லவ்டுடே பட பாணியில் செல்போனை மாற்றிய போது சிக்கினார்-காதலிப்பதாக கூறி 10-ம் வகுப்பு மாணவியை ஏமாற்றியவர் கைது!

காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி 10-ம் வகுப்பு மாணவியை ஏமாற்றி ஆபாச வீடியோ எடுத்த டிரைவரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். அவர் லவ்டுடே சினிமா பாணியில் தனக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண்ணிடம் செல்போனை மாற்றிய போது சிக்கினார்.
சேலம்
வாழப்பாடி,

லவ்டுடே பட பாணி:

சமீபத்தில் வெளியான ‘லவ்டுடே’ என்ற திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தில், காதலனும், காதலியும் தங்களின் செல்போன்களை திருமணத்திற்கு முன்பு மாற்றிக்கொள்வதால் அவர்களின் அந்தரங்க விஷயங்களால் ஏற்படும் பாதிப்பை சுட்டிக்காட்டும் வகையில் கதைக்களம் அமைந்திருக்கும்.

இந்த படத்தின் தாக்கம் திருமணம் நிச்சயிக்கப்பட்ட புதுமாப்பிள்ளை ஒருவரின் வாழ்க்கையை மாற்றிப்போட்டு விட்டது. ஆம். சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த பேளூர் மாதா கோவில் பகுதியை சேர்ந்த அரவிந்த் (வயது 23) என்ற தனியார் ஆம்புலன்ஸ் டிரைவருக்கு தான் சமீபத்தில் திருமணம் நிச்சயமானது.

செல்போனை வாங்கி பார்த்த போது:

அவரது செல்போனை லவ்டுடே பாணியில், அவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் வாங்கி பார்த்து உள்ளார். அவர் அரவிந்தின் செல்போனை அலசி ஆராய்ந்த போது அதிர்ச்சியில் உறைந்து போனார். அரவிந்த்தின் வீடியோக்களை பார்த்த போது, 10-ம் வகுப்பு மாணவியின் அரை நிர்வாண வீடிேயாவை மற்றொரு முனையில் அரவிந்த் பார்ப்பது போன்று ஒரு வீடியோ இருந்தது. இது குறித்து நிச்சயிக்கப்பட்ட பெண் விசாரிக்க தொடங்கினார். அப்போது தான், முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் புதிதாக கணக்கு தொடங்கிய 10-ம் வகுப்பு மாணவி ஒருவரை அரவிந்த் குறி வைத்து பழகியதும், அவரின் செல்போன் எண்ணை பெற்று தொடர்ந்து காதல் மொழி பேசியதும் தெரியவந்தது.

அரை நிர்வாண வீடியோ பதிவு:

மேலும் அரவிந்த்தின் பேச்சில் அந்த மாணவி மயங்கி உள்ளார். ஒரு கட்டத்தில் வீடியோ காலில் அரவிந்த் அந்த மாணவியுடன் பேசி உள்ளார். அப்போது அந்த மாணவியை அரை நிர்வாணமாக பாா்க்க ஆசைப்படுவதாக கூறி அரவிந்த் வற்புறுத்தி உள்ளார்.

அதை வீடியோ பதிவு செய்ய மாட்டார் என்று நம்பி அந்த மாணவியும் அரை நிர்வாணமாக இருக்க அதை அந்த மாணவிக்கு தெரியாமல் அரவிந்த் வீடியோவாக பதிவு செய்த காட்சியை தான் அவருக்கு நிச்சயிக்கப்பட்ட பெண் பார்த்து உள்ளார்.

கைது நடவடிக்கை:

உடனே அவர் அந்த மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இந்த தகவலை கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர், வாழப்பாடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்த புகாரின்பேரில் அரவிந்த் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸ் இன்ஸ்பெக்டர் தனலட்சுமி வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தார்.

கைதான அரவிந்திடம், இதுபோன்று வேறு பெண்களின் நிர்வாண வீடியோவை பதிவு செய்து உள்ளாரா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து வெளியான தகவல் பெற்றோர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

லவ்டுடே பாணியில் செல்போனை மாற்றிய ஆம்புலன்ஸ் டிரைவர் போக்சோவில் கைதான சம்பவம் வாழப்பாடி பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.

புகைப்படம் & செல்போன் எண்ணை பதிவிட வேண்டாம்:

இது குறித்து வாழப்பாடி போலீஸ் துணை சூப்பிரண்டு ஹரிசங்கரி கூறியதாவது:-

படிக்கும் மாணவ-மாணவிகள் செல்போன் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அப்படி செல்போன் பயன்படுத்தும் மாணவ-மாணவிகள் என்ன செய்கிறார்கள் என பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும். முகநூல் மற்றும் சமூக ஊடகங்களில் புகைப்படங்கள் மற்றும் தொலைபேசி எண்கள் பதிவு செய்வதை தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!