தமிழ்நாடுநாள் – ஆதரவும் எதிர்ப்பும்..ஸ்டாலினை ஓரங்கட்டிய சீமான்

நவம்பர் 1-ந் தேதி தமிழ்நாடு தினமாக கொண்டாடப்படும் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்ததோடு, அந்த கொண்டாட்டங்களுக்கு ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடும் செய்துள்ளார். ஆனால் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பதற்கு முன்பே கடந்த சில வருடங்களாக நாம் தமிழர் கட்சியின் சார்பாக தமிழ்நாடு கொடி வடிவமைக்கப்பட்டு தமிழ்நாடு முழுவதும் நவம்பர் 1ஆம் தேதி அக்கட்சியின் கொடிக்கம்பத்தில் தமிழ்நாட்டு கொடி ஏற்றப்பட்டு தமிழ்நாடு நாள் கொண்டாடப்பட்டு வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

அரசு விழா கொண்டாட வலியுறத்தல்:

முன்னதாக இப்படியாக ஒரு நாள் கொண்டாடப்பட வேண்டும் என்று தொடர்ந்து சட்டமன்றத்தில் வலியுறுத்தி பேசி வந்தார். தமிழ்மொழி பண்பாட்டுத்துறை அமைச்சர் பாண்டியராஜன், பல தமிழ் அமைப்புகளும், தமிழக தலைவர்களும், தமிழ் அறிஞர்களும், தமிழ் ஆர்வலர்களும் நாம் தமிழர் கட்சியனரும் தமிழ் மாநிலம் உருவான நவம்பர் 1-ந் தேதியை அரசே விழா எடுத்துக்கொண்டாட வேண்டும் என்று நீண்ட நாட்களாக வலியுறுத்தி வந்தனர். அந்த எதிர்பார்ப்பு இந்த ஆண்டு முதல் நடைமுறைக்கு வருகிறது.

மூவேந்தர்கள் ஆண்ட பூமி

“வடவேங்கடம் தென்குமரி ஆயிடை தமிழ் கூறும் நல்லுலகம்” என்று தொல்காப்பியம் கூறியுள்ளது என்ற போதிலும், தமிழ்நாடு என்ற நிலப்பரப்பு முழுதாக எப்போதாவது ஒரே தமிழ் அரசனின் கீழ் ஆளப்பட்டுள்ளதா? என்ற கேள்விக்கு பதில் சொல்வது சிரமம். ஏனெனில், இது சேர, சோழ, பாண்டியர் எனும் மூவேந்தர்கள் ஆண்ட பூமியாகும். அன்னியப் படையெடுப்புகளால் இந்த நிலப்பரப்பு கூறுபோடப்பட்டு, சிலகாலங்கள் சிலரால் ஆளப்பட்ட போதிலும் கூட, வேற்று மொழியினரான தெலுங்கர்கள், மராட்டியர்கள், சவுராஷ்டிரத்தினர் என பலர் வந்து குடியேறி ஆட்சி அதிகாரம் செய்த காலத்திலும் கூட, இந்த மண்ணில் வாழும் பூர்வகுடிகள் ‘தமிழ்நாடு’ என்ற உணர்வை ஒரு போதும் இழக்கவில்லை.
சென்னை ராஜதானி என்று ஆங்கிலேயர்கள் தங்கள் நிர்வாக வசதிக்காக ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகியவற்றின் சில பகுதிகளை உள்ளடக்கி ஆட்சி செய்த நிலப்பரப்பில் வாழ்ந்தவர் தான் மகாகவி பாரதியார். அன்றே அவர் தமிழ்நாட்டின் நிலப்பரப்பை நமக்கு உணர்த்தும் வண்ணம் ஒரு பாடல் எழுதியுள்ளார்.

நீலத் திரைகடல் ஓரத்திலே நின்று
நித்தம் தவஞ்செய் குமரி எல்லை வட
மாலவன் குன்றம் இவற்றிடையே புகழ்
மண்டிக்கிடக்கும் தமிழ்நாடு!

ஆக, நாம் அன்னியர் ஆட்சியில் அடிமைப்பட்டிருந்த காலத்திலும், ஒட்டுமொத்த இந்திய விடுதலைக்கான சுதந்திர போராட்டம் நடந்த போதிலும் கூட, தமிழ்நாடு என்ற கருத்தாக்கம் பாரதியார் போன்ற மிகப்பெரிய தேசியவாதிகளிடமே இருந்தது என்பது மறுக்கமுடியாததாகும். அதனால்தான் அன்று ‘தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி’ என்ற பெயர்தான் இருந்ததே தவிர ‘மதராஸ் காங்கிரஸ் கமிட்டி’ என்பதாக அழைக்கப்படவில்லை!

அப்படியிருந்தும் கூட, தமிழ்நாடு என்ற ஒரு மாநிலம் உருவாவதற்கு ஒரு நீண்ட நெடிய போராட்டமும், சில உயிரிழப்புகளும், தியாகங்களும் தேவைப்பட்டன என்பதே வரலாறு நமக்கு சொல்லும் உண்மையாகும்.

மொழிவாரி மாநிலங்கள் தேவையா? என்பதற்கு முதன் முதலாக எஸ்.கே.தார் கமிட்டி ஜூன் 1948-ல் அமைக்கப்பட்டது. அது தன் அறிக்கையை அதே ஆண்டு டிசம்பர் மாதம் சமர்ப்பித்தது. அதில், “மொழிவாரி மாநிலம் அவசியமில்லை. நிர்வாக வசதிக்கு ஏற்பத்தான் மாநிலங்கள் உருவாக்கப்பட வேண்டும்” என்று அது பரிந்துரைத்திருந்தது. காங்கிரஸ் கட்சிக்குள் இதற்காக உருவாக்கப்பட்ட ஜவகர்லால் நேரு, வல்லபாய் படேல், பட்டாபி சீதாராமையா என்ற மூவர் கமிட்டியும் இதே கருத்தைத்தான் வலியுறுத்தியது.

“இந்திய சுதந்திரத்திற்காக நாம் ஒன்றுபட்டு போராடினோம். அப்படி ஒன்றுபட்ட நாம் மொழிவாரியாக நம்மை ஏன் பிரித்துக் கொள்ளவேண்டும். மொழி உணர்வும், பிராந்திய உணர்வும் நம் ஒற்றுமையை குலைத்துவிடக்கூடாது. ஆகவே, இந்தியாவை நிர்வாக வசதி கருதி பிரித்து, அனைத்து பிரிவினரும் சமஉரிமை பெறும் வகையில் மாநிலங்களை உருவாக்கலாம்” என்றார் ஜவகர்லால் நேரு.

இந்த விஷயத்தில், சட்டமேதை அம்பேத்கரோ, “மொழிவாரி மாநிலம் என்பது தவிர்க்கமுடியாது. ஆனால், அதை முரட்டுத்தனமாகவோ, நிர்ப்பந்தமாகவோ உருவாக்கக் கூடாது. மொழிவாரியாக மாநிலங்களை பிரிப்பதில் சில ஆபத்துகளும் உள்ளன. மொழி உணர்வை கட்சிகள் அரசியல் ஆதாயங்களுக்கு பயன்படுத்தும் வாய்ப்புகள் உள்ளன. பிரிவினை உணர்வை தவிர்ப்பதற்கும், மக்களை ஒற்றுமைப்படுத்துவதற்கும் ஒரு தேசிய மொழியை ஆட்சி மொழியாக்க வாய்ப்புள்ளதா..? என்று பார்க்கவேண்டும்.” என்றார்.

தேசத் தலைவர்களின் கருத்தும், அதைத் தொடர்ந்து தார் கமிட்டி பரிந்துரையும் தெலுங்கு பேசும் மக்களை கொந்தளிக்க வைத்தது. போட்டி ஸ்ரீராமுலு என்ற காந்தியவாதி ஆந்திர மாநில கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரதத்தை மேற்கொண்டார். 1952 ஜூன் 9-ல் ஆரம்பித்து செப்டம்பர் 15-ல் அவர் தன் உயிரை நீத்தார். அவரது உண்ணாவிரதமும், அதைத் தொடர்ந்த மரணமும் தெலுங்கு மக்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தி, பல கலவரங்களுக்கு வித்திட்டது. கட்டுப்படுத்தவியலாத கலவரங்களையடுத்து, 1953 அக்டோபர் 1-ந்தேதி ஆந்திரா சுதந்திர இந்தியாவின் முதல் மாநிலமாக உண்டானது. இதைத் தொடர்ந்து, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பசல்அலி தலைமையில் மாநில மறுசீரமைப்பு கமிட்டியை பிரதமர் நேரு ஏற்படுத்தினார். இச்சூழலில், “மதராஸ் மனதே” என்ற கோஷத்தை எழுப்பி, “சென்னையை ஆந்திராவின் தலைநகராக்க வேண்டும்” என்றனர், தெலுங்கு மக்கள்!

ஆந்திரா கோரிக்கைக்கும் முன்பே 1938-லேயே சென்னை கடற்கரையில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு மாநாட்டில், மறைமலையடிகள், தந்தை பெரியார், சோமசுந்தரபாரதியார் ஆகியோர் “தமிழ்நாடு தமிழனுக்கே” என்ற முழக்கத்தை எழுப்பி இருந்தனர். அதே காலகட்டத்தில் சிலம்புச் செல்வர் ம.பொ.சி. தமிழ் மாநிலம் வேண்டும் என்று மாநாடுகள் நடத்தி வலியுறுத்தி வந்தார். ஆந்திரா உருவானதையடுத்து தமிழ்நாடு கோரிக்கையோடு சென்னையை காப்பாற்ற வேண்டிய அவசர அவசியமும் உண்டானது. “தலையை கொடுத்தேனும் தலைநகரை காப்போம்” என்ற முழக்கத்தை ம.பொ.சி. பிரபலப்படுத்தினார். ராஜாஜியோ, “சென்னையை ஆந்திராவிற்கு தந்துவிட்டால், அதற்கு ஒத்துழைப்பு தரும் சக்தி எனக்கில்லை. நான் ராஜினாமா செய்துவிடுவேன். நீங்கள் வேறு முதல்வரை தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்” என்று நேருவிடம் கூறிவிட்டார். இதையடுத்து “சென்னையை ஆந்திராவிற்கு தரப்போவதில்லை” என நேரு பகிரங்கமாக அறிவித்தார்.

மொழிவாரி மாநில போராட்டத்தில் தெலுங்கு மக்கள் ‘விசால ஆந்திரா’ என்றும், கன்னட மக்கள் ‘அகண்ட கர்நாடகம்’ என்றும், மலையாளிகள் ‘ஐக்கிய கேரளா’ என்றும், மராட்டிய மக்கள் ‘சம்யுக்த மகாராஷ்டிரம்’ என்றும், குஜராத்தியினர் ‘மகா குஜராத்’ என்றும் கேட்டுப் போராடினர். மொழிவாரி மாநில அறிவிப்பு 1956 நவம்பர் 1-ந்தேதி முதல் நடைமுறைக்கு வந்தது. இதையடுத்து இந்தியாவில் தமிழகம் உள்ளிட்ட 14 மாநிலங்களும், 6 யூனியன் பிரதேசங்களும் உருவானது. மற்ற மாநிலத்தவர்களுக்கு எல்லாம் அவர்கள் விரும்பிய பெயரே அந்தந்த மாநிலங்களுக்கு சூட்டப்பட்டது. ஆனால், தமிழ்நாட்டிற்கு மட்டும் ‘மதராஸ்’ என்ற பெயரே மாற்றமின்றி தொடரும் என்றானது. ஆனால், தமிழ்நாடு என்று பெயர் சூட்டவேண்டும் என்ற கோரிக்கையும், போராட்டங்களும் தொடர்ந்து தமிழகத்தில் நடந்தது. இந்த வகையில் தமிழ்நாடு பெயர் கோரிக்கைக்காக விருதுநகரில் சங்கரலிங்கம் என்ற 76 வயது தமிழ் போராளி 78 நாட்கள் தொடர்ந்து மனஉறுதியுடன் உண்ணாவிரதமிருந்து தன் இன்னுயிரை நீத்தார். அறிஞர் அண்ணா முதல்-அமைச்சராக பதவியேற்று 1967-ம் ஆண்டு ஜூலை 18-ல் மதராஸ் மாநிலத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டினார்.

தமிழ்பேசும் மக்களுக்கான மாநிலம் என்பது உறுதியானாலும், தமிழக எல்லைப் பகுதிகளை தமிழ்நாட்டோடு சேர்ப்பதற்கு மிகக்கடுமையான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. திருவாங்கூர் ராஜ்ஜியத்தின் அங்கமாகவிருந்த கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளை தமிழகத்துடன் இணைக்க வேண்டும் என்று மார்ஷல் நேசமணி தலைமையில் தெற்கு எல்லை போராட்டம் வெகு உக்கிரமாக நடந்தது. அவருடன் கவிமணி தேசிய விநாயகம்பிள்ளை, தாணுலிங்க நாடார், காந்திராமன், குஞ்சன் நாடார், நத்தானியேல் போன்றோரும் களத்தில் இறங்கி போராடினர். கடையடைப்பு போராட்டங்கள் வெற்றிகரமாக நடந்தன. மக்கள் எழுச்சியுடன் போராடியதையடுத்து துப்பாக்கி சூடு நடந்தது. இதில் 11 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதையடுத்து கன்னியாகுமரி மாவட்டம் கேரளாவிற்கு செல்லாமல் தடுக்கப்பட்டது.

இதே போல வடக்கு எல்லைகளை மீட்க ம.பொ.சி. தலைமையில் திருமலைப்பிள்ளை,கே.விநாயகம், மங்கலக்கிழார், சித்தூர் அரங்கநாதன், ந.சுப்பிரமணியன் போன்ற தளபதிகள் போராடி சிறை சென்றனர். இந்த போராட்டத்தில் கோவிந்தசாமி, பழனிமாணிக்கம் என்ற இரு தமிழர்கள் சிறையில் உயிர் நீத்தனர். இந்த போராட்டத்தால் 290 கிராமங்களை உள்ளடக்கிய திருத்தணியும், சித்தூர் மற்றும் புத்தூர் மாவட்டங்களின் சிறுபகுதியும் தமிழகத்திற்கு கிடைத்தது.

தமிழரசு வாரமாக கொண்டாடுங்கள்

எல்லைகளைப் பிரிப்பதில் மாநிலங்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினைகளை தீர்க்க படாஸ்கர் எல்லை ஆணையம் ஏற்படுத்தப்பட்டது.

அந்த ஆணையம் தமிழகத்திற்கு சேரவேண்டிய திருப்பதி, சித்தூர், நெல்லூர் மாவட்டங்களை ஆந்திராவிற்கு உறுதிபடுத்தியது.

தேவிகுளம், பீர்மேடு,நெய்யாற்றங்கரை, நெடுமாங்காடு பகுதிகளை கேரளாவிற்கு உறுதிபடுத்தியது.

ஓசூரின் சில பகுதிகள், கொள்ளேகால், கோலார் தங்கவயல் ஆகியவை கர்நாடகத்திற்கு உறுதிபடுத்தியது. இழந்த இந்த நிலப்பரப்புகள் தொடர்பான அதிருப்திகளும், சர்ச்சைகளும் அன்று முதல் இன்று வரை தமிழகத்தில் தொடர்ந்து கொண்டுதான் உள்ளன.

ஸ்டாலினை ஓரம் கட்டிய சீமான்

கடந்த சில வருடங்களாக நவம்பர் 1ம் தேதி தமிழ்நாடு நாள் நாம் தமிழர் கட்சியினர் மட்டும் தமிழ் அமைப்புகள் கொண்டாடப்பட்டு வந்த நிலையில்இந்த வருடம் தமிழக முதல்வர் ஸ்டாலின் சர்ச்சைக்குரிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தார் அந்த அறிவிப்பு என்னவென்றால் தமிழ்நாடு என பெயர் சூட்டப்பட்ட ஜூலை 18 தமிழ்நாடு நாளாகக் கொண்டாடப்பட வேண்டும்,அதற்கான அரசாணை வெளியிட உள்ளோம் எனவும் தெரிவித்திருந்தார். தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களின் அறிவிப்புக்கு எதிராக பலரும் கருத்து தெரிவித்து வந்த நிலையில் வழக்கம் போல் நாம் தமிழர் கட்சியின் சார்பாக தமிழ்நாடு முழுவதும் கிராமங்கள் தோறும் வீடுகள் தோறும் தமிழ் நாட்டுக் கொடியை ஏற்றி இனிப்புகள் வழங்கியும் தமிழ்நாடு நாளை வெகுசிறப்பாக கொண்டாடினர்.

தமிழ்நாடு நாள் விவகாரத்தில் ஸ்டாலின் மற்றும் திராவிட கட்சிகள் தமிழர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துவததாகவும், வரலாற்றைத் திரித்து காட்ட முற்படுவதாகவும், தமிழ், தமிழர், தமிழின வரலாறு போன்ற செயல்களில் சீமான் செய்வதே சரி எனவும் ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு, தமிழ்நாடு நாளை கொண்டாடப்படுவதில் சீமான் மீது இன்னும் நம்பிக்கை பிறக்கிறது எனவும் தமிழர்களுக்காகவும் தமிழ் வளர்ச்சிக்காகவும் நாம் தமிழர் கட்சியும் சீமானும் உறுதுணையாக நிற்பார்கள் என்று என்று தமிழ் அமைப்புகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழகப்பெருவிழா

சேலம் மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழ்நாடு நாள்- தமிழகப் பெருவிழா சேலம் அம்மாப்பேட்டையில் நேற்று நடந்தது.

விழாவில் பங்கேற்க வந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழ்நாடு நாளாக நவம்பர் 1-ம் தேதியை நாங்கள் தொடர்ச்சியாக கொண்டாடி வருகிறோம். இந்தாண்டு சேலத்தில் கொண்டாடுகிறோம். 1967-ம் ஆண்டு தமிழ்நாடு மாநிலமாக பிரிக்கப்பட்ட நாள் நவம்பர் 1. தமிழ்நாடு என பெயர் அறிவிக்கப்பட்ட நாள் ஜூலை 18. தமிழக அரசு ஜூலை 18-ம் தேதியை தமிழ்நாடு நாளாக அறிவித்துள்ளது.

குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக இந்த அறிவிப்பு உள்ளது. வரலாற்றை திரிக்கும் முயற்சியில் திராவிட கட்சிகள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன.

வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீட்டில் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்ந்த பிறகு உள் ஒதுக்கீடு ரத்து என நீதிமன்றம் கூறியிருப்பது எங்களை பொறுத்தவரை பெரிய ஏமாற்றம். மொழி மற்றும் சாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்த வேண்டும். சாதி எண்ணிக்கை அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என இவ்வாறு அவர் கூறினார்.

தமிழகப் பெருவிழாவில் சீமான் பேருரை

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!