யார் இந்த “வாளுக்கு வேலி அம்பலம்” பலரும் அறியாத வரலாறு…அரசு விழா எடுக்க கோரிக்கை.

வாளுக்கு வேலி என்றசொல்லின் சிறப்பிற்கு ஏற்றார் போல வாழ்ந்து மறைந்த மாவீரர் நம் அம்பலக்காரர் அவர்கள். ஒரு உயிரை , உடமையை , மக்களை, காத்து நிற்பது வாள் என்றால், அந்த வாளுக்கே வேலிபோல காப்பவன் என்பதே அச்சொல்லின் பொருள். அப்பொருளுக்கேற்ற அப்பழுக்கற்ற சுத்தவீரர் தென்பாண்டி சிங்கம் மாவீரன் வாளுக்குவேலி அம்பலத்தேவர் அவர்கள்.

பாகனேரி நாடு , தமிழ்நாடு மாநிலத்தின் சிவகங்கை மாவட்டத்திற்குட்பட்ட, சிவகங்கை வட்டம், காளையார்கோயில் ஊராட்சி ஒன்றியத்திலுள்ள ஊராகும். “பாகனேரி நாடு” தற்போதைய சிவகங்கை மாவட்டத்தில் காளையார் கோவில், கல்லல், திருப்பத்தூர், சிவகங்கை ஊராட்சி ஒன்றியங்களின் பகுதிகளை உள்ளடக்கியது.

சற்றேறக்குறைய 750 சதுர கிலோமீட்டர் பரப்பில் விரிந்த பகுதியாகும். அதாவது கிழக்கில் அரண்மனை சிறுவயல், காளையார் கோவில், தெற்கில் மறவமங்கலம், ராஜசிம்ம மங்கலம், மேற்கில் சிவகங்கை, சோழபுரம், வடமேற்கில் திருக்கோட்டியூர், வடக்கில் பட்டமங்கலம் வரை பரவிக் காணப்படுகிறது.

பாகனேரி நாடு என்பது:

தெற்கு வாசல்

1.உதாரப்புலி
2.பரிசப்புலி
3.சொக்கனார்
4.பழயடிபுரம்
5.வாவிக்கும் மீண்டான்
6.மதியாப்புலி

வடக்கு வாசல்

1.குறுக்களாஞ்சி
2.குண்டச்சன்
3.பொண்ணூட்டச்சன்
4.கீழவாசல்
5.வாளுக்கு வேலி

என பலபிரிவுகளை உள்ளடக்கிய நாடு

இவற்றுள் காளையார் கோயிலில் எட்டில் மூன்று பங்கு பாகனேரி நாட்டினுள் அடங்கும். தவிர கல்லல், திருப்பத்தூர், சிவகங்கை ஊராட்சி ஒன்றியங்களின் சிறு பகுதிகளும் இந்நாட்டில் இடம் பெறுகின்றன. இதன் எல்லைகளைக் குறிக்கச் சூலக்குறி பொறித்த எல்லைக்கற்கள் எல்லை நெடுகிலும் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் நடப்பட்டுள்ளன.

பெரிச்சிக்கோயில்,
ஆளவிலாம்பட்டி,
சடையன்பட்டி,
கொலாம்பட்டி,
கொங்கராம்பட்டி,
ஊடேந்தல்பட்டி,
பொய்யாமணிப்பட்டி,
கொட்டகுடி

ஆகிய எட்டு உட்கடைக் கிராமங்கள் கீழக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவைகளாகும்.

இவைகளும் தற்போது பாகனேரி நாட்டில் இருந்து பிரிந்து தனித்து இயங்குகின்றன.

பாகனேரி நாட்டின் தென்பகுதியில் அமைந்துள்ள கீரனூர், முத்தூர், பையூர், விராணியூர், அல்லூர், சித்ததூர், பெரியகண்ணனூர் ஆகிய ஏழு ஊர்ளும் அவற்றின் உட்கடைக் கிராமங்களும் ஏழூர்ப்பற்று என வழங்கப்படுகின்றன. இவற்றுள் கீரனூர் என்ற ஊர் ஏழூர்ப்பற்றுக்கு தலைமை இடமாகும்.

இந்த பாகனேரி நாட்டின் தலைவன் (குறுநில மன்னராம்) நம் தென்பாண்டி சிங்கம் மாவீரன் வாளுக்குவேலி அம்பலம்.

நிமிர்ந்த நடை, நேர்க்கொண்ட பார்வை, உதடுகளுக்கு மேலே உரை விட்டெழுந்த வாள் இரண்டைப் பதித்தது போல மீசை, கம்பீரத்தையும் கருணையின் சாயலையும் காட்டும் விழிகள், நீண்டுயர்ந்து வளைந்த மகுடத் தலைப்பாகை, நெடிய காதுகளில் தங்க வளையங்கள், விரிந்த மார்பகத்தில் விலை உயர்ந்த பதக்க மணிச்சரங்கள், இரும்புத்தூண் அனைய கால்களிலும் எஃகுக் குண்டனைய புஜங்களிலும் காப்புகள், கையிலே ஈட்டி, என கம்பீரத்தின் முழு வடிவமாக கத்தப்பட்டில் காட்சியளிக்கிறார் கள்ளர் குல மாவீரன் வாளுக்கு வேலி அம்பலக்காரர்.

சிவகங்கை சீமை கள்ளர் நாடுகளில் ஒன்றான பாகனேரி நாட்டு அம்பலக்காரராக வாளுக்கு வேலியார் திகழ்ந்துள்ளார்.

பட்டமங்கலத்தில் படையெடுத்து வாளுக்கு வேலி அம்பலம் கைப்பற்றிவந்த பிள்ளையார் சிலை இதனை யாரும் வெளியே எடுக்கமுடியாதபடி சிலையை விட வாயிலை சிறிதாக அமைத்து கற்களால் சுவற்றை கட்டி வைத்தார் வாளுக்குவேலி அம்பலம்.

கையில் ஈட்டியும் வளரியுடனும் வாளுக்கு வேலி அம்பலத்தின் சிலை

அக்டோபர் 24 ,1801 ல் கத்தப்பட்டு என்ற ஊரில் சூழ்ச்சியால் கொல்லப்பட்டார். அந்த இடத்தில் இவரின் நினைவாக, இவரது சகோதரர் கருத்தப்பன் அம்பலத்தால் நடுகல் வைத்து வணங்கி வருகின்றனர். அதில் வாளுக்குவேலி அம்பலம் சிலையின் கையில் ஈட்டி மற்றும் வளரி வைத்துள்ளவாறு அமைக்கப்பட்டுள்ளது.

அரசுக்கு வாய்ச்சான் எனும் தந்தை வழி பட்டத்தின் இரு பிரிவுகளாக வாளுக்குவேலி மற்றும் வேங்கைப்புலி வகையராக்கள் உள்ளது. பாகனேரி நாடு கள்ளர்களால் உருவாக்கப்பட்டு ஆளப்படும் நாடும் என Caste and tribes of southern india vol 3(1908) ல் Edgor thurston குறிப்பிட்டுள்ளார். பாகனேரி நாட்டு தலைவரான வாளுக்கு வேலியார் பற்றிய குறிப்புகளை 18 ஆம் நூற்றாண்டு ஒலைச்சுவடிகளில் காணப்படுகிறது.

கிபி 1777ல் கேரளசிங்கவள நாடு மேலத்திருத்தியூர் முட்டத்து பாகனேரியில் வாளுக்குவேலி நல்லத்தம்பி” என்பவர் குறிப்பிடப்படுகிறார். வாளுக்கு வேலியார் குடும்பத்து உறுப்பினராகவோ, பங்காளியாகவோ இவர் இருக்கலாம்.

(ஒலைச்சுவடி எண்: 25 ,பாகனேரி நாட்டு மக்களின் மரபும் பண்பாடும்)

கிபி 1779ல் கேரளசிங்க வளநாடு மேலதிருத்தியூர் முட்டத்து பாகனேரியில் இருக்கும் கள்ளரில் வாளுக்குவேலி அம்பலம் முத்துக்கருப்பன் சேர்வை” என வாளுக்குவேலி பட்டத்துடன் கள்ளர் தலைவர்கள் குறிப்பிடப்படுகின்றனர்.

கிபி 1222 ஆம் ஆண்டை சேர்ந்த பாண்டியர் கால புதுக்கோட்டை கல்வெட்டு எண், திருத்தியூர் முட்டத்து கள்ளர்கள் வண்டாங்குடி எனும் ஊரை விற்பனை செய்தது பற்றி கூறுகிறது.

(ஒலைச்சுவடி எண்:01 ,பாகனேரி நாட்டு மக்களின் மரபும் பண்பாடும்)

பாகனேரி நாடு அமைந்திருக்கும் பகுதி பன்னெடுங் காலமாகவே கள்ளர்களின் ஆளுமையில் உள்ள பகுதி என இக்கல்வெட்டு நமக்கு உணர்த்துகிறது.

வேலுநாச்சியாருக்கு ஆதரவாக களம் கண்ட வாளுக்கு வேலியார்:-

கிபி 1780 ல் ஐதர் அலியின் படை உதவியை பெற்ற வேலுநாச்சியார் மருதுசகோதரர்களுடன் சேர்ந்து சீமை மீட்க புறப்பட்டபோது அவருக்கு ஆதரவாக களம் கண்ட கள்ளர் தலைவர்களில் வாளுக்கு வேலி அம்பலம் குறிப்பிடப்பட்டுள்ளார்.

சிவகங்கை சமஸ்தானத்தால் வெளியிடப்பட்ட சிவகங்கை சரித்திர அம்மானையில் இத்தகவல் இடம்பெற்றுள்ளது.

அம்மானை வரிகள்


இத்தகவலை பின்வரும் அம்மானை வரிகள் மூலம் அறியலாம்:-

தாட்சிணிய மில்லாச் சனமும் விருதுடனே நாச்சியப்பன் சேர்வையும் “வெகு கள்ளர் பெருஞ்சனமுங் கடுங்கோபமுள்ளவர்கள் மல்லாக்கோட்டை நாட்டவரும், சேதுபதியம்பலம் தீரனவன் சனமும், பேதகமில்லா பெரியபிள்ளை அம்பலமும் , துடியன் வயித்தியலிங்க தொண்டைமான் தன்சனமும், மருவத்த மன்னன் மா வேலி வாளனுடன் வெரிமருது சேர்வை” ( சிவ அம் பக் 150-151)

வேலுநாச்சியாருக்கு ஆதரவாக மல்லாக்கோட்டை நாட்டை சேர்ந்த நாச்சியப்பன் சேர்வையும், கள்ளர் பெருஞ்சனமும், மல்லாக்கோட்டை நாட்டு வீரர் சேதுபதியம்பலம், பெரியபிள்ளையம்பலம், பட்டமங்கல நாட்டு வீரர் வயித்திலியங்க தொண்டைமான் (திருப்பத்தூர் கோட்டை கருப்பர் கோயிலில் இவரது சிலை உள்ளது), மருவத்த மன்னன் மா வேலி வாளன் (வாளுக்கு வேலி) முதலானோர் வீரப்போர் புரிந்துள்ளனர்.

கிபி 1780 லேயே பாகனேரி நாட்டின் தலைவரான வாளுக்கு வேலிக்கு அம்பலம் சிவகங்கை சமஸ்தான மீட்பு போரில் ஈடுபட்டுள்ளது உறுதிபடுகிறது.

கிபி 1801 ல் வெள்ளையருக்கு எதிரான போரின் முடிவில் மருதுபாண்டியரை தூக்கிலடப்போகும் முன், அவர்களை காக்க புறப்பட்ட வாளுக்கு வேலி அம்பலம் வெள்ளையர்களால் வஞ்சனையாக கொல்லப்பட்டார். கத்தப்பட்டு எனும் ஊரில் வாளுக்கு வேலியார் உயிர் பிரிந்த இடத்தில் அவரது சிலை நிறுவப்பட்டு இன்று வரை ஊர்மக்களால் வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகிறது.

ஆறாம் நாள் மண்டகப்படி

கோயில் உரிமைகள்:-

பாகனேரி நாட்டில் வழக்கத்தில் உள்ள புல்வநாயகி அம்மன் தல வரலாறு கூறும் ஒலைச்சுவடியில் பின்வரும் தகவல் வாளுக்குவேலி வம்சத்தை பற்றி தரப்பட்டுள்ளது, அதன்படி:-

பாகனேரியில் உள்ள புல்வநாயகி அம்மன் கோயிலின் திருவிழா ஆனி மாதத்தில் நடைபெறும். திருவிழாவின் போது நடத்தப்படும் மண்டகப்படிகளில் ஆறாம் நாள் மண்டகப்படியை வாளுக்குவேலி வம்சத்தார் நடத்தி வருகின்றனர். மண்டகப்படியின் போது ” முத்துவிசய ரகுநாத கரியான் வாளுக்குவேலி பேரன்மார்கள் புல்வநாயகி அம்மனுக்கு மண்டகப்படி வைத்துக் கேளிக்கை பார்க்கிற பிரஸ்தாபத்தினாலே” எனும் வாசகம் இன்றும் வாசிக்கப்படுகிறது.

அரசர்களிடம் இருந்து பெற்ற விருதுகள்

இதுதவிர எட்டாம் நாள் மண்டகப்படி வாளுக்குவேலிபுரத்தை சேர்ந்த பில்லப்பன் அம்பலம் மற்றும் உடையப்பா அம்பலம் ஆகியோரும் நடத்தும் உரிமை உடையவர்கள். மண்டகப்படியின் போது ” முத்துவிசய ரகுநாத கரியான் வாளுக்குவேலி பில்லப்பா அம்பலம், உடையப்பா அம்பலம் புல்வநாயகி அம்மனுக்கு மண்டகப்படி வைத்துக் கேளிக்கை பார்க்கிற பிரஸ்தாபத்தினாலே” எனும் வாசகம் வாசிக்கப்படுகிறது.

எட்டாம் நாள் திருவிழா

திருவிழாவின் ஒன்பதாம் நாளில் நாட்டார்கள் விருதுகளுடன் வருவது வழக்கம். அவர்களில் வாளுக்கு வேலி வம்சத்தவரும் குடை, தீவட்டி முதலிய விருதுகளுடன் கலந்துகொள்வது வழக்கம். தேரின் வடம் இழுக்கும் உரிமை மற்றும் தேங்காய், பொங்கல் பெறும் உரிமையும் சுழற்சி முறையில் இந்த வம்சத்தார்கள் பெறுகிறார்கள்.

18 ஆம் நூற்றாண்டை சேர்ந்த மற்றொரு சுவடியில் அரசுக்கு வாய்ச்சான் பேரன்மார்கள் வாளுக்கு வேலி மற்றும் வேங்கப்புலி ஆகியோருக்கு அய்யனார்கோயிலில் காளாஞ்சி வகைகள் திருநீறு தீர்த்தம் முதலியவை அளிக்கப்பட்ட தகவலை தருகிறது.

சுந்தர பாண்டியன் கல்வெட்டு விளக்கவுரை

வாளுக்கு வேலி வம்சத்தார்கள் இன்றளவும் பழமையான பாரம்பரியத்தை மறவாது , சீரும் சிறப்புமாக வாழ்ந்து வருகின்றனர்.

வழக்கத்தில் உள்ள செவி வழித்தகவல்:-

பாகனேரி நாட்டு வாளுக்கு வேலியார் தனது தங்கையை பட்டமங்கல நாட்டு தலைவருக்கு மணம் செய்து வைத்ததாகவும், ஆனால் இரு குடும்பத்திற்கும் இடையில் பிற்காலத்தில் பகைமை உருவானதால் , வாளுக்கு வேலியாரின் தங்கையை பட்டமங்கல நாட்டு தலைவர் பிறந்த வீட்டிற்கே அனுப்பிவிட்டதாகவும், இதற்கு பதிலடியாக தங்கையின் கழுத்தில் இருந்த தாலியை ஒரு நாயின் கழுத்தில் கட்டி பட்டமங்கல நாட்டிற்கு வாளுக்கு வேலியார் விரட்டியதாகவும் செவிவழி தகவல்கள் இன்றும் வழக்கில் உள்ளன. இரு நாட்டிற்கும் இடையேயான முரண்பாடுகள் இன்றளவும் உயிர்ப்போடு உள்ளதாகவும், கொள்வினை கொடுப்பினை இல்லையென்றும் கள ஆய்வில் கிடைத்த தகவல் உறுதிப்படுத்துகிறது.

தென்பாண்டி சிங்கம் மாவீரன் வாளுக்குவேலி அம்பலம் வரலாற்றை கூறும் செம்மாதுளை (1975 ஆம் ஆண்டு),
தென்பாண்டிச் சிங்கம் (1983 ஆம் ஆண்டு) நூலில் இருந்து சில தகவல்கள்.

செம்மாதுளை இதழ்

வாளுக்குவேலித்தேவனின் தோற்றத்தை , ஆங்கிலேயர்கள் கனவில் கண்டால் கூட அச்சம் கொள்ளுவார்களாம், அப்படியொரு தோற்றம். மருதிருவருக்கும் ஆங்கிலேயருக்கும் நடந்த சண்டையில் அம்பலகாரர் துணை மருதிருவருக்கு பெரியதோர் பலம் என்பதை அறிந்த ஆங்கிலேயர் தளபதி கர்னல் அக்னியூ வாளுக்குவேலு அம்பலத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினான் என்று கூறுகிறார்கள்.

“சொந்த மண்ணையும் தலைவர்களையும் அன்னியர்களுக்கு விற்பனை செய்ய நாங்கள் வியாபாரிகளல்ல, வீரர்கள்; பிழைத்து போ…” என விரட்டியடித்தார் அம்பலம். சிவகங்கை நாட்டுக்கு ஆதரவாக வெள்ளையர் இராணுவத்தோடு பெரும் சண்டையிட்டனர் பாகனேரி அம்பலகாரர்கள்.

வாளுக்கு வேலி அம்பலம்

மருதுபாண்டியரை மீட்க பாகனேரி, பட்டமங்கள படைகள் வாளுக்குவேலித்தேவனின் தலைமையில் திருப்பத்தூர் கோட்டை நோக்கி புறப்பட்டார், வைரமுத்தன், ஆதப்பன், மேகனாதன் மற்றுமுள்ள படைத்தளபதிகள் செல்லும்போது, வைரமுத்தனை கொல்லுவதற்கு உறங்காப்புலி சதிசெய்து படுகுழி வெட்டி வைத்திருக்கிறான்.

அங்கே குழி இருப்பது யாருக்கும் தெரியாமல் இலைகள் பரப்பிவிடப்பட்டு அதன் மீது மண்பத்தைகளும் வைத்து மூடப்பட்டிருகிறது . படைகளுக்கு தலைமையேற்றுள்ள வாளுக்கு வேலி அம்பலம் அந்தகுழியிருப்பது தெரியாமலேயே படைகளுக்கு முன்பு ஐம்பது அடி தொலைவில் பயங்கர வேகத்தில் குதிரையில் சென்று கொண்டிருகின்றார். அந்த பயங்கர படுகுழியில் குதிரையோடு விழுந்தார். அந்த தீடீர் பயங்கரத்தை கண்ட படை நிலைகுலைந்து ஓடி வந்தது அதற்குள் குழியை மண் மலைபோல மூடிக்கொண்டது. அத்தனை படைவீரர்களும் ஓரிரு நொடியில் அந்த குழியை தோண்டி மண்ணை அகற்றி வாளுக்கு வேலியை வெளியே கொண்டு வந்தனர்.

அந்த தென்பாண்டி சிங்கம் கத்தப்பட்டுப் படுகுழியில் இருந்து உயிரற்று வெளியே வந்தார். இன்றைக்கும் கத்தபட்டில் சிலையாக நின்று கொண்டிருக்கிறார்.

தென்பாண்டிச்சிங்கம் என பொறிக்கப்பட்ட கல்வெட்டு

நாம் எல்லோருமே வாளுக்கு வேலிதான் வீரமானவர் என்று எண்ணுகிறோம் ஆனால் உண்மையில் அவருடைய தம்பி கருத்தாதப்பன் மிகவும் வீரமானவர். இந்த கருத்தாதப்பன் பாகனேரியில் இருந்து மதுரை வரை சிலம்பம் வீசி சென்றவர் அங்கு வீழ்த்த முடியாத பயில்வானை வீழ்த்தி அவரின் தலைமுடியை தன்னுடைய சிலம்ப குச்சியில் சுற்றி மீண்டும் பாகனேரி வரை சுற்றிக்கொண்டே வந்தவர் கருத்தாதப்பன் .

இந்த கருத்தாதப்பன் பாரம்பர்யமாக தங்கள் வாழ்வியலோடு கலந்த மஞ்சுவிரட்டு போட்டியில் பட்டமங்கலத்து நாட்டின் காளையை அடக்கியதால் பட்டமங்கலத்து காரரான வீரன் வல்லத்தரசு அடக்கப்பட்ட மாட்டின் கொம்புகளால் தன்னை குத்திகொண்டு மாய்கிறார்.

வாளுக்கு வேலியும் அவரது சகோதரர் கருத்தாதப்பன்

வாளுக்கு வேலி வம்சத்தை சார்ந்த முன்னாள் எதிர்கட்சி தலைவர் (காங்கிரஸ்) சுப்ரமணியன் பூண்டி வாண்டையோரோடு சம்மந்தம் வைத்துள்ளார். மருது சகோதரர்கள் மற்றும் முத்துவடுகநாத தேவர் ஆகியோருக்கு பக்கபலமாய் இருந்தவர் வாளுக்கு வேலி அம்பலகாரர். சீமைத்துரை என்கிற ஆங்கிலேயனை சங்கில் குத்தி கொன்றபோதுதான் இவர்கள் ஆங்கிலேயருக்கு எதிரியாகிவிட்டனர்.

கிபி1773ல் சிவகங்கை அரசை கைப்பற்றுவதில் நவாப் மற்றும் பிரிட்டிஸ் கூட்டுப் படை மிகத் தீவிரமாக செயல்பட்டு கொண்டிருந்த நேரம்.

அந்த நேரத்தில் கிபி1773 மார்ச் மாதம் பிரிட்டிஸ் அரசுக்கு அவர்களின் பிரதிநிதி முத்து கிருஷ்ண முதலியார் சென்னையில் உள்ள இராபர்ட் பால்க் என்கிற அதிகாரிக்கு சிவகங்கை நிலவரத்தை பற்றி கடிதம் மூலமாக தெரிவிக்கிறார்.

அதில் சிவகங்கை கள்ளர் நாடுகள் புரட்சியில் ஈடுபட்டு நமக்கு எதிரான புரட்சியில் உள்ளனர் என்றும் மேலும் அவர்களின் ஆதி சொந்தமான சிவகங்கை அரசுடன் சேர்ந்து புரட்சியில் ஈடுபடுவதாகம் எழுதியுள்ளார்.

அதேபோல் இராபர்ட் பால்க் பிரிட்டிஸ் கவுன்சிலுக்கு சிவகங்கை கள்ளர் நாடுகள் தொடர்ந்து கிளர்ச்சியில் ஈடுபட்டு வருவதாகவும் கடிதம் எழுதியுள்ளார்.

ஜீன் 10 என்பது வாளுக்குவேலி அம்பலம் நினைவு தினம் கிடையாது அவர் மறைந்தது அக் 24, ஜீன் 10 வைகாசி 27 அன்று அவரது வம்சாவழியினர் வருடம் தோரும் வாளுக்குவேலி நடுகல்லிற்கு பொங்கல் படையில்யிட்டு வழிபடும் நாள், அதே நாளில் குல தெய்வ வழிபாடாக நடைபெற்றதை திருவிழாவாக எடுத்து வருகிறார்கள்.

பாகனேரி நாட்டுப் பெருநான்கெல்லையைச் சூழ்ந்து மற்ற பிற நாடுகளும் அமைந்துள்ளன. அவற்றுள் சில நட்பாகவும் சில பகைமை உணர்வுடன் இருந்தன, இருக்கின்றன. இவற்றுள் மல்லாக்கொட்டை, கண்டரமாணிக்கம், குன்னங்கோட்டை, மங்கலம், பூக்குழி ஆகிய நாடுகள் பாகனேரி நாட்டுடன் நீண்ட காலமாக நட்புறவு கொண்டுள்ளன. ஆறூர்வட்டகை, பட்டமங்கலம் நாடுகள் பகைமை உணர்வுடன் உடையன. உதாரணத்திற்கு வாளுக்குவேலி தேவனுக்கும் வல்லத்தராயனுக்கும் ஏற்பட்ட விரோதத்தால் இன்றளவும் இவ்விரு நாடுகளும் பகைமை உணர்வுடனேயே இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

தென்பாண்டி சிங்கம் வாளுக்கு வேலி புகழ்கூறும் பாடல்

வருகுதைய்யா மறவர்படை வானவில் சேனைதளம்,
மறவரோட எதிராளி மாண்டவர் கோடி லட்சம்…

கையிலே வீச்சருவா காலிலே வீரத்தண்டை,

நெத்தியில் பொட்டுவச்சு நீலவண்ணப் பட்டுடுத்தி,

தோளே வாளான துடியான வீரனடா…

தென்பாண்டிச் சிங்கமடா தேன் தமிழ் பாடும் தங்கமடா…

வரிப்புலியின் வர்க்கமடா அந்த வறியோரின் சொந்தமடா…

படை நடுங்கும் தோள்களடா எந்த பகைவரின் மனதும் பதைக்குமடா…

வைரம் பாய்ந்த நெஞ்சமடா அவன் வாளெடுத்தால் வரும் வாகையடா…

தென்பாண்டிச் சிங்கமடா தேன் தமிழ் பாடும் தங்கமடா…

வரிப்புலியின் வர்க்கமடா அந்த வறியோரின் சொந்தமடா…

இருநூறு வருஷம் முன்னே இனமானம் காத்தவன்டா…

வெள்ளை இருட்டை வெளியே விரட்டி அடிச்சவன்டா…

இருநூறு வருஷம் முன்னே இனமானம் காத்தவன்டா…

வெள்ளை இருட்டை வெளியே விரட்டி அடிச்சவன்டா…

ஊமைத்துரைக்கு தான் உற்ற நண்பனாம் சீமைத்துரைகளுக்கு சிம்ம சொப்பனம்…

ஊமைத்துரைக்கு தான் உற்ற நண்பனாம் சீமைத்துரைகளுக்கு சிம்ம சொப்பனம்…

சிம்ம சொப்பனம்… அவன் சிம்ம சொப்பனம்…

தென்பாண்டிச் சிங்கமடா தேன் தமிழ் பாடும் தங்கமடா…

வரிப்புலியின் வர்க்கமடா அந்த வறியோரின் சொந்தமடா…

கைவளரி வீசிவிட்டால் கைலாசம் கலங்குமடா…

வேல்க்கம்பு விட்டெறிஞ்சா வெண்ணிலவில் தைக்குமடா…

கைவளரி வீசிவிட்டால் கைலாசம் கலங்குமடா…

வேல்க்கம்பு விட்டெறிஞ்சா வெண்ணிலவில் தைக்குமடா…

வானத்தைக் கீறி உனக்கு வைகறைய பரிசளிப்பான்…

மானம் காக்கும் மறவனடா நம்ம மருதுபாண்டியர் தோழனடா…

மருதுபாண்டியர் தோழனடா… மருதுபாண்டியர் தோழனடா…

தென்பாண்டிச் சிங்கமடா தேன் தமிழ் பாடும் தங்கமடா…

வரிப்புலியின் வர்க்கமடா அந்த வறியோரின் சொந்தமடா…

படை நடுங்கும் தோள்களடா எந்த பகைவரின் மனதும் பதைக்குமடா…

வைரம் பாய்ந்த நெஞ்சமடா அவன் வாளெடுத்தால் வரும் வாகையடா…

தென்பாண்டிச் சிங்கமடா தேன் தமிழ் பாடும் தங்கமடா…

வரிப்புலியின் வர்க்கமடா அந்த வறியோரின் சொந்தமடா…

தென்பாண்டிச் சிங்கமடா தேன் தமிழ் பாடும் தங்கமடா…

வரிப்புலியின் வர்க்கமடா அந்த வறியோரின் சொந்தமடா…

படை நடுங்கும் தோள்களடா எந்த பகைவரின் மனதும் பதைக்குமடா…

வைரம் பாய்ந்த நெஞ்சமடா அவன் வாளெடுத்தால் வரும் வாகையடா…

தென்பாண்டிச் சிங்கமடா தேன் தமிழ் பாடும் தங்கமடா…

வரிப்புலியின் வர்க்கமடா அந்த வறியோரின் சொந்தமடா…

வலிமையான நாட்டமைப்பை உருவாக்கி ஆட்சி செய்து, அயலார்க்கு எதிரான போர்களில் பங்குக்கொண்டு குறுதி சிந்தி உயிர் நீத்த வாளுக்கு வேலி அம்பலத்தாரின் புகழை நிலைக்கச் செய்யும் வகையில் தமிழக அரசு மூலம் விழா எடுத்து சிறப்பிக்க வேண்டும் என லெமூரியா நியூஸ் குழுமம் வியிலாகவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

ஆதார நூல்கள்:
பாகனேரி நாட்டு மக்களின் மரபும் பண்பாடும்:-டாக்டர் ஆத. முத்தையா

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!