டி.டி.வி.தினகரனுடன் ஓபிஎஸ் திடீர் சந்திப்பு! தென்மாவட்டங்களில் மாநாடு… அதிமுக- அமமுக ஒருங்கிணைக்க திட்டம்?

டிடிவி தினகரன் இல்லத்திற்கு சென்று அவரை நேரில் சந்தித்தார் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.
முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவருடைய ஆதரவாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை அவரின் இல்லத்திற்கு சென்று சந்திதார்.

ஓ.பி.எஸ் தனது பலத்தை நிரூபிக்கவும் அதிமுகவின் முப்பெரும் விழாவினைக் கொண்டாடவும் திருச்சியில் மாநாட்டினை ஏற்பாடு செய்திருந்தார். பொன்மலை ஜி கார்னர் மைதானத்தில் நடந்த இந்த மாநாட்டில் பல்லாயிரக்கணக்கில் அவரது ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர். அந்த மாநாட்டில் பேசிய அவர், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சி.வி.சண்முகம், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.


கடந்த சில தினங்கள் முன் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “திருச்சி மாநாடு நான் எதிர்பார்த்த அளவில் தொண்டர்களின் மத்தியில் மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாநாடு அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்தது. மண்டல மாநாடு, மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செய்வது குறித்து இன்று ஆலோசனை செய்ய உள்ளோம்” எனவும் கூறியிருந்தார்.


சசிகலா டிடிவி உடன் இணைவாரா என்ற எதிர்பார்ப்புகள் எழுந்த நிலையில் திருச்சி மாநாட்டிற்கு சசிகலா டிடிவி போன்றோர் அழைக்கப்படுவார்களா என்ற கேள்வியும் எழுந்தது. இதற்கு பதில் அளித்த பண்ருட்டி ராமச்சந்திரன், “டிடிவி தினகரன் ஏற்கனவே கட்சி நடத்துகிறார். அவரை அழைத்தால் தோழமைக் கட்சிகளை எல்லாம் அழைக்க வேண்டும். எனவே அவரை அழைக்கவில்லை. சசிகலாவை பொறுத்தவரை அவர் இன்னமும் நம்புகிறார், எல்லாரையும் ஒன்று சேர்க்கலாம் எனக் கூறுகிறார். அவரை எங்கள் மாநாட்டிற்கு வாருங்கள் என அழைத்தால் அது அவரது நடுவு நிலைமைக்கு குந்தகமாகும். நாங்கள் அழைத்து அவர் வரவில்லை என்றால் எங்கள் வேண்டுகோளை அவர் நிராகரித்ததாக ஆகும். ஆகவே அவர் எடுக்கும் முயற்சிகளுக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம்” என்று கூறி இருந்தார்.

மேலும் டிடிவி தினகரனுடனான சந்திப்பு குறித்து தொடர்ச்சியான கேள்விகள் அவரிடம் வைக்கப்பட்டு வந்ததைத் தொடர்ந்து, கட்சியை ஒருங்கினைக்க வேண்டும், உண்மையான் அதிமுகவை நிலைநாட்ட வேண்டும் என்பதன் அடிப்படையில் டிடிவி மற்றும் சசிகலா இருவரையும் சந்தித்து ஆதரவு கேட்பேன் என கூறியிருந்தார்.

இந்நிலையில் சென்னை அடையாறில் உள்ள டிடிவி தினகரன் இல்லத்தில் அவரை ஓ.பன்னீர்செல்வமும், பண்ருட்டி ராமச்சந்திரனும் சந்தித்துள்ளனர். தொடர்ச்சியாக மாநாடுகளை நடத்த ஓபிஎஸ் திட்டமிட்டிருப்பதாகவும் மாநாட்டில் பங்கேற்க டிடிவி தினகரனுக்கு அழைப்பு விடுக்க இந்த சந்திப்பு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. டிடிவி மற்றும் சசிகலா உடன் இணைந்து பணியாற்ற தயார் என ஓபிஎஸ் ஏற்கனவே கூறியிருந்த நிலையில் இந்த சந்திப்பு மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. மேலும் தென் மாவட்டங்களில் எடப்பாடி பழனிசாமி தரப்பினருக்கு பெரிதாக வாக்கு வங்கி இல்லாததால் அங்குள்ள அதிமுக வாக்குகளை தன் பக்கம் இழுக்க முயற்சிகள் மேற்கொள்வது குறித்தும் விவாதிக்க இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!