கூடுவாஞ்சேரியில் அடிக்கடி மின்வெட்டு: நள்ளிரவில் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்

பட விளக்கம்: மக்கள் போராட்டம்

கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் முறையாக மின்சாரம் வழங்க வலியுறுத்தி பொதுமக்கள் நள்ளிரவில் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு, ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே இரவு நேரங்களில் தொடர்ந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அதே போல் குறைந்த மின் அழுத்தம் அதிகமாக உள்ளது. இதனால் அவதிப்பட்டு வந்த மக்கள், மின்வாரிய அலுவலகத்தில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

அதேபோல் கூடுவாஞ்சேரி – நந்திரவரம் நகராட்சி முழுவதும் மாடம்பாக்கம், பெருமாட்டு நல்லூர், பாண்டூர், கன்னிவாக்கம், தர்காஸ், காயரம்பேடு, மூலக்கழனி, பொத்தேரி, தைலாவரம், வல்லாஞ்சேரி போன்ற பகுதிகளில் கடும் மின் வெட்டு மற்றும் குறைந்த மின்னழுத்தம் உள்ளிட்ட பிரச்சனை அதிகமாக உள்ளது.

மேலும் பகுதிகளில் கடந்த 3 மாதங்களாக அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டு வருவதால், பொதுமக்கள் பல்வேறு இன்னலுக்கு உள்ளாகி வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, மின்சார வாரிய அதிகாரிகளிடம் பல முறை முறையிட்டும் பலனில்லை என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்நிலையில் நள்ளிரவு பெருமாட்டு நல்லூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆத்திரமடைந்து, கூடுவாஞ்சேரி மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு, அங்கிருந்த மின்வாரிய ஊழியருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, எங்கள் பகுதியில் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுவதாகவும், புகார் தெரிவிக்க மின்வாரிய அலுவலகத்தை தொடர்பு கொண்டால் ஊழியர்கள் தொலைபேசியை சுவிட்ச் ஆப் செய்து விடுகின்றனர். இரவு நேரம் மின்சாரம் துண்டிக்கப்படுவதால் பகல் நேரத்தில் பணிக்கு செல்வோர் தூக்கமின்றி மன உளைச்சலுக்கு ஆளாகி வருவதாக கூறி வாக்குவாதம் செய்தனர். உடனடியாக மின் விநியோகம் வழங்கும்படி கோஷமிட்டனர். இதனால், அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டுவிட்டது. இந்த திடீர் முற்றுகை போராட்டத்தினால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் மின்சார வாரிய அதிகாரிகள், போலீஸார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மின் வெட்டு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என, அதிகாரிகள் உறுதியளித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து பொதுமக்கள் அங்கு இருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து பொதுமக்கள் கூறியது: கோடை காலம் தொடங்கியதையடுத்து நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால், கடும் அவதியடைந்து வருகிறோம். இரவு நேரத்தில் ஏற்படும் மின்வெட்டு காரணமாக, புழுக்கம் மற்றும் கொசுக்கடியால் அவதிக்குள்ளாகி வருகிறோம். தற்போது கோடைக்காலம் தொடங்கிய நிலையில் குறைந்த மின்னழுத்த மின்சாரத்தால் மின் விசிறி, மின் விளக்குகள் உள்ளிட்ட மின்சாதனப் பொருள்களைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மின் வாரியத்திற்கு புகார் அளித்தும் உரிய தீர்வை அவர்கள் செய்யவில்லை. இதனால் முற்றுகையிட்டோம். புதிய இணைப்பு கொடுப்பதில் காட்டும் அவசரத்தை குறைந்த மின் அழுத்த பிரச்சனையிலும் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என்றனர்.

இதுகுறித்து மின்வாரிய ஊழியரிடம் கேட்டபோது, கூடுவாஞ்சேரி, தைலாவரம் துணை மின் நிலையங்களுக்கு போதுமான அளவில் மின்சாரம் கிடைக்கவில்லை‌‌. மின்பற்றாக்குறையே அடிக்கடி மின் தடைக்கு காரணம். கோடை காலம் என்பதால் மக்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது அதற்கு ஏற்றார் போல் போதுமான அளவில் மின்சாரம் இல்லை. இதன் காரணமாகவே மின் வெட்டு, குறைந்த மின் அழுத்தம் ஏற்படுகிறது என்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!