மதுரை மாவட்டத்தில் கிராம சபை கூட்டத்தை முறையாக நடத்தாத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் நாகமலைபுதுக்கோட்டை ஊராட்சியில் அதன் தலைவர் பாப்பாத்தி தலைமையில் நேற்று கிராமசபை கூட்டம் நடந்தது. கூட்டம் தொடங்கியதும் கூட்டத்தை முறையாக நடத்தவில்லை வரவு செலவு கணக்குகளை முறையாக சமர்ப்பிக்க வேண்டுமென கூறி சிலர் வாக்குவாதம் செய்தனர்.
பொதுமக்கள் எழுப்பிய கேள்விகளுக்கு ஊராட்சி நிர்வாகம் தரப்பில் பதில் அளிக்க முடியாமல் திணறினர். ஊராட்சி நிதியில் தனிநபர்களுக்கு செலவு மற்றும் சலுகைகள் செய்தது குறித்து கேள்வி எழுப்பினர் பொதுமக்கள் தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறியதால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
இதற்கிடையே கூட்டம் முறையாக அரசு விதிமுறைகளின்படி நடக்கவில்லை எனக் கூறி அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கூட்டத்தை விட்டு சிலர் வெளியேறி மதுரை – தேனி நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு பதற்றம் நிலவியது இந்த மறியலில் திமுக,கம்யூனிஸ்ட்,நாம் தமிழர் கட்சியினர் மற்றும் ஊராட்சி உறுப்பினர்கள்,பொதுமக்கள் கலந்து கொண்டனர். பின்னர் காவல்துறையினர் சமரசம் செய்தனர். மறியல் செய்தவர்கள் கூறுகையில் ஊராட்சி மன்ற தலைவரின் மகன் நிர்வாகத்தில் தலையிடுவதாகவும் பிளாட் அப்ரூவல் உள்ளிட்டவற்றில் முறைகேடுகள் நடப்பதாகவும் ஊராட்சி நிதி முறையாக செலவு செய்யப்படவில்லை எனவும் உடனடியாக வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் ஆட்சியர் ஊராட்சியில் நடைபெற்ற பணிகள் மற்றும் வரவு செலவுகள் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்கள்.
இதேபோல் மதுரை மாவட்டத்தில் பல ஊராட்சிகளில் வரவு செலவு கணக்கு தாக்கல் செய்யப்படவில்லை எனக்கூறி கிராமசபை கூட்டங்களில் பிரச்சனை ஏற்பட்டது. மேலும் பல ஊராட்சியில் அரசு அறிவித்தலின் பெயரில் வரவு-செலவு பேனர் வைக்காமல் கிராமசபை கூட்டம் நடந்தது.தமிழகத்தில் பல்வேறு ஊராட்சிகளில் 100 நாள் வேலை திட்ட பணியாளர்களை வைத்து கடமைக்கு கிராம சபைக் கூட்டம் சில நிமிடங்களில் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.