
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று (மே 3) வெகு விமரிசையாக நடந்தது.
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஹரஹர சங்கர, ஜெய ஜெய சங்கர கோஷங்களை எழுப்பி 4 மாசி வீதிகளிலும் திரண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
தேரோட்டத்தை ஒட்டி நகரின் முக்கியப் பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நகர் முழுவதும் 3000க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் 12 நாட்கள் நடைபெறும் சித்திரைத் திருவிழாக்கள் ஏப்.23-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி மே 4-ம் தேதி வரை நடைபெறுகிறது.தினமும் காலை, மாலை என இருவேளை சுவாமி புறப்பாடு மாசி வீதிகளில் நடைபெற்று வருகிறது. இதில் எட்டாம் நாள் திருவிழாவாக மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் ஏப்.30ல் நடைபெற்றது. அடுத்த நாள் மே 1-ல் மீனாட்சி சுந்தரேசுவரர் திக்குவிஜயம் நடைபெற்றது. சிகர நிகழ்ச்சியான மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று மே 2-ல் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பெண்கள் திருமண வைபோகத்தின் போது தங்கள் திருமாங்கல்யத்தை புதுப்பித்து கட்டி கொண்டனர்.

சொக்கருடன் தேரில் வருவது மீனாட்சி இல்லையா? அதனைத் தொடர்ந்து இன்று (மே 3) தேரோட்டம் நடைபெற்றது.
சித்திரைத் திருவிழாவின் 11-வது நாளான இன்று மாசி வீதிகளில் தேரோட்டம் கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. தேரோட்டத்தில் கலந்துகொண்ட பக்தர்கள் ஹர ஹர சங்கரா சிவாய சங்கரா எனப் பக்தி முழக்கங்களை எழுப்பியபடி பக்தர்கள் தேரை இழுத்து வருகின்றனர். அலங்கரிக்கப்பட்ட பிரமாண்டமான பெரிய தேரில் சுந்தரேஸ்வரர் சுவாமியும் பிரியாவிடை அம்மனும் பவனி வந்து காட்சி அளித்து வருகிறார். சிறிய தனித்தேரில் சிறப்பு அலங்காரத்தில் மீனாட்சி அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சியளித்து வருகிறார்.
நாளை மே 4-ம் தேதியுடன் மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா நிறைவு பெறுகிறது. அதற்கு அடுத்த நாள் மே 5-ல் கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருள்கிறார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.