டெல்லியில் டி.டி.வி.தினகரன் நடத்திய ரகசிய பேச்சுவார்த்தை; தமிழக அரசியலை மையம் கொள்ளும் ‘சசிகலா புயல்’: அதிமுக – அமமுக இணைப்பை சாத்தியமாக்குமா பாஜக?

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையேயான முரண் உச்சக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் திடீரென டெல்லி சென்று ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியிருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா அடுத்த ஆண்டு ஜனவரி 27-ம் தேதி விடுதலை ஆவார் என சிறை நிர்வாகம் கூறியுள்ளது. ஆனால் சசிகலா தரப்பு வழக்கறிஞர்கள் அவர் விரைவில் விடுதலையாக இருப்பதாக தொடர்ந்து கூறி வருகின்றனர். சிறைத்துறை விதிமுறைகளையும், அரசியல் வளையங்களையும் கடந்து சசிகலாவை விரைவில் வெளியே கொண்டு வருவதற்கான வேலைகளில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்நெருங்கும் நிலையில் சசிகலாவின் வருகை அரசியல் களத்தில் புதியமாற்றங்களை ஏற்படுத்தும்; அதிமுகவிலும், கூட்டணிகள் உருவாவதிலும் சசிகலாவின் தாக்கம் நிச்சயம் இருக்கும் என்ற கருத்து எழுந்துள்ளது. இதனால் திமுக கூட்டணியில் இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் போன்றவர்களே, ‘சசிகலா பலம் வாய்ந்த தலைவர்தான்’ என சொல்ல ஆரம்பித்துள்ளனர். ம.நடராஜன் குடும்பத்துக்கு நெருக்கமான வைகோ, ஜி.கே.வாசன் ஆகியோரும் சசிகலா தரப்புடன் தொடர்பில் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் டி.டி.வி தினகரன்,‘சிறையில் சசிகலாவின் உடல்நிலை சீராக இல்லை. தேர்தலுக்கு சில மாதங்களே இருக்கும் நிலையில் அதாவது ஜனவரி மாதத்தில் அவர் வெளியேவந்தால் அரசியல் காய் நகர்த்தல்களை எதிர்பார்த்த அளவுக்கு கச்சிதமாக நகர்த்த முடியாது. முன்கூட்டியே சசிகலாவை வெளியே கொண்டு வர வேண்டும். இதற்காக ரூ. 10 கோடி அபாரதம் செலுத்தும் முயற்சியிலும், சிறை விதிமுறைகளின்படி சலுகைகளை பெறவும், பாஜகவிடம் பேச்சுவார்த்தை நடத்தவும் முடிவெடுத்தார்.

இதனிடையே அதிமுக அமைச்சர்கள் சிலர் ரகசியமாக கூடி, தேர்தலில் திமுகவை சமாளிக்க வேண்டும் என்பதற்காக சசிகலாவை ஏற்க சம்மதம் தெரிவித்துள்ளனர். இதையறிந்த பாஜக மேலிடம் அதிமுகவையும் அமமுகவையும் இணைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. இணைப்புக்கான பேச்சுவார்த்தை இரு தரப்பிலும் வேகமாக நடந்து வருவதாக உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமித் ஷாவுக்கு நெருக்கமானோருடன் ..

இந்நிலையில் கடந்த 5 மாதங்களாக எந்த பொது நிகழ்ச்சியிலும் பங்கேற்காமல் இருந்த அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கடந்த 20ம் தேதி காலை தனி விமானம் மூலம்திடீரென டெல்லி சென்றார். அமமுக மூத்த தலைவர்களுக்கே தெரியாமல் அரங்கேறிய இந்த ரகசிய பயணத்தில், இரட்டை இலை சின்ன வழக்கில் லஞ்சம் கொடுக்க முயன்றதாக டி.டி.வி.தினகரனுடன் கைதான மல்லிகார்ஜுனா, உதவியாளர் ஜனார்த்தனன் மட்டுமே உடன் சென்றனர்.

இந்த தகவல் ஊடகங்களில் வெளியானதும் டி.டி.வி. தினகரன், சசிகலாவின் விடுதலை குறித்தும் இரட்டை இலை வழக்கு குறித்தும் மூத்த வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தச் சென்றதாக அமமுக சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் டி.டி.வி. தினகரன் பாஜக மேலிடத்துடன் முக்கியமான பேச்சுவார்த்தையை நடத்தியதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து டெல்லி பாஜக வட்டாரத்தில் விசாரித்த போது, ‘ ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் பாஜக மூத்த தலைவர்கள் பலரும் சசிகலா, டி.டி.வி. தினகரன் ஆகியோருடன் தொடர்பில் இருக்கின்றனர். பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி சசிகலாவை சிறையிலே சென்று பார்த்துள்ளார். அதன்பிறகு சுப்பிரமணியன் சுவாமிக்கு நெருக்கமான முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்திரலேகா இரு முறை சசிகலாவை சந்தித்து பேசினார்.

பாஜக – சசிகலா இடையே பேச்சுவார்த்தை சுமூகமாக சென்ற வேளையில், பாஜக தரப்பில் வைக்கப்பட்ட சிலமுக்கியமான நிபந்தனைகளை சசிகலாஏற்கவில்லை. இதனால் பேச்சுவார்த்தையில் சற்று சுணக்கம் ஏற்பட்டது. இந்த இடைப்பட்ட காலத்தில் சசிகலா தரப்புக்கு நெருக்கமான 1200க்கும் மேற்பட்டஇடங்களில் வருமான வரி சோதனை நடந்தது. இதனால் சசிகலா, பாஜக மீது அதிருப்தி அடைந்ததால் பேச்சுவார்த்தையில் சுணக்கம் ஏற்பட்டது. தற்போது தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் டி.டி.வி. தினகரன் மீண்டும் பாஜகவுடன் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளார்.

இதன் அடுத்தகட்டமாக டி.டி.வி.தினகரன் டெல்லி வந்து, ‘லீ மெரிடியன்’ நட்சத்திர விடுதியில் ரகசியமாக தங்கினார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கரோனா சிகிச்சை முடிந்து வீட்டில் ஓய்வில் இருப்பதால் டி.டி.வி.தினகரனால் அவரை சந்திக்க முடியவில்லை. இதனால் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட மூத்த தலைவர்களை சந்திக்க நேரம் கேட்டார். ஆனால் டி.டி.வி. தினகரனுக்கு அனுமதி கிடைக்காததால் அவர்களையும் சந்திக்க முடியவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!