தல புராணம்

இத்திருத்தலத்தில் அமைந்துள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆறுபடை வீடுகளில் முதற்படைவீடாகப் போற்றப்படுகிறது. பாண்டிய நாட்டு 14 திருத்தலங்களில் ஒன்றான இத்திருத்தலம் ஒரு குடவரை கோயிலாகும். இத்திருத்தலத்தில் ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ சத்தியகிரீஸ்வரர், ஸ்ரீ துர்க்கை அம்மன் ஸ்ரீ பவளகனிவாய் பெருமாள், ஸ்ரீ சுப்பிரமணியர் ஆகிய ஐந்து தெய்வங்களும் ஒருங்கே அமைந்து அருள்பாலிக்கின்றனர்.
பொருள் பெற்ற ஒருவன் வறியவன், ஒருவனைக்கண்டு இன்னின்ன பெருமைகளை உடைய இன்னாரிடத்திலே சென்றால் வேண்டும் பொருள் பெறலாம் என்று ஆற்றுப்படுத்துவதை (வழிப்படுத்துவதை) ஆற்றுப்படை என்பர். பொருளைப்பெறுவதைப் போல் அருளைப்பெறவும் நம் முன்னோர்கள் ஆற்றுப்படுத்தினர். நக்கீரர் தாமருளிய திருமுருகாற்றுப்படையில் முருகன் உறையும் இடங்களாக ஆறு இடங்களைக் குறிப்பிட்டுள்ளார். அதில் திருப்பரங்குன்றம் முதன்மை வகிக்கிறது.
இந்திருத்தலம் திருப்பரங்கிரி, சுமந்தவனம், பராசலதலம், குமாரபுரி, விட்டணுதுருவம், கந்தமாதனம், கந்தமலை, சத்தியகிரிட தென்பரங்குன்றம், சுவாமி நாதபுரம், முதல்படை வீடு என்று பல பெயர்களால் அழைக்கப்பட்டு வருகிறது. திருஞானசம்பந்தர் சுந்தரமூர்த்தி நாயனார் ஆகியோரால் பாடப்பெற்ற தலமாகும் இங்குள்ள ஸ்ரீ சத்தியகீரீஸ்வரர், பராசரர்,வேதவியாசர் போன்ற மகிரிஷிகளால் பூஜிக்கப்பட்டவர்.
மூலஸ்தான கருவறையில் இறைவன் சத்தியகீரீஸ்வரர் கிழக்கு நோக்கியும், பவளகனிவாய் பெருமாள் மகாலெட்சுமி தாயாருடன் மேற்கு நோக்கியும், கற்பக விநாயகர் தாமரை மலரில் அமர்ந்த நிலையில் கையில் கரும்பும், மோதகத்துடன் வடக்கு நோக்கியும், விஷ்ணு துர்க்கை சங்கு சக்கரத்துடன் மகிஷாசுரவர்த்தினியாக நின்ற கோலத்தில் வடக்கு நோக்கியும், முருகப்பெருமான். சூரபதுமன் உடனான அசுரர்களை அழிக்க வீரபாகு உள்ளிட்ட நவ வீரர்களுடன் அண்டாபரணர், உக்கிரமூர்த்தி,சேனையுடன் அருள்மிகு சக்தியிடம் பெற்று சஷ்டி அன்று சூரபதுமனை வதம் செய்து ஆட்கொண்டு விண்ணவரை மீட்ட பின்பு முருகப்பெருமான் இத்தலத்தில் தெய்வானை அம்மையை திருமணம் புரிந்து திருமண கோலத்தில் அமர்ந்த நிலையில் கலியுக வரதனாய் அருள்பாலிப்பது பெரும் சிறப்பாகும்.
இத்திருத்தலத்தில் அருள்மிகு சத்தியகிரீஸ்வரர் மற்றும் பவளக்கனிவாய் பெருமாள் எதிர் எதிரே காட்சி அளிப்பது சைவ வைணவ சமய ஒற்றுமையை பறைசாற்றுகிறது.
இந்திருத்தலம் லிங்க வடிவமாய் காட்சி அளிக்கும் இக்குன்றில் எழுந்தருளியுள்ள பரம்பொருளை. முருகப்பெருமான் வழிப்பட்டதாக புராணங்கள் கூறுவதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பௌர்ணமி தினத்தன்று நாள் முழுவதும் கிரிவலம் வந்து ஈசனின் அருள்பெற்று செல்வது கண்கொள்ளாக் காட்சியாகும்.
அம்பாள் மகிஷனை வதம் செய்து பிரமகத்தி தோஷம் ஏற்பட்டதால் இத்தலத்தில் தவம் செய்து பாவ விமோசனம் பெற்றார் என்றும். இத்தல கற்பக விநாயகரை பிரம்மன் பூஜை செய்து வழிபட்டார் என்றும் புராணங்களில் கூறப்படுகிறது.
இத்தலத்தில் தரிசனம் செய்வதால் திருமண தடை நீங்கி புத்திரர் பாக்கியம் உண்டாகும் என்பது ஜதீகம். எனவே வருடந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்கள் உற்றார் உறவினர்களுடன் தங்கள் இல்லத்திருமணத்தை இத்தலத்தில் நடத்திச்செல்வது சிறப்பான ஒன்றாகும்.
இந்திருக்கோயிலில் அமைந்துள்ள லஷ்மி தீர்த்தத்தில் மகாலெட்சுமி வாசம் செய்வதால் லட்சுமி தீர்த்தம் என பெயர் உண்டானது. இந்தீர்த்ததில் உப்பு மிளகு போட்டு தீர்த்தத்தை தெளித்துக்கொண்டால் உடம்பில் உள்ள தோல் முதலான சகல வியாதிகளும் நிவர்த்தியாகும்.
இத்திருக்கோயிலில் கந்த சஷ்டி 6 நாட்களும் பக்தர்கள் தங்கி முழு விரதம் இருந்து முருகனை வழிபட்டு அருள்பெற்று செல்வது என்றென்றும் எண்ணத்தக்க நிகழ்வாகும்.
இத்திருக்கோயிலில் திருமணம் நடைபெற்றால் அனைத்து தெய்வங்களின் அருளுடன் சகல ஐஸ்வர்யங்களும் கிட்டுவதால் உன்னதமான திருமணதலமாகவும், சஷ்டி விரதம் இருந்தால் எண்ணியது அனைத்து செல்வங்களும் கிடைப்பதால் இது புண்ணிய தலமாகவும், திருமணத்தடை நீங்கவும், வாழ்வில் முதல்வனாக வேண்டுவோரும் நோயற்ற வாழ்வுடன் அனைத்து ஐஸ்வர்யங்களும் பெற விழைவோரும் முதல்படை வீட்டில் தாய் தந்தையுடன் வீற்றிருக்கும் இம்முருகப்பெருமானை வழிபடுவது சிறப்பானதாகும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.