அஞ்சுகிராமத்தை அடுத்த காணிமடம் மந்திராலயத்தில் யோகி ராம்சுரத்குமார் ஜெயந்தி விழாவை முன்னிட்டு தென் தமிழகத்தில் சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சியாக சாதுக்கள் சங்கமம் நிகழ்ச்சி பொன்காமராஜ் சுவாமிகள் தலைமையில் நடைபெற்றது.
குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே எனது உடல் திருவண்ணாமலையிலும் ஆன்மா காணிமடத்திலும் இருக்கிறது என யோகிராம் சுரத்குமாரால் அருள்வாக்கு கூறப்பட்ட காணிமடம் மந்திராலயம் செயல்பட்டு வருகிறது. இதனை நாமரிஷி தபஸ்வி பொன்காமராஜ் சுவாமிகள் நிறுவனத் தலைவராக இருந்து நடத்திவருகிறார்.
இத்தகைய பிரசித்தி பெற்ற மந்திராலயத்தில் யோகிராம் சுரத்குமார் ஜெயந்தி விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு காலை 5 மணிக்கு கணபதி ஹோமம், 6 மணிக்கு நிர்மால்ய தரிசனம், எட்டு மணிக்கு அலங்கார தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து 9 மணிக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து வரும் நிகழ்ச்சியும், நண்பகல் 12:00 மணிக்கு ரோஜா, பிச்சி, மல்லிகை உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்களால் சுவாமிக்கு புஷ்பாபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது. மாலை 3 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட யோகிராம்சுரத்குமார் விக்ரகத்துடன் மாபெரும் ஊர்வலம் நடைபெற்றது.
முக்கிய நிகழ்வாக இரவு 8 மணிக்கு திருவண்ணாமலை, பழனிமலை, கொல்லிமலை, சதுரகிரிமலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து வருகை தந்த சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட சாதுக்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கும் தென் தமிழகத்தில் சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சியாக சாதுக்கள் சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சாதுக்களுக்கு பாதபூஜை நடைபெற்றது. தொடர்ந்து சாதுக்கள் யோகி ராமுக்கு விஷேச பஜனைகள் மற்றும் பூஜை செய்து வழிபாடு செய்தனர். பின்னர் அனைத்து சாதுக்களுக்கும் மந்திராலய நிறுவனர் தபஸ்வி பொன் காமராஜ் சுவாமிகள் மற்றும் அபிமன்யு ஆகியோர் புத்தாடை மற்றும் பொற்கிழி வழங்கி கௌரவப்படுத்தினார்.
அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு சாதுக்கள் ஆசி வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சென்னை, மதுரை, தேனி, கோவை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து வழிபாடு செய்தனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.