மத நல்லிணக்கத்திற்கு அடையாளமாக விளங்கிய சிவன் கோயில் கும்பாபிஷேகம்.
புதுக்கோட்டை: ஆலங்குடி தர்மஸம்வர்த்தினி சமேத நாமபுரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழாவுக்கு, இஸ்லாமிய மற்றும் கிறிஸ்துவ மக்கள், சீர்வரிசை கொடுத்தது, சமூக நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக இருந்தது.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் உள்ள இரண்டாவது குரு ஸ்தலமாக விளங்கக்கூடிய தர்மஸம்வர்த்தினி சமேத நாமபுரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா இன்று நடந்தது. சில நாட்களுக்கு முன், 700 ஆண்டுகள் பழமையான கோவில் கும்பாபிஷேக விழாவுக்கு, ஆலங்குடி நகரில் உள்ள இஸ்லாமிய மற்றும் கிறிஸ்துவ பொதுமக்களுக்கு, கோவில் நிர்வாகத்தினர், நேரில் சென்று அழைப்பிதழ் கொடுத்தனர்.
அழைப்பை ஏற்று, ஆலங்குடி புனித அதிசய அன்னை ஆலயம், ஆலங்குடி பெரிய பள்ளிவாசல் மற்றும் கலிபுல்லா நகர் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட இடங்களில் இருந்து, இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்துவ மக்கள், நேற்று பாரம்பரிய முறைப்படி சீர்வரிசை கொண்டு வந்தனர். வருகை தந்த இஸ்லாமிய மற்றும் கிறிஸ்துவ மக்களை மேள தாளங்கள் மற்றும் நாதஸ்வரம் முழங்க, கோவில் நிர்வாகத்தினர் உற்சாகமாக வரவேற்றனர்.
பின், கோவில் கட்டுமானப் பணிகளை பார்வையிட்ட அவர்கள், முறைப்படி தாம்பூலங்களில் கொண்டு வந்த மலர், பழங்கள், இனிப்புகள் மற்றும் தேங்காய் உள்ளிட்ட சீர்வரிசைகளை, யாகசாலையில் வைத்து, கோவில் நிர்வாகத்தினரிடம் வழங்கினர். நிகழ்ச்சியில், தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் மய்யநாதன் உட்பட நுாற்றுக்கணக்கான இஸ்லாமிய மற்றும் கிறிஸ்துவ மக்கள் கலந்து கொண்டனர்.
மத நல்லிணக்கத்திற்கு அடையாளமாக நடந்த இந்த நிகழ்வு, அப்பகுதி மக்களிடையே உள்ள ஒற்றுமையை வெளிப்படுத்தியது.
சிறப்பு செய்தியாளர் G.ஆனந்தக்குமார்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.