திருச்சி தீராம்பாளையம் ஊராட்சியை சேர்ந்த வார்டு உறுப்பினர்கள் 5 பேர் பதவியை ராஜினாமா செய்வதாக கலெக்டரிடம் கடிதம் கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருச்சி தீராம்பாளையம் ஊராட்சியை சேர்ந்த வார்டு உறுப்பினர்கள் 5 பேர் பதவியை ராஜினாமா செய்வதாக கலெக்டரிடம் கடிதம் கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வார்டு உறுப்பினர்கள் மண்ணச்சநல்லூர் ஒன்றியம் தீராம்பாளையம் ஊராட்சியில் 9 வார்டுகள் உள்ளன. இதன் தலைவராக சாவித்திரி உள்ளார். இந்தநிலையில் வார்டு உறுப்பினர்களில் 2-வது வார்டு உறுப்பினர் ரங்கம்மாள், 3-வது வார்டு நதியா, 5-வது வார்டு சவுந்தர்யா, 6-வது வார்டு தங்கையன், 8-வது வார்டு ரெங்காபாஷன் ஆகியோர் நேற்று பகல் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அங்கு மாவட்ட கலெக்டர் சிவராசுவிடம் தங்களது பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் கொடுத்தனர்.
அடிப்படை வசதிகள்: அந்த கடிதத்தில், “நாங்கள் கடந்த ஆண்டு ஜனவரிமாதம் வார்டு உறுப்பினராக பதவி ஏற்று கொண்டோம். கடந்த 1½ ஆண்டுகளாக எங்களுடைய வார்டில் எந்தவித அடிப்படை வசதிகளும் செய்யப்படவில்லை. எந்த பிரச்சினை குறித்தும் பஞ்சாயத்து அலுவலகத்தில் அமர்ந்து விவாதிக்க முடியவில்லை. வார்டு உறுப்பினர்களிடம் கையெழுத்து பெறாமல் தீர்மானம் நிறைவேற்றுகிறார்கள். அரசிடம் இருந்து எவ்வளவு நிதி வந்துள்ளது என்று கணக்கு காட்டுவதில்லை. ராஜினாமா கடிதம் இது பற்றி கேட்டால் மரியாதை இல்லாமல் பேசுகிறார்கள். ஆனால் வார்டு மக்கள் தொடர்ந்து எங்களிடம் குறைகளை கூறி வருகிறார்கள். அதை சரிசெய்ய முடியாமல் விழிபிதுங்கிநிற்கிறோம்.மக்களுக்கு எந்தவித பதிலும் கூற முடியாத நிலையில் எங்களுடைய பதவியை ராஜினாமா செய்கிறோம்” என்று கூறி இருந்தனர். ஒரேநேரத்தில் 5 வார்டு உறுப்பினர்கள் ராஜினாமா கடிதம் கொடுத்துள்ள சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், மக்களின் வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்று அவர்களுக்கு சேவை செய்ய முடியவில்லை என்ற ஆதங்கத்தில் ஊராட்சி பிரதிநிதிகள் உள்ளனர்.எனவே இதுபோன்ற பிரச்சனைகளுக்கு வட்டார வளர்ச்சி இயக்குனர் மற்றும் உள்ளாட்சித் துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் அவர்கள் நடவடிக்கை எடுப்பார்களா..? என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.