உலக விபத்து காய தினத்தை முன்னிட்டு திருநெல்வேலியில்”இன்னுயிர் காப்போம் திட்டம்” மூலம் விழிப்புணர்வு.

தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக ” இன்னுயிர் காப்போம் திட்டம் உதவிசெய்” மூலமாக சாலை விபத்தினால் ஏற்படும் உயிரிழப்பைக் குறைத்திட, சாலை விபத்துக்களை தடுத்திட, பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அந்தவகையில், உலக விபத்து காய தினத்தையொட்டி இந்த வாரம் முழுவதும் நகரின் பல்வேறு பள்ளி, கல்லூரிகளில் இதய நுரையீரல் இயக்க மீட்பு” என்று சொல்லப்படும் சி.பி.ஆர் செய்முறை பயிற்சியை கற்று கொடுத்து வருகிறார்கள் திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி அவசர சிகிச்சைப் பிரிவினர். மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் ரவிச்சந்திரன் அவர்கள் வழிகாட்டுதலின் பேரில், இன்று சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, ரோஸ்மேரி மெட்ரிக் பள்ளி, மற்றும் அப்துர் ரஹ்மான் பள்ளிகளில் இந்த இதய இயக்க மீட்பு செய்முறை பயிற்சி நடந்தது. முன்னதாக சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ரெட் ரிப்பன் கிளப் ஒருங்கிணைப்பார் முனைவர் முகமது சித்திக் வரவேற்புரை ஆற்றினார். கல்லூரி முதல்வர் முனைவர் அப்துல் காதர் தலைமையுரை ஆற்றினார். நிகழ்ச்சியில், அவசர சிகிச்சைப் பிரிவு துறைத் தலைவர் டாக்டர் முகமது ரபி பேசியது, எந்தவித மருத்துவ உபகரணமும் தேவையில்லாமல் இரண்டு கைகள் மட்டும் செயல்படுத்தி மனதை உறுதியாக வைத்து விலைமதிப்பில்லா உயிரை காப்பாற்றும் செய்முறை பயிற்சி இதுவென்று தெரிவித்தார்.

தொடர்ந்து, அவசர சிகிச்சைப் பிரிவு உதவி மருத்துவர். ப்ரதீப் சி.பி.ஆர் செய்முறை பயிற்சியை விளக்கினார். அவர் கூறியதாவது, நல்லா பேசிட்டு இருந்த ஒருத்தர் திடீரென நிலைகுலைந்து தடுமாறி கீழே விழுகிறார். உடனே அருகில் இருந்தவர்களுக்கு என்ன எது என புரியாமல் அதிர்ச்சியோடும் ,பதட்டத்தோடும்,செய்வதியறியாது இருப்பார்கள்.
ஆனால், இது போன்ற சூழ்நிலைகளில் நாம் சற்று சுதாரிப்போடு தைரியமாக இருக்க வேண்டும். நாம் வீணடிக்கும் ஒவ்வொரு நொடியும் நிலைகுலைந்தவரின் உயிருக்கே ஆபத்தாகி விடும்.
முதலில், அவரை நல்ல பாதுகாப்பான காற்றோட்டம் உள்ள சம தளமான பகுதியில் படுக்க வைக்க வேண்டும். தலையின் கீழே தலையணை ஏதும் வைக்க கூடாது. அவரின் வலதுபுறத்தில் நின்று, அவரின் தோள்களை வேகமா தட்டி, உலுக்கி அவரின் பெயரையோ அல்லது அய்யா எழும்புங்கள் என அவர் காதருகே கூற வேண்டும்.
அவரிடமிருந்து எந்தவித பதிலும் வரவில்லை என்றால் அருகில் இருப்பவரை உதவிக்கு அழைக்கலாம். அப்படியே 108 ஐ அழைக்க வேண்டும்.
அடுத்தது அவர் மூச்சு விடுகிறாரா? இல்லையா என்பதை சோதிக்க அவரது
தலையை பின்பக்கம் சாய்த்து, கன்னத்தை மேலாக உயர்த்த வேண்டும். அவரின் மார்பு மேலும் கீழும் ஏறி இறங்குறதா என்பதை கவனிக்க வேண்டும் அல்லது மூக்கின் கீழ் நம் காதை வைத்து அவர் மூச்சு விடுகிறாரா என்பதை உணரலாம்.
அவ்வாறு மூச்சு விடவில்லை என்றால் உடனே நாம் CPR முதலுதவி சிகிச்சையை ஆரம்பிக்க வேண்டும். நம் வலது கை விரல்களை இடது கைவிரல்களால் கோர்த்து ,பாதிக்கப் பட்டவரின் மார்பின் மைய பகுதியில் அழுத்த வேண்டும்.

அச்சமயத்தில் நமது முழங்கை மடங்கக்கூடாது. அதே போல் நாம் மார்பில் கொடுக்கும் அழுத்தம் கிட்டதட்ட 5 சென்டிமீட்டர் அளவுக்கு உள்ளே செல்ல வேண்டும்.
இப்படி தொடர்ச்சியாக 30 முறை வேகமாக அழுத்தி பாதிக்கப்பட்டவரின் தலையை பின்புறம் சாய்த்து , கன்னத்தை மேலாக உயர்த்தி, அவரின் மூக்கை நம் இரு விரல்களால் பிடித்து கொண்டு, வாயோடு வாய்வைத்து இரண்டு முறை சுவாசம் குடுக்க வேண்டும்.
இப்படி 30 முறை மார்பில் அழுத்தி இரண்டு முறை சுவாசம் குடுப்பது ஒரு சைக்கிள் (Cycle) எனப்படும்
இதே போல் 5 முறை செய்ய வேண்டும்.செய்து முடித்ததும், ,பாதிக்கப்பட்டவர் சுவாசிக்கிறாரா என்பதை கவனிக்கவேண்டும்.


இல்லையென்றால் ஆம்புலன்ஸ் வரும்வரை இதை தொடர்ந்து செய்ய வேண்டும்.
குறிப்பாக வாயோட வாய்வைத்து சுவாசம் கொடுக்க வெட்கமோ, கூச்சமோ படத் தேவையில்லை.நாம் செய்வது முதல் உதவி,நாம் செய்யும் இந்த உதவியால் ஒரு உயிரையே காப்பாற்ற முடியும் என கூறினார். ஒரு நிமிடத்தில் 100 முதல் 120 முறை அழுத்தங்கள் கொடுப்பது சிறந்தது. இதனையடுத்து கல்லூரி மாணவ, மாணவிகளும் இந்த செய்முறை பயிற்சியை செய்து காட்டினர். தொடர்ந்து, செவிலியர் பயிற்றுநர் செல்வன் விபத்து காய தின விழிப்புணர்வு உறுதிமொழி வாசிக்க அனைவரும் ஏற்றுக் கொண்டனர். நிகழ்ச்சியில், அவசர சிகிச்சைப் பிரிவு உதவி மருத்துவர் சாமுவேல், அவசர சிகிச்சைப் பிரிவு தொழில் நுட்புநர் மனோ கலந்து கொண்டனர். நிறைவாக, கல்லூரி ரெட் ரிப்பன் கிளப் அலுவலர். கணேஷ்குமார் நன்றியுரை ஆற்றினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!