இரு சக்கர வாகனத்தோடு சேர்த்து சிமெண்ட் சாலை போட்டது ஏன்? அரசு தரப்பு விளக்கம் என்ன?
வேலூரில் இருசக்கர வாகனத்தோடு போடப்பட்ட சிமெண்ட் சாலை – மாநகராட்சி ஆணையர் விளக்கம்
வேலூர் மாநகரம் காளியம்மாள் கோவில் தெருவில் இரு சக்கர வாகனத்துடன் போடப்பட்டுள்ள சிமெண்ட் சாலை, சமூக வலைதளத்தில் பதிவிட்டதை தொடர்ந்து பலரின் கவனத்தை ஈர்த்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டியாக தேர்வு செய்யப்பட்டு, பல்வேறு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வேலூர் காளியம்மாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சிவா. இவரது இருசக்கர வாகனத்தை தனது கடைமுன்பு நிறுத்திவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். திரும்பி வந்து வாகனத்தை பார்த்த போது தெருவில் புதியதாக சிமெண்ட் சாலை போடப்பட்டிருந்தன.
அப்போது தெருவோரம் நிறுத்தி, வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை அகற்றாமல் சிமென்ட் சாலை போடப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ந்து போனார் சிவா.
வாகனத்தை எடுக்க முயற்சி செய்து பார்த்தபோது சிமெண்ட் கலவை இருகிவிட்டதால் எடுக்கமுடியவில்லை. பின்னர் போராடி, உடைத்து வண்டியை மீட்டுள்ளனர்.
இது குறித்து யுவராஜ் என்பவர் கூறுகையில், ‘இது என்னோட தம்பி வண்டி, சாலை போடவுள்ளதாக எந்த முன்னறிவிப்பும் செய்யப்படவில்லை. இரவோடு இரவாக திடீரென சாலை போட்டுள்ளனர். அப்போது எங்களுடைய வண்டியையும் சேர்த்து சாலை போட்டுள்ளார்கள். இது குறித்து சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்களிடம் கேட்டபோது ஏளனமாகவும், அலட்சியமாகவும் பதில் அளித்தனர். இப்போது எங்கள் வண்டியின் டயர்கள், ரிம்கள் நாசம் ஆகியதுதான் மிச்சம் என்றார்.
இச்சம்பவம் குறித்து வேலூர் மாநகராட்சி ஆணையர் அசோக்குமார் அவர்களிடம் “லெமூரியா நியூஸ் தமிழ்” கேட்டதற்கு, ‘இந்த சாலை போட்டு நடந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று களஆய்வு மேற்கொண்டோம். இருசக்கர வாகனத்தை அப்புறப்படுத்தாமல் சாலை போடப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட பொறியாளர் மற்றும் ஒப்பந்ததாரரிடம் சரியான விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
அவர்கள் அளிக்கும் விளக்கத்தை அடுத்து சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். ஆனால் இச்சம்பவம் குறித்து பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டதைத் தொடர்ந்து வைரலாக பரவி “இது திராவிட மாடல் சாலை” என தங்களது கருத்துக்களை தெரிவித்து நெட்டிசன்கள் கலாய்த்து வந்த நிலையில் பொதுமக்களும் சமூக வலைதளப் பயன்பாட்டார்களும் அதிகமாக பகிர்ந்து வந்தததில் உலகலாவிய அளவில் இச்சம்பவம் பேசப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.