கிராம சபைக் கூட்டத்தில் அதிரடி: ஊராட்சியை கூண்டோடு காலி செய்த மக்கள்.!

கிராம சபைக் கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர், துணைத்தலைவர், உறுப்பினர்களின் பதவியைப் பறித்த பொதுமக்கள்.

கிராம சபை கூட்டம், இந்திய குடியரசு நாள் (26, சனவரி), தொழிலாளர் தினம் (1, மே), இந்திய விடுதலை நாள், (15, ஆகஸ்டு) மற்றும் காந்தி ஜெயந்தி(2, அக்டோபர்) ஆகிய நான்கு சிறப்பு நாட்களின் போது, தமிழ்நாட்டின் அனைத்து கிராம ஊராட்சி மன்றத்தலைவர்களால் கூட்டப்படுகிறது.

இந்தக் கிராம சபைக் கூட்டத்தில், ஊராட்சி மன்ற நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையையும், பொறுப்புணர்வை ஊக்குவித்தல், வளர்ச்சித் திட்டங்களை திட்டமிடுதல் மற்றும் செயல்படுத்தப்படுதல் மற்றும் பயனாளிகளின் விருப்பத்தின்படி பொதுமக்களின் பங்களிப்பை மேம்படுத்துதல் மற்றும் சமூக தணிக்கைக்கு வழி வகுத்தலே கிராம சபைக் கூட்டதின் நோக்கமாகும். கிராம மக்களின் கையிலிருக்கும் அதிகாரம், கிராம சபைக் கூட்ட நடவடிக்கைகள் ஆகும்.

இந்நிலையில் நேற்று அக்டோபர் 2 காந்தி ஜெயந்திையை முன்னிட்டு அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள பூமலைகுண்டு கிராம ஊராட்சியில் தலைவர் பிரியா தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் ஊராட்சிக்குட்பட்ட 6 வார்டு உறுப்பினர்கள் கிராம நிர்வாக அலுவலர் செயலாளர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்,கூட்டத்தில் ஊராட்சியின் வரவு செலவு கணக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

பின்னர் பல்வேறு தீர்மானங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.அப்போது கூட்டத்தில் கலந்துகொண்ட பொதுமக்கள் ஊராட்சியின் செயல்பாடுகள் சரியில்லை என்று குற்றம் சாட்டினர். மேலும் பூமலைகுண்டு ஊராட்சியில் உள்ள கோவில்களின் முன்பு ஆக்கிரமித்து கட்டப்பட்டு உள்ள கட்டிடங்களை அகற்ற வேண்டும் என்று பலமுறை ஊராட்சி தலைவர் துணைத் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்களிடம் வலியுறுத்தியும் அது தொடர்பாக நடவடிக்கை எடுக்கவில்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

கூண்டோடு காலி:

ஊராட்சித் தலைவர்,துணைத் தலைவர் வார்டு உறுப்பினர்களுக்கு எதிராக கிராம மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு அவர்களது பதவியை ராஜினாமா செய்ய வலியுறுத்தினர்.அப்போது பொதுமக்கள் செல்வதற்கும் வார்டு உறுப்பினர் களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது அவர்களை கிராம நிர்வாக அலுவலர் சமாதானம் செய்தார் இதற்கிடையே ஊராட்சி தலைவர் துணைத் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் பார்வதி ஜெயா விஜயா உட்பட 5 பேரும் தங்களது பதவியை கூண்டோடு ராஜினாமா செய்வதாக அறிவித்தனர்.மேலும் இது தொடர்பாக அவர்கள் மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் அனுப்பினர்.

இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவர் பிரியா கூறுகையில்:

கொரோனா பரலுக்கு பிறகு தற்போதுதான் ஊராட்சிக்கு நிதி வந்துள்ளது. நிதி பற்றாக்குறையால் பணிகள் உரிய காலத்தில் நடைபெறவில்லை. இதை அறியாமல் பொதுமக்கள் எங்கள் மீது குற்றம் சுமத்துகின்றனர் எனவே எங்களது பதவியை ராஜினாமா செய்து கடிதம் கொடுத்துள்ளோம் என்றார்.

பரபரப்பு

பூமலைகுண்டு பொதுமக்களிடம் கேட்டபோது ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று பலமுறை வலியுறுத்தியும் ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை பூமலைகுண்டு ஊராட்சிக்கு தேர்தலும் தேவையில்லை அதிகாரிகளும் தேவையில்லை என்று ஆதங்கத்துடன் தெரிவித்தனர் கிராமசபை கூட்டத்தில் ஒரு தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கூண்டோடு ராஜினாமா செய்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!