ஆரத்தி எடுப்பது என்பது இரண்டு வகைப்படும். ஒன்று கோவிலில் இறைவனுக்கு எடுக்கும் ஆரத்தி. இன்னொன்று வீடுகளில் மனிதர்களுக்கு எடுக்கும் ஆரத்தி. ஆரத்தி எடுப்பது என்றாலே ஒருவித திருஷ்டி சுற்றுதல் என்பது தான் பொருளாகும். அலங்காரம் முடிந்து சுப நிகழ்சிகளில் பங்குபெற்று பலரின் கண்ணடிகளை பட்டதற்கு பரிகாரமாக ஆரத்தி எடுக்கப்படுகிறது. தெய்வங்களுக்கு எடுக்கும் ஆரத்தி, மஞ்சள் குங்குமத்தை சுத்தமான நீரில் கரைத்து இரண்டு நெய்விளக்குகள் ஏற்றி எடுக்க வேண்டும். எடுத்து முடித்த பிறகு அந்த நீரை மனிதர்கள் காலடி படாத துளசிச்செடியில் ஊற்ற வேண்டும்.
மனிதர்களுக்கு ஆரத்தி எடுத்தால் சுண்ணாம்பையும், மஞ்சளையும் கரைத்து நடுவில் கற்பூரம் ஏற்றி எடுக்கலாம். அதன்பிறகு அந்த நீரை வீதியில் அல்லது வீட்டு வாசலில் ஊற்றி விடலாம். இவ்வளவு விளக்கங்கள் போதும் என்று நினைக்கிறேன். இதற்கு மேல் சொன்னால் குழப்பங்கள் தான் வரும் எனவே மரபுகளை மீறாமல் பண்பாடுகளை கடைபிடியுங்கள். நல்லது நடக்கும்.