கழிப்பறை இல்லாத திருமங்கலம் பேருந்து நிலையம்… பயணிகள் அவதி! நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

திருமங்கலம் பேருந்து நிலையத்தில் முறையான கழிப்பிட வசதி இல்லை. பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இலவச கழிப்பறைகள் பராமரிப்பின்றி பாழடைந்த நிலையில் சுவர்கள் இடிந்து உள்ளதால் அங்கு வரும் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தென் மதுரையின் இதயப் பகுதியான திருமங்கலம் பகுதியில பெருகி வரும் மக்கள் நடமாட்டத்தைக் கணக்கில் கொண்டு பல ஆண்டுகளுக்கு முன்பே தனியாக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது. இந்த பேருந்து நிலையத்துக்கு நாள்தோறும் குறைந்தது 10 ஆயிரம் பேர் வந்து செல்கின்றனர். காலை, மாலை என எல்லா நேரத்திலும் மக்கள் அதிகம் கூடும் இங்கு சரியான கழிப்பிட வசதி இல்லை. இதனால் திருமங்கலம் பகுதிக்கு வேலைக்காகவும், ஷாப்பிங் செய்வதற்காகவும் வரும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகிறார்கள்.

தற்போது இருக்கிற பழைய கழிப்பிடம் பராமரிப்பின்றி உள்ளது. இங்கு பெண்களுக்கான கழிப்பறையும் இல்லை. தண்ணீர் வசதியின்றி ஆண்கள் பகுதியில் சிறுநீர் கழிப்பிடம் இடிந்த நிலையில் பயன்பாட்டில் உள்ளது.
மேலும் கழிவறை வசதி இல்லாததால் பொதுமக்கள் கண்ட இடங்களில் சிறுநீர் கழிக்கும் சூழல் ஏற்படுகிறது இதனால் கொசு தொல்லை அதிகமாகி நோய் தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது.

சோலைமலை என்ற பயணி கூறியதாவது: திருமங்கலம் பேருந்து நிலையத்தில் உள்ள பொதுக் கழிப்பிடம் பல நாட்களாக பாழடைந்து கிடக்கிறது. பெண்கள் அவசரத்துக்கு எந்த பக்கமும் போக முடியவில்லை. இது போன்ற அவல நிலை குறித்து ஏற்கனவே நகராட்சி அலுவலகத்தில் நேரடியாக சென்று முறையிட்ட போது, தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்தம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் சம்பந்தப்பட்டவர்களிடம் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்கள். ஆனால் பல மாதங்களுக்குப் பிறகு தற்போது திருமங்கலம் பேருந்து நிலையத்திற்கு வந்த போது எந்த ஒரு மாற்றமும் இல்லை. இதனால் திருமங்கலத்திற்கு வருவதற்கே ஒரு நிமிடம் யோசிக்க வேண்டியுள்ளது.
திருமங்கலம் தனி மாவட்டமாக அறிவிக்கப்படும் எனக் கூறி வரும் நிலையில், தற்போது நகராட்சியாக இருக்கும் போது கழிப்பறை வசதிகள் செய்து தராமல் இருக்கும் நகராட்சி நிர்வாகம், தனி மாவட்டமானால் என்ன நிலை ஏற்படுமோ என்று கேள்விக்குறியாக தான் உள்ளது என்றார்.

மேலும் இலவச கழிப்பறைகளால் நகராட்சி நிர்வாகத்திற்கு வருமானம் இல்லை என்பதால் தனியாருக்கு ஒப்பந்தம் விடப்பட்டு கட்டண கழிப்பறை வசதி ஏற்படுத்தி பொதுமக்கள் வயிற்று அடித்து நிர்வாகத்தை நடத்தும் நிலையில் நகராட்சி நிர்வாகமும், மாவட்ட நிர்வாகம் உள்ளதா எனவும் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். எனவே பொதுமக்களின் தேவைக்கேற்ப திருமங்கலம் பேருந்து நிலையத்தில் கழிப்பறை வசதிகள் உட்பட அடிப்படை வசதிகளை செய்து தர நகராட்சி நிர்வாகமும் மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!