‘கண்மணி அன்போடு காதலன்’ பாடலுக்கான அனுமதி பெற்றுள்ளதாக ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ தயாரிப்பாளர் விளக்கம் 

சென்னை: “குணா படத்தில் இடம்பெற்றுள்ள ‘கண்மணி அன்போடு காதலன்’ பாடலுக்கான முறையான அனுமதியைப் பெற்றுள்ளோம்” என ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ பட தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

மலையாளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற திரைப்படம் ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’. இந்தப் படம் உலக அளவில் ரூ.200 கோடி வசூலைத் தாண்டியது. இதில் கமல்ஹாசன் நடிப்பில் 1991-ல் வெளியான ‘குணா’ படத்தின் ‘கண்மணி அன்போடு காதலன்’ பாடல் இடம் பெற்றிருந்தது. இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.

இதனிடையே, ‘கண்மணி அன்போடு காதலன்’ பாடலை தன்னுடைய அனுமதி இன்றி ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ படத்தில் பயன்படுத்தியதாக கூறி, இசையமைப்பாளர் இளையராஜா படக்குழுவுக்கு ‘பதிப்புரிமை மீறல்’ தொடர்பான நோட்டீஸ் அனுப்பியதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஷான் ஆண்டனி ‘தி நியூஸ் மினிட்ஸ்’ செய்தித் தளத்துக்கு அளித்த பேட்டியில், “இந்தப் பாடலுக்கான உரிமையை நாங்கள் முறையாக பெற்றுள்ளோம். ஒரு நிறுவனம் தெலுங்கு பதிப்பின் உரிமையையும், மற்றொரு நிறுவனம் மற்ற மொழி பதிப்புக்கான உரிமையையும் பெற்றிருந்தது. பிரமிட் மற்றும் ஸ்ரீதேவி சவுண்ட்ஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களிடம் இருந்தும் ‘கண்மணி அன்போடு காதலன்’ பாடலுக்கான உரிமையை பெற்றுவிட்டோம்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இசையமைப்பாளர் இளையராஜாவிடம் இருந்து காப்பிரைட்ஸ் தொடர்பான எந்த வித நோட்டீஸும் எங்களுக்கு கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக, இந்தப் படத்தின் டைட்டில் கார்டில் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!