
திருச்செந்தூரில் குடமுழுக்கு: குவியத்தொடங்கிய பக்தர்கள் கூட்டம்
டிரோன் மூலம் புனிதநீர் தெளிக்க ஏற்பாடு
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாளை நடைபெறவிருக்கும் குடமுழுக்கை காண்பதற்காக பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்த வண்ணம் உள்ளனர். பக்தர்கள் மீது டிரோன் மூலம் புனிதநீர் தெளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முருகனின் அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குடமுழுக்கு விழா நாளை (திங்கட்கிழமை) நடக்கிறது. இதையொட்டி மூலவர், பார்வதி அம்பாள், கரிய மாணிக்க விநாயகர், வள்ளி, தெய்வானை அம்பாள் ஆகிய தெய்வங்களுக்கு கோவில் உள்பிரகாரத்தில் யாக பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
மேலும், ராஜகோபுர அடிவாரத்தில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள யாகசாலை மண்டபத்தில் கடந்த 1-ந் தேதி முதல் யாகசாலை பூஜைகள் தொடங்கியது. தினமும் காலை, மாலை என ஒவ்வொரு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
யாகசாலை பூஜையில், வேத பாராயணம், திருமுறை விண்ணப்பம் மற்றும் நாதசுர இன்னிசையும், பெண் ஓதுவாா்கள் உள்பட 108 ஓதுவார் மூா்த்திகளைக் கொண்டு பக்க வாத்தியங்களுடன் பன்னிரு திருமுறைகள், திருப்புகழ் மற்றும் கந்தர் அனுபூதி முதலான செந்தமிழ் வேதங்கள் முற்றோதுதல் நடைபெற்றது. யாகசாலை பூஜைகளில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
6ம் நாள் யாகசாலை பூஜை

இன்று காலை 6ம் நாள் பூஜையில் சுவாமி சண்முகர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு இன்று 10–ம் கால யாகசாலை பூஜை, மகா தீபாராதனை நடந்தது. இன்று மாலையில் 11–ம் கால யாகசாலை பூஜைகளும், நாளை (திங்கட்கிழமை) அதிகாலை 12ம் கால யாகசாலை பூஜைகளும் நடக்கின்றது. காலை 6.15 மணிக்கு மேல் 6.50 மணிக்குள் ராஜகோபுரம் கும்ப கலசங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.
அதேநேரத்தில் மூலவர், சண்முகர், வள்ளி, தெய்வானை, பெருமாள், நடராஜர் மற்றும் அனைத்து பரிவார மூர்த்தி சுவாமிகளுக்கும் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. கும்பாபிஷேக ஏற்பாடுகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன.
ஏற்பாடுகளை திருக்கோயில் தக்கார் ரா.அருள்முருகன், இணை ஆணையர் சு.ஞானசேகரன் மற்றும் திருக்கோயில் பணியாளா்கள் செய்து வருகின்றனர்.
10 லட்சம் பக்தர்கள்
கூடுவார்கள்…
15 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் இந்த கும்பாபிஷேக விழாவை காண சுமார் 10 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு பணியில் 6 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். மேலும் 25 மருத்துவக் குழுக்களும், 27 இடங்களில் தீயணைப்பு வாகனங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
பக்தர்கள் எந்தவித நெருக்கடியும் இன்றி விழாவை காணும் வகையில் கோவில் கடற்கரையில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு உள்ளன. அங்கு பாதுகாப்பு கருதி மின் விளக்குகள் மற்றும் கண்காணிப்பு கோபுரங்களும் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. அதேபோல் கும்பாபிஷேகத்தை பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் நேரலையில் காணும் வகையில் எல்.இ.டி. திரைகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன.
கடற்கரையில்
சிறப்பு ஏற்பாடு
கோவில் முன்புள்ள கடலில் ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் மற்றும் தீயணைப்பு மீட்புக் குழுவினர் பாதுகாப்பு ஒத்திகை நடத்தினர்.
கடலில் பக்தர்கள் யாரேனும் சிக்கிக்கொண்டால், அவர்களை எவ்வாறு மீட்பது என்பது குறித்த ஒத்திகை இன்று கோவில் முன்புள்ள கடலில் நடைபெற்றது. பத்துக்கும் மேற்பட்ட படகுகள் கோவில் கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்தன. தீயணைப்பு மற்றும் மீட்புப் படை குழுவினர்களும், ஆழ்கடலில் பயிற்சி பெற்ற 20க்கும் மேற்பட்ட நீச்சல் வீரர்களும் லைப் ஜாக்கெட்டுகள் மற்றும் அதிநவீன கருவிகளுடன் படகுகளில் தயார் நிலையில் இருந்தனர். இவர்கள் கடலில் குறிப்பிட்ட எல்லை வரை செல்லக்கூடிய இடங்களில் சென்று பக்தர்கள் யாரும் கடலில் சிக்கினால் அவர்களை மீட்டெடுப்பதற்கான வழிமுறைகள் குறித்துப் பயிற்சி செய்தனர்.
கும்பாபிஷேகம் நடக்கும்போது முக்கிய பிரமுகர்கள் உட்பட 1,200 பேர் மட்டுமே கோவிலுக்கு மேல் பகுதியில் அனுமதிக்கப்படுவர் என கூறப்பட்டுள்ளது.மேலும், கோவில் வளாகத்தில் இருந்து அய்யா கோவில் வரை கடற்கரையோரம் பக்தர்கள் நிற்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
டிரோன் மூலம்
புனிதநீர் தெளிப்பு
பக்தர்கள் மீது புனிதநீர் தெளிப்பதற்காக டிரோன் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. மொத்தம் 20 டிரோன்கள் இதற்காக தயார் நிலையில் உள்ளன. இதன் செயல்பாடுகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட்ஜான் நேற்று நேரில் பார்வையிட்டார். மேலும் பாதுகாப்பு ஏற்பாடுகள், போலீஸ் கட்டுப்பாட்டு அறையையும் ஆய்வு செய்தார்.
பக்தர்கள் வசதிக்காக பல்வேறு ஊர்களில் இருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகின்றன. இதற்காக திருச்செந்தூரில் 3 தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
இன்றுடன் தரிசனம் நிறுத்தம்

சாதாரணமாக திருக்கோயில்களில் மருந்து சாத்திய பிறகுதான் கும்பாபிஷேகம் நடைபெறும். திருச்செந்தூர் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்த பின்னரே மருந்து சாத்தும் நிகழ்வு நடைபெறுவது மரபாக உள்ளது. இதை முன்னிட்டு பக்தர்கள் இன்று (6–ந்தேதி) பகல் 12 மணிவரை மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். அதன் பிறகு 7ம் தேதி கும்பாபிஷேகம் நிறைவு பெற்ற பின், கோவிலில் பின்பற்றப்பட்டு வரும் மரபு மற்றும் கடந்த கும்பாபிஷேக பழக்க வழக்கங்கள், பாராம்பரிய நடைமுறைகளின்படி, சுவாமிக்கு அபிஷேகங்கள், மருந்து சாத்துதல் உள்ளிட்ட பூஜைகள் நடைபெறும். அதற்கு பின்னரே பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.