
வீட்ல திட்றாங்க..; லஞ்சப் பணத்தைத் திருப்பி தாங்க..; மின்வாரியத்தில் மல்லுக்கட்டிய கூலித் தொழிலாளி….!
வீட்டில் முன்பு இருந்த டிரான்ஸ்பார்மரை இடம் மாற்றம் செய்வதற்காக மின்சார வாரிய செயற்பொறியாளருக்கு கொடுத்த லஞ்சப் பணத்தை கூலித் தொழிலாளி திரும்ப பெற்றுக் கொண்ட சம்பவம் ஆற்காட்டில் நிகழ்ந்திருக்கிறது.
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அருகே உள்ள மாசபேட்டையைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது வீட்டின் முன் டிரான்ஸ்பார்மர் ஒன்று இருக்கிறது. இடையூறாக இருக்கும் இந்த டிரான்ஸ்பார்மரை மாற்றக்கோரி ஆற்காடு மின்வாரிய உதவி செயற்பொறியாளர் தனலட்சுமியை அணுகி இருக்கிறார். அந்த ட்ரான்ஸ்பார்மரை மாற்ற தனலட்சுமி லஞ்சம் கேட்டிருக்கிறார். இதையடுத்து முன் பணமாக 4000 ரூபாயை கூலித் தொழிலாளி கோவிந்தராஜ் கொடுத்து இருக்கிறார்.
இதையடுத்து வீடு திரும்பிய கோவிந்தாராஜ், தனது குடும்பத்தினரிடம் டிரான்ஸ்பார்மரை மாற்ற லஞ்சம் கொடுத்திருப்பதாக கூறியிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த அவரது குடும்பத்தினர் தகராறு செய்து பணத்தை வாங்கிவரும்படி கூறியிருக்கின்றனர். இதையடுத்து ஆற்காடு மின்வாரிய அலுவலகம் சென்ற கோவிந்தாராஜ், மின்வாரிய உதவி செயற்பொறியாளர் தனலட்சுமியிடம் சென்று, வீட்ல திட்றாங்க. நீங்க டிரான்ஸ்பார்மரை மாத்தலைன்னாலும் பரவாயில்லை.கொடுத்த லஞ்சப் பணத்தை திரும்ப கொடுங்க என்று மல்லுக்கட்டி நின்றிருக்கிறார். இதையடுத்து, லஞ்ச பணத்தை தனலட்சுமி திரும்ப கொடுத்து இருக்கிறார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.