பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு…மேதகு திரைப்படம் குறித்து சீமான் பேசுவார்-இயக்குனர் கிட்டு.

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பை தோற்றுவித்த தலைவருமான திரு. வே. பிரபாகரன் அவர்களின் ஆரம்ப கால வரலாற்றை மையமாக கொண்ட மேதகு திரைப்படம் OTT தளத்தில் வெளியாகயுள்ளது.

தமிழீழ விடுதலை போராட்ட வரலாற்றில் என்றும் நீங்கா இடம் பெற்ற போராளியும், தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பை தோற்றுவித்த தலைவருமான திரு. வே. பிரபாகரன் அவர்களின் ஆரம்ப கால வரலாற்றை மையமாக வைத்து “மேதகு” என்ற தமிழ் திரைப்படத்தை, தமிழீழ திரைக்களம் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த திரைப்படம் உலக தமிழர்கள் நன்கொடை திரட்டல் வாயிலாக உருவாக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் தமிழர்களின் உரிமைகள் எப்படியெல்லாம் பறிக்கப்பட்டு அவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது என்பதையும், அதனை தனது சிறு வயது முதல் பார்த்து கோபமடைந்த ஒரு சாதாரண இளைஞன் எப்படி தனது இனத்தின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்தும் முடிவுக்கு வருகிறான் என்பதை பற்றியும் மிகவும் யதார்த்தமாகவும் நேர்த்தியாகவும் படம் பிடித்துக்காட்டியுள்ளார் இயக்குனர்.

பல தடைகளுக்குப் பிறகு ‘மேதகு’:

திரையரங்குகளில் வெளிவர இருக்காது, ஓடிடி தளத்தில்தான் வெளியாகும் என்பது தெரிந்திருந்தது. எதற்கும் தயாராகவே இருந்தோம். அந்த வகையில், தற்போது ஓடிடி தளத்தில் ‘மேதகு’ வெளியாகியிருப்பதில் மகிழ்ச்சி.

படம் பொருத்தவரையில் இரண்டு விஷயங்களில் எங்களுக்கு பிரச்சனைகள் இருந்தது. ஒரு விஷயம் படத்துக்கு தேவையான பட்ஜெட். மற்றொன்று வெளியில் இருந்து வந்த எதிர்ப்புகள். ‘என்ன கதை செய்து கொண்டிருக்கிறீர்கள்? எங்கே இருக்கிறீர்கள்? என்பது போன்ற விசாரிப்புகள் வரும். இதனாலேயே உடனுக்குடன் நாங்கள் படப்பிடிப்பு தளத்தையும் மாற்ற வேண்டிய சூழலும் இருந்தது. ஆனால், படக்குழு நாங்கள் இளைஞர்கள் என்பதால், இந்த பிரச்சனைகளை எளிதில் சமாளிக்க முடிந்தது.

அவர்களுடைய பேச்சு வழக்கு, வலி இதுபோன்ற விஷயங்கள் எதுவும் உண்மையாக சித்தரிக்கமால், சினிமாவுக்காக சில விஷயங்கள் திரித்து காண்பிக்கப்படுகிறது. நாங்கள் நேசிக்கக்கூடிய தலைவரை இதுவரையிலும் சரியாக யாரும் காண்பிக்காதபோது, இளைஞர்கள் நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள்? உங்களை எப்படி நம்புவது?’ என்பதுதான் அவர்களது வாதமாக இருந்தது.

ஆனால், டீசர், ட்ரைய்லர் வெளியானதும் அதில் இடம்பெற்ற காட்சிகள் பார்த்ததும் அவங்களுக்கு சரியாகதான் காட்டியிருப்போம் என்ற நம்பிக்கை வரத்துவங்கியது. படம் இப்போது வெளியானதும் மேலே சொன்ன விஷயங்கள் எல்லாம் மாறியிருக்கிறது.

எங்களுக்கு நம்பிக்கையை கொடுத்தது :

பின்பு துணிந்து ஒரு குறும்படம் எடுத்தோம். ‘மேதகு’ படத்தின் க்ளைமேக்ஸ்தான் அந்த குறும்படத்தின் முழுக்கதையும். அதாவது, துரையப்பா படுகொலை மட்டுமே முழுதாக அதில் எடுத்திருப்போம். அந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பு எங்களுக்கு நம்பிக்கையை கொடுத்தது. அதன்பிறகுதான், பிறப்பில் இருந்து துரையப்பா படுகொலை வரை கூத்து வாயிலாக ஒரு பாகம் சினிமாவாக எடுக்கலாம் என்று எண்ணினோம். ஆனால், பட்ஜெட் காரணமாக இது உங்களுக்கு டாக்குமெண்ட்ரி படமாக தோன்ற வைக்கலாம். இதை ஒரு இயக்குநராக ஒத்து கொள்கிறேன். அடுத்தடுத்த பாகங்களில் இந்த குறைகள் சரிசெய்யப்படும். இப்போது நாங்கள் கொடுத்திருப்பதை எங்களால் முடிந்த அளவு சரியாகவே செய்திருக்கிறோம் என நம்புகிறேன்.

மேதகு பட்ஜெட் படம் :

நிறைய பேர் உதவி செய்தார்கள். ஆரம்பத்தில் அமெரிக்காவில் இருந்து ஜாய், வசந்த், ஜெயசீலன், அரவிந்த் என நான்கைந்து பேர் கொண்ட குழு எங்களுக்கு உதவி செய்ய முன் வந்தார்கள். அதேபோல், அமீரகத்தில் தீபக் சாலமன், ரவி இவர்களுடைய நண்பர்கள் என அங்கு ஒரு குழு, லண்டன், தமிழ்நாடு என நண்பர்கள் குழு அவர்களால் முடிந்த அளவிற்கு எங்களுக்கு நிதி திரட்டி கொடுத்தார்கள்.

படத்தின் பட்ஜெட்டாக 30-35 லட்சம் கணக்கிட்டோம். ஆனால், முடிக்கும் போது 62-65லட்சத்திற்குள் வந்தது. இதிலும் 15 லட்ச ரூபாய் வெளியே வாங்கியிருந்தோம். அதையும் ரமேஷ் என்பவர் எங்களுக்கு தந்து உதவி செய்தார். இந்த நம்பிக்கையை மனதில் வைத்து, பட்ஜெட்டுக்கு ஏற்றார்போல, கதையை மீண்டும் மாற்றி எடுத்தோம். இந்த சிக்கல் படத்தின் அடுத்தடுத்த பாகங்களுக்கு இருக்காது என்று நினைக்கிறேன்.

உண்மையான விஷயங்களை காட்டினால் அதை மக்கள் பார்ப்பார்களா என்ற பயம் பெரும்பாலான படைப்பாளிகளுக்கு உள்ளது. இந்த படம் அந்த பயத்தை முற்றிலுமாக நீக்கியிருக்கிறது என்றே சொல்வேன். இனிமேல், ஈழத்தமிழர்களுடைய போராட்ட வரலாற்றை சொல்லும் படங்கள் அதிகம் வரும் என்றே நினைக்கிறேன்”.

படம் வெளியானால் சிக்கல்:

படத்தின் முன்னாட்டம் (Preview Show) காண்பித்த பிறகு உண்மை வரலாற்றைதான் காண்பித்திருக்கிறோம் என்ற நம்பிக்கை அனைவருக்கும் வந்தது. கடந்த மே 22-ல் படம் வெளியாகியிருக்க வேண்டியது. ஆனால், முன்பு படம் வெளியாக இருந்த ஓடிடி தளம் பின்வாங்கியது. மே 21 அன்று இரவு ‘இந்த படம் வெளியானால் எங்களுக்கு சிக்கல்’ என தொலைபேசியில் அழைத்து சொன்னார்கள். அதன் பிறகுதான் நாங்கள் பிஎஸ் வேல்யூ ஓடிடி தளத்தை அணுகினோம். ‘எந்த பிரச்சனை என்றாலும் பார்த்துக்கொள்ளலாம். நல்ல கதை இது’ என படத்தை வெளியிட அவர்கள் தைரியமாக முன்வந்தார்கள்.

தமிழர்களுடைய வரலாற்றையும், போராட்டத்தையும் கொண்டு போய் சேர்க்க டிஜிட்டல் தளம் உருவாக வேண்டும் என்ற ஆசையும் உண்டு

தெருக்கூத்துக் கலையை அழியவிடக்கூடாது:

என்னுடைய தாத்தா ஒரு கூத்தாடி. இதற்கு முன்பு கூத்து கலைகளை வீர வரலாற்றை சொல்வதற்கும், மதம், கடவுளுடைய வாழ்க்கை வரலாறு சொல்வதற்கும் பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால், தற்போதுள்ள கூத்து முறைகளில் ஆபாசமாக பேசுவது என சில இடங்களில் கொச்சைப்படுத்த ஆரம்பித்து விட்டார்கள்.

அந்த உடைகள் எல்லாம் போட்டுக்கொண்டு அவர்கள் கம்பீரமாக இருக்கும் போது, கம்பீரமான கதையைதான் சொல்ல வேண்டும் என்ற ஆசை இருந்தது. கூத்து கலைஞர்களை மக்கள் இனி திரும்பி பார்க்க வேண்டும், இந்த கலையை அழிய விடக்கூடாது, நிறைய பேர் இதில் வர வேண்டும் என்ற நோக்கத்திற்காக இந்த முறையை தேர்ந்தெடுத்தேன்”.

பயிற்சி கொடுத்து நடிக்க வைத்தோம்:

இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் ரியாஸ், இசையமைப்பாளர் பிரவீன் குமார் இவர்கள் என்னுடைய முந்தைய குறும்படத்தில் வேலை பார்த்தவர்கள். தலைவர் மேல் இவர்களுக்கு ஈர்ப்பு இருந்தது. படத்திற்கு கிடைத்த இந்த தளத்தை சரியாக பயன்படுத்த வேண்டும் என்று நினைத்தார்கள். இவர்கள் மட்டுமல்ல, ஒப்பனைக்கலைஞர் அப்துல், கலை இயக்குநர் அனைவரும் அர்ப்பணிப்புடன் செய்தனர்.

நடிகர்கள் தேர்வுக்கு கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் எடுத்து கொண்டோம். கதாப்பாத்திரத்திற்கு நடிகர்கள் பொருத்தமாக இருப்பார்கள் என்று தோன்றினால், அவர்களுக்கு நடிப்பு பயிற்சி கொடுத்து நடிக்க வைத்தோம்”.

முதலிலேயே சொன்னது போல, இது ஒரு பட்ஜெட் படம். கதை யாரை நோக்கி நகர்கிறது என்பது தெளிவாக தெரிந்ததே. தேசிய தலைவருடைய எண்ண மாற்றங்கள், போராட்டங்கள் அதை மட்டுமே காண்பிக்க முடியும். உதாரணமாக பொன். சிவக்குமார் அவரை பற்றி முழுதாக காட்டவில்லை என்கிற விமர்சனம் உண்டு. அவருடைய தியாகம் குறித்து மட்டுமே இரண்டு மணி நேர கதையாக தனியாக எடுக்கலாம்.

ஆனால், இது தலைவருடைய வாழ்க்கை வரலாறு என்பதால் அவருடைய எண்ணங்களில் மாற்றம் வருவதற்கான காரணங்கள் அதற்கான சம்பவங்கள் நோக்கியே படத்தை நகர்த்த வேண்டும் என நினைத்தோம். இப்போது நிறைய இயக்குநர்கள் வருகிறார்கள். இந்த படத்திற்கு பின்பு எதெல்லாம் நாங்கள் சரியாக, விரிவாக காட்டவில்லை என்று நினைக்கிறார்களோ அதை விரிவான படமாக காட்டினால் மகிழ்ச்சிதான்

முன்னாள் போராளி அழைத்து பேசினார்:

நிறைய அழைப்புகள் வந்து கொண்டே இருக்கிறது. சமூகவலைதளங்களிலும் படம் குறித்து பேசியிருக்கிறேன். இயக்குநர் வெற்றிமாறன் அவர் படம் பார்த்து விட்டு படம் குறித்தான விமர்சனத்தையும் அவருடைய கருத்தையும் பகிர்ந்தார். அவர் மட்டுமில்லை, இயக்குநர்கள் மாரிசெல்வராஜ், பொன்வண்ணன், அமீர், சேரன் இவர்கள் எல்லாரும் வாழ்த்து சொன்னார்கள்.

இவற்றை எல்லாம் விட முக்கியமாக படம் வெளிவந்த முதல் நாள் எனக்கு ஒரு அழைப்பு வந்தது. பேசிய பையன், ‘தலைவரை பார்த்துட்டேன்’ என அழுது கொண்டே பேசினான். முன்னாள் போராளி ஒருவரும் அழைத்துப்பேசி , ‘எங்கள் போராட்டத்தில் முக்கியமான பகுதி இது’ என சொன்னது நெகிழ்ச்சியாக இருந்தது.

படம் குறித்து சீமான்:

சீமான் அண்ணன் சென்னையில் இல்லை. நேற்று இரவு அவர் படம் பார்த்துவிட்டதாக செய்தி கேள்விப்பட்டேன். கண்டிப்பாக படம் குறித்து பேசுவார். அதுபோல, நிறைய அரசியல் தலைவர்கள் இன்று, நாளைக்குள் படம் பார்ப்பதாக சொல்லியிருக்கிறார்கள்”.

அடுத்தடுத்த பாகங்களுக்கான கதைகள் எல்லாம் தயார் செய்ய இருக்கிறோம். அடுத்து எப்போது படப்பிடிப்பு தொடங்கும் போன்ற விவரங்கள் எல்லாம் ‘தமிழீழத் திரைக்களம்’ சார்பாக முறையாக அறிவிக்கப்படும். கதையின் தேவையை பொறுத்து 3லிருந்து 5 பாகங்கள் வரை எடுக்க திட்டமிட்டுள்ளோம் என இப்படத்தின் இயக்குனர் கி. கிட்டு தெரிவித்தார்.

Leave a Reply

error: Content is protected !!