தங்கை தங்க மீனாட்சியிடம் பிரச்னை செய்யும் வில்லன்களை, அண்ணன் காளை ”திருப்பாச்சி” அரிவாளை கொண்டு செய்யும் வதமே இந்த அண்ணாத்த.
படத்தின் கதை ஏற்கெனவே தமிழ் சினிமாவில் அடித்து துவைத்த கதைதான். ஆனால் திரைக்கதையும் மிகவும் பழசாக இருக்கிறது. ஓல்டு ஒயின் நியூ பாட்டில் என்பார்கள். ஆனால் கதை தான் பழையது என்றால், திரைக்கதை அரதப் பழசாக இருக்கிறது.
எல்லா காட்சிகளும் மிக மேலோட்டமாக நாடகத் தன்மையுடன் நகர்கின்றன. நாடகத் தன்மை என்றால் தொலைக்காட்சி தொடர்கள் அளவுக்கு நாடகத்தன்மையாக இருக்கின்றது. படத்தில் ரஜினிகாந்த் எதற்கெடுத்தாலும் தத்துவம் பேசுகிறார். அவர் பேசுவதற்காகத் தத்துவங்களை யோசித்துவிட்டு பின்னர் அதற்கேற்ப காட்சி அமைத்திருக்கின்றனர்.
ரஜினிகாந்த்தும் கீர்த்தி சுரேஷும் அண்ணன் தங்கையாக வருகிறார்கள். கீர்த்தி சுரேஷ் வடமாநிலத்தில் இருந்து படித்துவிட்டு வருவதாக சொல்கிறார்கள். அவர் யார், என்ன படித்தார் என எந்த தகவலும் இல்லை. கீர்த்தி சுரேஷ் மட்டுமல்ல, ரஜினிகாந்த், சூரி, நயன்தாரா என இந்தப் படத்தில் வரும் நடிகர்களின் வேடங்கள் மேலோட்டமாகவே எழுதப்பட்டிருக்கின்றன. உதாரணமாக படத்தில் ரஜினிகாந்த்துடன் சூரி, வேல ராமமூர்த்தி வருகிறார்கள். அவர்களுக்கும் ரஜினிகாந்த்துக்கும் என்ன உறவு என்பதுகூட படத்தில் குறிப்பிடப்படவில்லை.

அண்ணன் தங்கையாக வரும் ரஜினிகாந்த் மற்றும் கீர்த்தி சுரேஷின் பாசம்தான் படத்தின் அடிப்படை. இருவரது பாசத்தை பார்வையாளர்களுக்கு உணர்த்தும் அளவுக்கு காட்சிகள் இல்லை. அடிக்கடி ரஜினி என் தங்கைதான் எனக்கு எல்லாமே என்கிறார். மற்றொருபுறம் என் அண்ணாதான் எனக்கு உயிர் என்கிறார் கீர்த்தி சுரேஷ். ஆனால் அது வசனமாக இருக்கிறதே தவிர அவர்கள் பாசத்தை சொல்லக் கூடிய ஒரு காட்சிகூட படத்தில் இல்லை.
மேலும் கீர்த்தி சுரேஷுக்கு வில்லன்களால் வரும் பிரச்னைகூட ஒரே காட்சியில் கடந்துபோகிறது. மேலும் வில்லன்களும் முறைப்பு விறைப்புடன் வந்து ரஜினிகாந்த்திடம் அடி வாங்குகிறார்கள். பின்னர் மீண்டும் அடிவாங்குகிறார்கள். மீண்டும் அடிவாங்குகிறார்கள். கிளைமேக்ஸில் இறந்துபோகிறார்கள்.
கொல்கத்தா நகரையே ஆட்டிப் படைக்கும் டான்களாக வருகிறார்கள் அபிமன்யூ சிங் மற்றும் ஜெகபதி பாபு. அவர்களை சூரக்கோட்டை கிராமத்தில் இருந்து வரும் ரஜினி, இடது கையால் டீல் செய்கிறார். அப்படி சக்தி வாய்ந்த வில்லன்களை எதிர்ப்பதற்கு புத்திசாலித்தனமாக முயற்சிகளை எதுவுமே மேற்கொள்ளாமல், அரிவாளாலேயே அவர்களை அலற விடுகிறார். சூரி அண்ட் கோ அவருக்கு உதவுகிறார்கள்.
வில்லன் வேடத்தை தான் சிவா இவ்வளவு மேலோட்டோமாக எழுதியிருக்கிறார் என்றால் வில்லன்களைக்கூட புதிதாக யோசித்திருக்கிறார். பல்லாயிரக்கான முறை நம் தமிழ் சினிமா ஹீரோக்களிடம் அடிவாங்கிய அபிமன்யூ சிங், ஜெகபதி பாபு உள்ளிட்டோர்தான் இந்தப் படத்திலும் வில்லன்கள்.

பிரகாஷ் ராஜை தத்துவம் பேசியே திருத்தி விடுகிறார் காளை ரஜினிகாந்த். மற்றவர்களுக்கு மொழி தெரியாததால் அரிவாளை கையிலெடுக்கிறார். மற்ற நேரங்களில் எல்லாம் அழகாக தமிழ் பேசும் வட மாநில வில்லன்கள் ரஜினிகாந்த்திடம் மட்டும் ஹிந்தியில் பேசுகிறார்கள். நயன்தாரா அவற்றை மொழிபெயர்க்க வேண்டியிருக்கிறது. இந்த இடத்தில் ஜெய் பீம் பிரகாஷ் ராஜ் முறையை கையாண்டிருந்தால் உடனடியாக தமிழ் பேசியிருப்பார்கள்.
ஒரே காட்சியில் சந்தித்துக்கொள்ளும் ரஜினிகாந்த்தும் நயன்தாராவும் சாரக் காற்றே என டூயட் பாட கிளம்புகிறார்கள். குஷ்புவும், மீனாவும் நகைச்சுவைக்கென பயன்பட்டிருக்கிறார்கள். இருவரும் 90களில் ரஜினிக்கு ஜோடியாக நிறைய படங்களில் நடித்தவர்கள். அவர்களை மீண்டும் ரஜினியுடன் நடிக்க வைப்பது என்ற சிவாவின் யோசனை மட்டுமே நன்றாக இருக்கிறது. ஆனால் காட்சிகள் சுவாரசியமாக இல்லை. படத்தில் சூரி, சதிஷ், சத்யன், பாண்டியராஜ், லிவிங்ஸ்டன் என ஏகப்பட்ட நகைச்சுவை நடிகர்கள். நகைச்சுவைதான் இல்லை.
படம் முழுக்க விஸ்வாசமும், திருப்பாச்சியும் தெறிக்க தெறிக்க காட்சியமைப்பு அமைந்திருக்கிறது. தன்னுடைய காதலி நயன்தாராவைக்கூட தங்கைக்கு காட்டிடாத அண்ணன் காளையன், தங்கை தன்னிடம் அவளது காதலை தெரிவிக்க முடியாததற்கு அழுவதெல்லாம் வேற லெவல். சூரக்கோட்டை அண்ணாத்த கொல்கத்தாவில் வைரலாகிறார். ஆனால் அது கீர்த்தி சுரேஷுக்கு மட்டும் தெரியவில்லை. வணிகப் படத்தில் லாஜிக் பார்க்கக் கூடாது தான். அதற்காக அதை கொஞ்சம் கூட சேர்க்காமல் இருப்பது நியாயமா?.
காட்சிகளின் வடிவமைப்பு மிக மோசமாக நிறைய தொலைக்காட்சித் தொடர்களை நினைவுபடுத்தியது. கதையும் ,திரைக்கதையும் பழையதாக இருக்கலாம். ஆனால் காட்சி அமைப்பும் மிக பழைய முறையில் இருந்தது உண்மையில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அதற்கேற்ப ஒளிப்பதிவாளர் வெற்றியும் சோகக் காட்சியில் ஒவ்வொருவரையும் தனித்தனியாக குளோஸ் அப்பில் காட்டி சின்னத்திரை தொடரை, பெரிய திரையில் பார்க்கும் உணர்வை ஏற்படுத்தியுள்ளார்.

சிவாவின் இயக்கம்தான் பழையதாக இருக்கிறது என்றால் டி.இமானும் தனது இசையில் தேவாவை நினைவுபடுத்துகிறார். அனைவருக்கும் பிடித்த ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த படத்தில் ஒரு காட்சி கூட ரசிக்க முடியாதது தான் சோகம். இந்தத் தீபாவளிக்கும் ரஜினி ரசிகர்களுக்கு மிஞ்சியது ஏமாற்றம் மட்டுமில்லாமல் மீம்ஸ் கிரியேட்டர்களுக்கும், நெட்டிசன்களுக்கும் ட்ரோல் செய்ய தோதாக அமைந்தேதே மிச்சம். “அண்ணாத்த” திரைப்படத்தின் காட்சியை”திருமகள்” தொடர் நாடக விளம்பரம் போல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருவது ரஜினி ரசிகர்கள் மற்றும் பெண்களிடையே பெரும் நகைச்சுவையை ஏற்படுத்தி வருகிறது. ரஜினிக்கு இது தேவையா.? எனவும் கோடி ரூபாய் செலவழித்து படம் எடுத்து, நடித்து ரஜினி சம்பாத்தியம் செய்வார்.. நாங்கள் அன்றாடம் காட்சியாக பிழைத்து சாம்பாதித்து இவரை நம்பி படம் பார்க்கப் போனதற்கு எங்களை எதைக்கொண்டி அடிப்பது என்றே தெரியவில்லை என ரசிகர்களின் மனக்குமுறல்கள் அதிகமே.
இது போக அண்ணாத்தபடத்துல ஓபனிங் ஒருத்தன் ஓடி வந்ததும் நம்மகிட்ட அண்ணாத்தா மாட்டல நாமதான் அண்ணா கிட்ட மாட்டிக்கிட்டு என்று சொல்லுவான் டைரக்டர் கொடுத்த குறிப்ப உணராம நான் தான் அவசரப்பட்டு படத்த பத்துட்டேன் போதும் டா சாமி என முகநூலில் பலரும் பதிவிட்டு வந்தனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.