பெயரளவில் நடைபெறும் விவசாயிகள் குறைதீர் கூட்டம்… எந்த பிரயோஜனமும் இல்லை… விவசாயிகள் வேதனை!

மாதந்தோறும் விவசாயிகளுக்கு குறைதீர் கூட்டம் நடத்தப்படுவது வழக்கம். இந்த கூட்டத்தில் விவசாயிகள் கலந்துகொண்டு தங்கள் குறைகளை நேரில் தெரிவித்தும், மனுக்களாக வழங்கியும் வருகின்றனர்.
அதன்படி மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் ஆவேசமும் வேதனையும் அடைந்தனர். இக்கூட்டம் வட்டாட்சியர் பார்த்திபன் தலைமையில் நடந்தது.
இதில் துணை வட்டாட்சியர் மாதவன், ஆர்.ஐ., க்கள் ரமேஷ், காயத்ரி முன்னிலை வகித்தார்கள். விவசாயிகள் கூறியதாவது: ஏற்குடி அச்சம்பத்து பகுதி கால்வாய்க்குள் தொடர்ந்து குப்பையை கொட்டுவதும், கழிவு நீர் செல்வதுமாக உள்ளது. இவற்றை தடுக்க 12 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம். இதுவரையும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை.

திருப்பரங்குன்றம் வட்டார பகுதியில் பெரும்பாலான நீர்வரத்து கால்வாய்கள், கண்மாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.

ஆக்கிரமிப்பிற்கு மத்தியில் கடல்போல் காட்சி அளிக்கும் நிலையூர் கண்மாய்

இதனால் கண்மாய்களுக்கு தண்ணீர் செல்வது தடைபடுகிறது. இது தொடர்ந்தால் விவசாயம் அழிந்து உணவுப்பஞ்சம் ஏற்பட்டு, நாடே அழிந்து விடும் சூழல் ஏற்படும் என்றும், தமிழகஅரசும், வேளாண்மைத்துறையும் தேர்வு செய்த 13 ஊராட்சிகளில் மட்டுமே வேளாண், தோட்டக்கலை துறை திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அனைத்து ஊராட்சிக்கும் இது போன்ற திட்டங்களை செயல்படுத்தவும், தரமான தார்ப்பாய்கள், மருந்து அடிக்கும் இயந்திரங்கள் போன்றவைகளை மானியத்தில் அனைத்து விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நிலையூர் பெரிய கண்மாய் தற்போது முழு கொள்ளளவை எட்டியுள்ளது.


நிலையூர் கண்மாய் கரையை சரி செய்ய வைகை அணையில் இருந்து தண்ணீர் வருவதற்கு முன்பிருந்தே இக்கூட்டத்தின் வாயிலாக பலமுறை மனு அளிக்கப்பட்டும் இதுவரை கண்மாய் கரை சரி செய்யப்படவில்லை. மேலும் நடுமடையில் உள்ள பழுதான ஷட்டரை சீரமைக்கக்கோரி பலமுறை கோரிக்கை வைத்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் நடுமடை ஷட்டர் முழுதாக பழுதாகி உடைந்து தண்ணீர் வெளியேறி விவசாய பயன்பாட்டின் தேவையை விட அதிகமாக வெளியேறி செல்வதால் கண்மாயில் தேக்கி வைத்திருந்த தண்ணீரின் வீணாகிறது என்று நிலையூர் கண்மாய் நீரினை பயன்படுத்துவோர்கள் வேதனை அடைந்து வருகின்றனர்.

நடுமடைத்தொட்டி – நிலையூர் கண்மாய்

விரிசங்குளம், ஓ.ஆலங்குளம் கண்மாய்களுக்கு தண்ணீர் பிரிப்பதில் 1952 முதல் பிரச்னை உள்ளது. ஆயக்கட்டு பகுதிகளை கணக்கிட்டு தடுப்பணை அமைத்து இரு கண்மாய்களுக்கும் தண்ணீர் திறக்க வேண்டும். நீர்வரத்து கால்வாய்கள், ஓடைகள், கண்மாய்கள் ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட ஆட்சியர் தலைமையில் தனிக்குழு அமைக்க வேண்டும். குறிப்பாக நிலையூர் கண்மாய் ஆக்கிரமிப்பு குறித்து பலமுறை மனு அளித்தும், போராட்டங்கள் நடத்தியும் இதுவரை எந்த ஒரு தீர்வும் எட்டப்படவில்லை. நிலைகள் ஆக்கிரமிப்பு உயர்நீதிமன்ற உத்தரவுகளுக்கு செவிசாய்க்காமல் செயல்படும் அரசு அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூர்வார வேண்டும்.

மேலும் கூத்தியார்குண்டு பகுதியில் விவசாய விளைநிலங்களை தரிசு நிலங்களாக மாற்றப்பட்டு வீட்டுமனைகளாக விற்க முயற்சி செய்யும் செயலுக்கு தடையில்லா சான்றும், அனுமதியும் வழங்கக்கூடாது என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தும் வருகின்றர்.

என்ன தான் மாதம் மாதம் கூட்டம் போட்டு விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தாலும் எந்த அதிகாரிகளும் முறையாக செயல்படுவதில்லை என்றும், அரசு கொடுக்கப்பட்ட கடமைகளை செய்து முடித்துவிட்டோம் என்ற எண்ணத்தில் அரசு அதிகாரிகள் செயல் படுவதாகவும், மொத்தத்தில் இந்த கூட்டம் வெறும் பெயரளவுக்கு மட்டுமே நடைபெறுகின்றது என விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!