Rice Kompan: மேகமலையை மிரட்டும் அரிசி கொம்பன் யானை… தமிழக அரசு என்ன செய்யப் போகிறது!

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில், உடும்பஞ்சோலைதாலுகாவில் உள்ள சின்னக்கானல் மற்றும் சாந்தம்பாறை பகுதிகளில் பத்தாண்டுகளுக்கு மேலாக மனித வேட்டையாடி வந்த அரிசிக்கொம்பன் எனும் யானையை, கடந்த வாரம் பொறி வைத்து பிடித்த கேரள மாநில வனத்துறை, பெரியார் புலிகள் காப்பகத்தில் உள்ள மேட்டக்கானம் வனப்பகுதியில் விட்டது.

ஆனால் பெரியார் புலிகள் காப்பகத்தினுள் செல்லாமல், தமிழகத்தை நோக்கி திரும்பி மாவடிக்கும்- முல்லைக்கொடிக்கும் இடையே உள்ள கணவாய் வழியாக, மேகமலை வனப்பகுதிக்குள் அரிசி கொம்பன் யானை நுழைந்தது.ரேடியோ காலர் பொருத்தப்பட்ட அரிசிக் கொம்பனின் இருப்பிடத்தை, தொடர்ந்து மறைத்து வந்த கேரள மாநில வனத்துறை அதிகாரிகள், ஒரு கட்டத்தில் மாவடி அருகே வெடிவைத்து அரிசிக்கொம்பன் யானையை தமிழக வனப்பகுதிக்குள் விரட்டி அடித்திருக்கிறார்கள்.

இப்போது மேகமலை வனப்பகுதியில் அரிசிக்கொம்பன் மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. மணலாறு எஸ்டேட் பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. தென்பழனி வனச் சோதனை சாவடியை தாண்டி எஸ்டேட்வாசிகளோ, சுற்றுலா பயணிகளோ செல்வதற்கு முற்றாக தடை விதித்திருக்கிறது தேனி மாவட்ட நிர்வாகம்.மேகமலையின் நுழைவு வாயிலான சிலுவை கோயில் அருகில் வரை வந்துவிட்ட அரிசிக்கொம்பன், கர்டானா எஸ்டேட், ஆனந்தா எஸ்டேட் பகுதிகளில் உலா வந்து கொண்டிருக்கிறது.

எஸ்டேட்டிற்கு வேலைக்கு சென்றால்தான் வாழ்க்கை என்று விதிக்கப்பட்ட எஸ்டேட்வாசிகள், இந்த அரிசி கொம்பன் எனும் மனித வேட்டையாடக்கூடிய மிருகத்திற்கு பயந்து வீடுகளை பூட்டி உயிருக்கு பயந்து நடுங்கிக் கொண்டிருக்கிறார்கள். மேகமலையில் முகாமிட்டிருக்கும் வனத்துறை அதிகாரிகள், அரிசிகொம்பனின் நடமாட்டத்தை கண்காணிப்பது மட்டுமே தங்கள் கடமை என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் போலும்.

எத்தனை நாளைக்கு இந்த அரிசிக்கொம்பனின் நடமாட்டத்தை மட்டுமே கண்காணிப்பது…இனி அரிசிக்கொம்பன் யானை கேரளாவிற்கு செல்வதற்கான வாய்ப்பு குறைந்துவிட்ட நிலையில், அடுத்த கட்டமாக யானையை என்ன செய்வது என்பது குறித்து தேனி மாவட்ட நிர்வாகம் ஒரு முடிவுக்கு வர வேண்டும். அதுதான் சரியான முடிவாக இருக்கும். கும்கி யானைகளைக் கொண்டும், விலங்குகள் நல மருத்துவர்களைக் கொண்டும், அரிசிக்கொம்பனை பிடிப்பதற்கு உண்டான அடுத்த கட்ட வேலைத் திட்டத்தை தமிழ்நாடு வனத்துறை முன்னெடுக்க வேண்டும்.ஒன்று அந்த யானையை பிடித்து முதுமலை தெப்பக்காட்டில் உள்ள யானைகள் முகாமிற்கு கொண்டு செல்ல வேண்டும். களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அருகே உருவாக்கப்பட்டிருக்கும், அகத்தியர் மலை யானைகள் காப்பகத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.

மூன்றாவதாக உடுமலைப்பேட்டையில் இருந்து மூணாறு செல்லும் சாலையில் உள்ள இந்திரா காந்தி தேசிய வனவிலங்கு சரணாலயத்தில் கொண்டும் விடலாம்.இதுதான் தீர்வாகுமே தவிர அனுதினமும் மலையாள மீடியாக்களுக்கு தீனி போட்டுக் கொண்டிருக்கக் கூடாது. அது நமது வேலையும் அல்ல… வனச் சட்டங்களை மதித்து அரிசி கொம்பனை அப்புறப்படுத்தாத வரை மேகமலையில் அமைதி திரும்புவதற்கு எந்த வாய்ப்பும் இல்லை. போர்க்கால அடிப்படையில் இதற்கான முடிவை அரசு நிர்வாகம் எடுக்க வேண்டும். இல்லையேல் ஏதோ ஒரு மலையாள சேனலில் தினசரி அது பாடு பொருளாக வந்து கொண்டிருக்குமே தவிர, புண்ணியம் ஏதுமில்லை.

144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கும் எஸ்டேட் பகுதிகளில் உள்ள தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு நான் ஒன்றுக்கு 500 ரூபாய் இழப்பீடாக வழங்குவதற்கு தேயிலை தோட்ட நிர்வாகத்திற்கு அரசு உத்தரவிட வேண்டும்.தமிழக வனத்துறை அமைச்சர் மாண்புமிகு மதிவேந்தன் அவர்கள், இந்த விடயத்தில் கூடுதல் அக்கறை எடுத்து, நிலைமையை சமூகமாக்குவதற்கு முன் வர வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் வன ஆர்வலர்கள் கேளிக்கை விடுத்துவருகின்றனர்.

நன்றி: ச.அன்வர் பாலசிங்கம். ஒருங்கிணைப்பாளர்.

பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!