திருச்செந்தூரில் பங்குனி உத்திர திருவிழா : சுவாமி – வள்ளி அம்பாள் திருக்கல்யாணம்!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா 5ஆம் தேதி (புதன்கிழமை) நடக்கிறது. அன்று இரவில் சுவாமி- வள்ளி அம்பாள் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நாளை மறுநாள் (புதன்கிழமை) நடக்கிறது. அன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடைபெறுகிறது. காலை 6 மணிக்கு வள்ளி அம்பாள் தபசுக்கு எழுந்தருளுகிறார். மாலை 5 மணிக்கு சுவாமி குமரவிடங்க பெருமான் தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி மேலக்கோவில் பந்தல் மண்டப முகப்பிற்கு செல்கிறார். அங்கு சுவாமிக்கும், வள்ளி அம்பாளுக்கும் தோள்மாலை மாற்றும் நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் சுவாமியும், அம்பாளும் வீதி உலா வந்து கோவிலை சேர்கிறார்கள்.

இரவு 10 மணிக்கு கோவிலில் 108 மகாதேவர் சன்னதி முன்பு சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், வள்ளி அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், ராமதாஸ், கணேசன், செந்தில் முருகன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.இதனிடையே விடுமுறை தினமான நேற்று கோவிலுக்கு வந்த திரளான பக்தர்கள் கடலில் புனித நீராடி, நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். சுப்பிரமணிய சுவாமி கோவிலின் உபகோவிலான கீழ நாலுமூலைக்கிணறு குன்று மேலய்யன் சாஸ்தா கோவிலிலும் பங்குனி உத்திர திருவிழா நாளை மறுநாள் நடக்கிறது. அன்று சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடைபெறுகிறது. பக்தர்களுக்கு தேவையான குடிநீர், மின்சாரம் மற்றும் பந்தல் வசதிகளும் கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு

உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!