திருச்செந்தூர் கோவில் நாழிக்கிணற்றில் நீராட, வள்ளி குகை தரிசன கட்டணம் ரத்து: நாளை முதல் அமல்!
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் “திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சாமி கோவிலுக்கு தரிசனம் செய்ய பக்தர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதில் மூத்தகுடி மக்கள், மாற்றுத்திறனாளிகள் என அனைவருமே நீண்ட நேரம் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்வது மிகவும் கடினமாக இருப்பதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு வந்தது.
இதைத் தொடர்ந்து அவரது அறிவுரையின்படி அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் கோவிலில் தரிசனத்திற்கு வருகை தரும் பக்தர்களுக்கு அனைத்து வசதிகளும் ஏற்படுத்துவது குறித்து ஆய்வு மேற்கொண்டார்கள். மேற்கண்ட ஆய்விற்குப் பின்னர் திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோவிலுக்கு சாமி தரிசனத்திற்கு வருகை தரும் பக்தர்கள் நாழிக்கிணற்றில் புனித நீராடுவதற்கும், வள்ளிக்குகையில் தரிசனம் புரிவதற்கும் அனுமதி கட்டணம் வசூல் செய்யப்படுவதை ரத்து செய்து பக்தர்கள் நலன் கருதி கட்டணமின்றி புனித நீராடும் வசதி செயல்படுத்தப்பட உள்ளது.
மூத்த குடிமக்கள் தரிசன வரிசையில் நீண்ட நேரம் காத்திருப்பதைத் தவிர்க்கும் பொருட்டு மூத்த குடிமக்கள் நலன் கருதி சண்முகவிலாசம் மண்டபம் பகுதியில் தனிவரிசை ஏற்படுத்தி கட்டணமின்றி விரைவாக தரிசனம் செய்வதற்கு வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இவர்கள் வயதினை அடையாளம் காட்டும் வகையில் அரசால் வழங்கப்படும் ஆதார் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை இதில் ஏதாவது ஒரு அடையாள அட்டை அசலினை கோவிலில் இதற்கென ஏற்படுத்தப்பட்டுள்ள கவுண்டரில் காண்பித்து உதவிக்கு ஒருவர் மட்டும் அனுமதிக்கப்பட்டு விரைவு தரிசனம் செய்வதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
மாற்றுத்திறனாளிகள் நலன் கருதி சக்கர நாற்காலி வசதி தகவல் மையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன் மூலம் வடக்கு வாசல் வழியாக மாற்றுத்திறனாளிகளுக்கென்று அமைக்கப்பட்டுள்ள மரப்பலகையிலான ரேம்ப் வழியாக பக்தர்கள் வெளியேறும் வழியில் சண்முகர் சன்னதி வழியாகச் சென்று நேரடியாக கட்டணமின்றி மூலவரைத் தரிசனம் செய்யும் வசதி செயல்படுத்தப்பட உள்ளது. இவை அனைத்தும் நாளை (8-ந்தேதி) முதல் செயல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
+++++———++++++———-++++++———++++++
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.