
திருவனந்தபுரம்: கேரளாவில் கனமழை தொடரும் சூழலில் இந்திய வானிலை ஆய்வு மையமானது 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது.
கேரள மாநிலத்தில் தென் மேற்கு பருவமழைக்கு முந்தைய மழைப் பொழிவு தீவிரமடைந்துள்ள நிலையில் மே 19 தொடங்கி இதுவரை மழை தொடர்பான சம்பவங்களில் 11 பேர் உயிர் இழந்துள்ளனர்.
கேரளாவில் கனமழை தொடரும் சூழலில் இந்திய வானிலை ஆய்வு மையமானது 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது. திருவனந்தபுரம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, கோழிக்கோடு, கண்ணூர் மாவட்டங்களில் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டால் 24 மணிநேரத்தில் 11 செ.மீ முதல் 20 செ.மீ வரை கனமழை பெய்யலாம் என்று அர்த்தம்.
நேற்றிரவு கொச்சியில் கனமழை பெய்தது. நகரின் பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. ஆலுவா நகரில் குறிப்பாக மார்க்கெட் பகுதியில் தேங்கியுள்ள தண்ணீரை அகற்றவில்லை என மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இதுதவிர மாநிலத்தில் ஆங்காங்கே மரம் முறிந்து விழுந்தது, சிறிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது என நிகழ்வுகள் பதிவாகியுள்ளன. மாநிலம் முழுவதும் 8 நிவாரண முகாம்களில் 223 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
தமிழக மழை நிலவரம்: தமிழகத்தில் இன்று (மே 25) முதல் 30-ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.