2019ம் ஆண்டுக்கான சிறந்த ஒளிப்பதிவாளராக தேர்வு செய்யப்பட்ட வேல்ராஜ் அவர்களுக்கு SIIMA AWARDS 2021 சைமா விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
” தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது” எனப்படும் “SIIMA AWARDS 2021” சைமா விருதுகள் சினிமாவில் சிறந்து விளங்கும் நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், ஒளிப்பதிவாளர்கள், நகைச்சுவை நடிகர்கள், இசையமைப்பாளார்கள், துணை கதாபாத்திரங்கள் என அனைவருக்கும் சைமா விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த 7 ஆண்டுகளாக கொடுக்கப்படும் இந்த விருதுகள் பொதுமக்களின் வாக்குகளின் அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது.கடந்த ஆண்டு 2020ல் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைக்காக சைமா விருதுகள் வழங்கும் நிகழ்வு நடைபெறவில்லை.
அந்த வகையில் கடந்த 2019 & 2020ஆம் ஆண்டிற்கான சைமா விருதுகள் ஐதராபாத்தில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தமிழ்த் திரைப்படத்தின் சிறந்த ஒளிப்பதிவாளராக வேல்ராஜ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான “அசுரன்” திரைப்பட ஒளிப்பதிவிற்காக இந்த விருது வேல்ராஜ் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
‘அசுரன்’ திரைப்படம் பூமணி எழுதிய ‘வெக்கை’ நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவான திரைப்படம். சாதி ஆதிக்கத்தின் அவலச் சூழலையும், கல்வியின் முக்கியத்துவத்தையும் இப்படம் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
‘வெக்கை’ நாவலை படத்தின் முதல் பகுதியில் கதையின் டேக் ஆஃப்-க்காக பயன்படுத்தி இருக்கும் வெற்றிமாறன், உள்ளபடியே அந்த நாவலை அடிப்படையாக மட்டுமே எடுத்துக்கொண்டு இரண்டாம் பகுதிக்கு தனது பாணியில் திரைக்கதை எழுதி அசத்தி இருப்பார். பீரியட் ஃபிலிமாக எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் அக்காலத்தில் இருந்த சாதியக் கொடுமைகள், உயர்ச் சாதியினரின் அராஜகப் போக்கு என எல்லாவற்றையும் துணிச்சலாக பதிவு செய்திருப்பார் வெற்றிமாறன்.
ஊருக்குள் செருப்பு அணிந்து சென்ற தனுசின் அக்கா மகள் அவமானப்பட, அங்கிருந்து கிளம்பிய பகையொன்றின் கிளைக்கதையை இரண்டாம் பாதியில் உருவாக்கி, அதனை ‘வெக்கை’யின் மூலக்கதையுடன் மிகச்சரியாக பொருத்தி இருப்பார் வெற்றிமாறன்.
இறுதிக்காட்சியில் “நம்மகிட்ட இருந்து நிலத்தை பறிக்கலாம், காச திருடலாம், ஆனா படிப்ப மட்டும் யாரும் திருட முடியாது நல்லா படிக்கணும்” என தனுஷ் கதாபாத்திரம் பேசும் வசனம் தியேட்டரில் கைத்தட்டல்களை அள்ளியது நினைவுகூரத்தக்கது.
SIIMA AWARDS 2021 சைமா விருது பெற்ற வேல்ராஜ் அவர்களுக்கு திரைத்துறையினரும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.