திருச்செந்தூர் கோவில் யானைக்கு தோல்நோய் பாதிப்பு-பக்தர்கள் யானைக்கு உணவு, பழங்கள் வேண்டாம்.

திருச்செந்தூர் கோவில் தெய்வானை யானைக்கு தோல்நோய் பாதிப்பு ஏற்பட்டது. எனவே ‘பக்தர்கள் யானைக்கு உணவு, பழங்கள் வழங்க வேண்டாம்’ என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தெய்வானை (வயது 25) என்ற பெண் யானை உள்ளது. விழாக்காலங்களில் சுவாமி வீதி உலாவின்போது சுவாமிக்கு முன்பாக தெய்வானை யானை கம்பீரமாக செல்லும். கடந்த சில மாதங்களாக தெய்வானை யானையின் உடல் மற்றும் கால் பகுதியில் தோல்நோய் பாதிப்பு ஏற்பட்டது. யானை கால்களின் பாதம் அருகில் வெள்ளைநிற தடிப்பு உள்ளது.

எனினும் வழக்கம்போல் தினமும் காலையில் தெய்வானை யானை நடைப்பயிற்சிக்கு செல்கிறது. சமீபத்தில் நடந்த மாசித் திருவிழாவின்போதும் தெய்வானை யானை தினமும் சுவாமி வீதி உலாவில் பங்கேற்றது. தெய்வானை யானைக்கு ஏற்பட்ட தோல்நோய் பாதிப்பை கண்டறிந்து குணமாக்கும் வகையில் நேற்று அதனை கால்நடை மருத்துவ குழுவினர் பரிசோதித்தனர்.

கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், அறங்காவலர் செந்தில்முருகன் ஆகியோர் முன்னிலையில், கால்நடை டாக்டர்கள் கலைவாணன் (மதுரை), வினோத்குமார் (திருச்செந்தூர்), ஓய்வுபெற்ற கால்நடைத்துறை உதவி இயக்குனர் உமாகாந்தன், திருச்செந்தூர் வனவர் சுரேஷ்குமார் ஆகியோர் கொண்ட குழுவினர் தெய்வானை யானை உடலில் தோல்நோய் பாதிப்பு ஏற்பட்ட இடத்தில் மாதிரிகளை சேகரித்தனர். பின்னர் மருத்துவ குழுவினர் கூறியதாவது:-

யானைகளுக்கு வழக்கமாக வரக்கூடிய தோல்நோய்தான் தெய்வானை யானைக்கும் ஏற்பட்டுள்ளது. இதனால் பெரியளவில் பாதிப்பு ஏற்படாது. எனினும் தோல்நோய் மேலும் பரவாதவாறு யானை உடலில் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்படுகிறது. அந்த அறிக்கை கிடைத்த பின்னர் அதற்கேற்றவாறு சிகிச்சை அளிக்கப்படும். தற்போது தோல்நோய்க்கான மருந்துகள் வழங்கப்பட்டுள்ளது. பக்தர்கள் பாசமிகுதியால் யானைக்கு உணவு, பழங்களை வழங்குகின்றனர். பழங்கள் கெட்டுப்போகாதவாறு பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளிக்கப்படுவதால், அதனை உண்ணும் யானைக்கு தோல்நோய் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே பக்தர்கள் யானைக்கு உணவு, பழங்கள் வேண்டாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுதொடர்பாக கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன் கூறுகையில், ”பக்தர்கள் வழங்கும் உணவுப்பொருட்களால் யானையின் உணவுப்பழக்கம் இயற்கைக்கு மாறாக அமைவதால் தோல்நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே பக்தர்கள் நேரடியாக தெய்வானை யானைக்கு உணவு, பழங்களை வழங்க வேண்டாம். அவற்றை யானை பாகனிடம் வழங்குங்கள். அதனை பரிசோதித்து தேவையானதை யானைக்கு பாகன் வழங்குவார். தெய்வானை யானைக்கு ஏற்பட்ட தோல்நோய் பாதிப்பை முற்றிலும் குணமாக்கும் வகையில் சிறப்பு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது” என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!