
லட்சுமி மேனன்-ஆரி ஜோடியில்.. மதுரையில் விறுவிறு படப்பிடிப்பு!
பிரபு சாலமன் இயக்கிய கும்கி படம் மூலம் கோலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமானவர் லட்சுமி மேனன். இப்படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடித்த அவர், அடுத்ததாக சசிகுமாரின் சுந்தரபாண்டியன் படத்தில் கதாநாயகியாக நடித்தார். இப்படமும் ஹிட் ஆனதை தொடர்ந்து விஷால் உடன் பாண்டியநாடு, நான் சிகப்பு மனிதன் என அடுத்தடுத்து இரண்டு படங்களில் ஜோடி சேர்ந்து நடித்தார். இந்த இரண்டு படங்களும் வேறலெவல் ஹிட் ஆனது.
தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜின் ஜிகர்தண்டா, கார்த்தி ஜோடியாக கொம்பன், அஜித்துடன் வேதாளம், ஜெயம் ரவி ஜோடியாக மிருதன் என டாப் பார்மில் சென்று கொண்டிருந்த லட்சுமி மேனன், திடீரென ஆள் அட்ரஸே தெரியாமல் காணாமல் போனார். அவர் கல்லூரி படிப்பை முடிப்பதற்காக சினிமாவுக்கு பிரேக் விட்ட நிலையில், அதுவே அவர் மார்க்கெட் இழக்கவும் முக்கிய காரணமாக அமைந்தது. பின்னர் புலிக்குத்தி பாண்டி படம் மூலம் ரீ-எண்ட்ரி கொடுத்தார்.
இதையடுத்து வாசு இயக்கிய சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்தார் லட்சுமி மேனன். கடந்த ஆண்டு வெளியான இப்படம் படுதோல்வியை சந்தித்தது.இதனால் முன்னணி நடிகர்களின் பட வாய்ப்புகள் எதுவும் எதிர்பார்த்த அளவு கிடைக்காமல் தவித்து வந்த லட்சுமி மேனன் தற்போது புதுப்படம் ஒன்றில் நடிக்க கமிட் ஆகி உள்ளார். அப்படத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆரி அர்ஜுனனுக்கு ஜோடியாக நடிக்கிறார். உண்மைச் சம்பவம் ஒன்றை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டுள்ள திரைக்கதை, விளிம்பு நிலை மக்களின் வாழ்வியலை மிக மிக யதார்த்தமாக பதிவு செய்துள்ளது. மூட நம்பிக்கைகளுக்கு எதிரான கருத்துகளும் இதில் இடம் பெற்றுள்ளன.

ஆரி கதாநாயகனாக நடிக்கும் இத்திரைப்படத்தில் லக்ஷ்மி மேனன் கதாநாயகியாக நடிக்கிறார். ‘மைம்’ கோபி, வையாபுரி, ‘ப்ளாக்’ பாண்டி, ‘ஜெயிலர்’ தன்ராஜ், ஷெர்லி பபித்ரா, கனிமொழி போன்றோருடன் தமிழ்த் திரையுலகின் முக்கியமான நடிகர் ஒருவர் வித்தியாசமான கதாபாத்திரத்தில் தோன்றுகிறார்.
புதிய இசையமைப்பாளரின் இசையில், கவிப்பேரரசு வைரமுத்து பாடல்களை எழுதியுள்ளார். செம்பூர் கே.ஜெயராஜ், ராஜசேகர பாண்டியன் வசனம் எழுதியுள்ளனர். படத்தொகுப்பு கெவின் ரிச்சர்ட், கலை இயக்குநராக சுரேஷ் கல்லேரி, ஆடை வடிவமைப்பாளராக சுபிகா, ஆகியோர் பணியாற்றுகின்றனர்.
கார்த்திக் நல்லமுத்து ஒளிப்பதிவு செய்ய, அறிமுக இயக்குநர் ராஜசேகர பாண்டியன் கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார்.
மெட்ராஸ் டெக் என்டர்டெயின்மென்ட் சார்பாக அருணாச்சலம் அனந்தராமன் தயாரிக்கும் இத்திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு, மதுரையில் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.
- Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.