மதுரை திருப்பரங்குன்றம் அருகே கார் எரிந்து நாசம்… நான்கு பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்!

மதுரை திருப்பரங்குன்றம் அருகே கார் எரிந்து நாசம்… நான்கு பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்!

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே தோப்பூர் நான்கு வழிச்சாலையில் இன்று காலையில் மின் கசிவு காரணமாக மாருதி ஆம்னி கார் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்து முற்றிலும் நாசமானது.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள் சுரேஷ் வயது 37, பாரதி வயது 38, பிரகாஷ் வயது 38, மற்றும் கிருஷ்ணன் வயது 35 ஆகிய நான்கு நண்பர்கள் ஆவர். மதுரையில் பிரசித்தி பெற்ற பாண்டி கோவிலில் சாமி கும்பிடுவதற்காக ஆம்னி காரில் உடுமலைப்பேட்டையில் இருந்து மதுரை நோக்கி வந்து கொண்டிருந்தனர். காரை கிருஷ்ணன் என்பவர் ஓட்டி வந்துள்ளார்.

ஆம்னி கார் திருப்பரங்குன்றம் அருகே உள்ள தோப்பூர் நான்கு வழிச்சாலையில் வேகமாக வந்து கொண்டிருந்தபோது, திடீரென காரின் முன்பகுதியில் இருந்து கரும்புகை வெளியேறத் தொடங்கியுள்ளது. முதலில் சாதாரண புகையாக நினைத்தவர்கள், புகை அதிகமாக வருவதை கண்டு சுதாரித்துக் கொண்டனர். உடனடியாக காரை தோப்பூர் கார் கம்பெனி அருகே சாலையோரமாக நிறுத்திவிட்டு நான்கு பேரும் அவசர அவசரமாக கீழே இறங்கியுள்ளனர்.

அவர்கள் இறங்கிய அடுத்த சில நொடிகளில் கண்ணிமைக்கும் நேரத்தில் தீ மளமளவென கார் முழுவதும் பரவியது. காரில் பற்றிய தீ கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் அதிர்ச்சியுடன் பார்த்தனர். தீயின் தாக்கத்தால் கார் முற்றிலும் எரிந்து எலும்புக்கூடாக மாறியது. காரில் இருந்த பொருட்கள் அனைத்தும் தீயில் கருகி நாசமாகின.

இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் திருப்பரங்குன்றம் தீயணைப்பு நிலையத்தில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனால் அதற்குள் கார் முழுமையாக சேதமடைந்துவிட்டது.

இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக நான்கு பேரும் எந்தவித காயமும் இன்றி உயிர் தப்பினர். இல்லையெனில் பெரும் உயிர் சேதம் ஏற்பட்டிருக்கும்.

தகவல் அறிந்த ஆஸ்டின்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் மின் கசிவு காரணமாகவே தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிய வந்துள்ளது. மேலும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

நான்கு வழிச்சாலையில் ஆம்னி கார் தீப்பற்றி எரிந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் போலீசார் வாகனங்களை மாற்றுப் பாதையில் திருப்பி விட்டனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!