு அணைக்கு 4,500 கன அடியாக வந்து சேர்ந்தது. தமிழகம் முழுவதும் பெய்த பரவலான மழை பார்த்திபனூர் மதகு அணைக்கு கூடுதலாக 2,500 கன அடியை கொண்டு வந்து சேர்த்தது.
அங்கிருந்து ராமநாதபுரம் மாவட்ட பாசன கண்மாய்களுக்கு வைகை வலது, இடது பிரதான கால்வாய்கள் மூலமாகவும், கூத்தங்கால்வாய், பரளையாறு, களரி கால்வாய், கீழ நாட்டார் கால்வாய் மற்றும் வைகை ஆற்றின் மூலம் பெரிய கண்மாய் ஆகியவற்றுக்கும் தண்ணீரை திருப்பி விட்டது பொதுப்பணித்துறை.
கவனமின்மையால் பொதுப்பணித்து திருப்பி விட்ட கூடுதல் தண்ணீரால், அதாவது புல்லங்குடி அணைக்கட்டுக்கு ஆயிரம் கன அடி தண்ணீரை திருப்பி விட்டது பொதுப்பணித்துறை. இவ்வளவு தண்ணீரை எதிர்கொள்ள முடியாத புல்லங்குடி அணைக்கட்டு, கடுமையாக சேதமடைந்தது.
அதுபோல் சம்பந்தமே இல்லாமல் சக்கரக்கோட்டை கண்மாய்க்கு ஆயிரம் கன அடி தண்ணீரை திருப்பி விட்டது இதே கையாலாகாத பெரியாறு கோட்ட பொதுப்பணித்துறை.
கொல்லங்குடி அணையில் இருந்து திறந்து விடப்பட்ட உபரி நீர் புல்லங்குடி, சித்தார்கோட்டை, தேர்போகி, அத்தியூத்து கண்மாய்களுக்கு சென்று சேர்ந்தது போக,
மீதமுள்ள 500 கன அடிக்கு மேற்பட்ட தண்ணீர் வங்கக் கடலுக்குச் சென்று கொண்டிருக்கிறது.
மனச்சாட்சி எதுவுமற்ற பெரியாறு போட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள், கடலுக்குச் செல்லும் நீரில் பகுதி நீரை சிவகங்கை மாவட்டத்திற்கு திருப்பி விட்டால் கூட, இந்நேரம் 30 கண்மாய்களுக்கு மேல் நிறைந்திருக்க வாய்ப்பு இருக்கிறது.
அரசாணை என்கிற அரதப்பழசான பேப்பர் ஒன்றை கையில் வைத்துக் கொண்டு, அதன்படி தான் நாங்கள் நடந்து கொள்வோம் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் வீராப்பு காட்டினால்,,,
சீரழியப்போகிறது அப்பாவி விவசாயிகள் தான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்…
கடந்த
நான்காண்டுகளாக எவ்வித பிரச்சனையும் இன்றி சிவகங்கை மாவட்ட ஒருபோக பாசனத்திற்கு தண்ணீரை கொண்டு வந்து சேர்த்த பொதுப்பணித்துறை, இந்த ஆண்டு எந்த உத்தரவுக்காக காத்திருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறோம்.
சிவகங்கை மாவட்ட பிரதான கால்வாய்களை தவிர்த்து நீட்டிப்பு கால்வாய்களும் தண்ணீர் எதுவும் இன்றி பல்லாண்டு காலங்களாக பரிதவித்து நிற்கிறது.
மனசாட்சியோடு நடந்து கொள்ளுங்கள் பொதுப்பணித்துறை அதிகாரிகளே…
சரி இவர்களுக்குத்தான் நீர் மேலாண்மையை பற்றிய அக்கறை இல்லை என்றால்…
மாவட்ட மக்களை பாதுகாக்க வேண்டிய சிவகங்கை மாவட்ட ஆட்சியர் என்ன செய்து கொண்டிருக்கிறார்.
எதற்காக சிவகங்கை மாவட்ட பெரியாறு பாசனத்திற்கான தண்ணீர் வேண்டி தமிழக அரசின் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளரை தொடர்பு கொள்ளவில்லை.
பொதுப்பணித்துறை அதிகாரிகள், சிவகங்கை மாவட்ட ஆட்சியரின் பாராமுகம் ஆகியவற்றை கண்டித்து வரும் 9 ம் தேதி காலை 10 மணிக்கு
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம்.
கட்சி, அரசியல் எல்லாவற்றையும் கவனமாக வீட்டில் வைத்துவிட்டு, களத்திற்கு வருமாறு சிவகங்கை மாவட்ட பெரியாறு பாசன விவசாயிகளை அழைக்கிறோம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.