
சென்னை: “அதிமுகவை ஒற்றுமையால் மீட்டெடுப்போம்” என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வாயிலாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “ஒற்றைக் குச்சியை ஒடிப்பது சுலபம். கத்தைக் குச்சியை முறிப்பது கடினம். இனியும் சமாதானம் சொல்லி, தோல்விக்கு தொண்டர்களை பழக்குவது பாவ காரியமாகும்.
‘தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம், ஒர் வழி நின்று நேர் வழி சென்றால் நாளை நமதே’ என்னும் கழக நிறுவனர், எம்ஜிஆரின் மந்திர மொழியை மருந்தாகக் கொள்வோம். நமது வெற்றியை நாளை சரித்திரமாக்கிட மனமாட்சியம் மறந்து ஒன்றரைக் கோடி தொண்டர்களும் ஒன்றாகுதல் காண்போம்.
ஜெயலலிதா உச்சத்தில் அமர்த்திப்போன கட்சியையும், அவர் ஒப்படைத்துப் போன ஆட்சியையும் ஒற்றுமையால் மீட்டெடுக்க எத்தகைய தியாகத்திற்கும் ஆயத்தமாவோம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, தேர்தல் தோல்விகுறித்து அறிக்கை வெளியிட்டிருந்தபழனிசாமி, “இந்தத் தேர்தல் முடிவுகள் நம்மை சோர்வடையச் செய்யாது. 2026 சட்டப்பேரவை பொதுத் தேர்தலை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதற்கான பாடமும், படிப்பினையும் நமக்குக் கிடைத்திருக்கிறது. 2026 தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவோம்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
“30 ஆண்டு ஆட்சி செய்த கட்சியின் பரிதாப நிலை” – தமிழகத்தில் 30 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த அதிமுக இரு ஆண்டுகளுக்கு முன்பு தனது பொன்விழாவை நிறைவு செய்தது. கடந்த 2014 மக்களவை தேர்தலில் தேசிய அளவில் 3-வது பெரிய கட்சி என்ற பெருமையை பெற்றது. அந்த தேர்தலில் ஜெயலலிதா தலைமையில் தனித்து 39 தொகுதியிலும் போட்டியிட்டது. அதில் 37 தொகுதிகளை வென்றது. மொத்தம் 1 கோடியே 79 லட்சத்து 83 ஆயிரத்து 168 வாக்குகளை பெற்றது. இது தமிழகத்தில் பதிவான மொத்த வாக்குகளில் 44.34 சதவீதமாகும்.
இரட்டை தலைமை டூ ஒற்றைத் தலைமை: ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, பழனிசாமி இடம்பெற்ற இரட்டை தலைமையின் கீழ் 2019 மக்களவை தேர்தலை அதிமுக எதிர்கொண்டது. அந்த தேர்தலில் பாமக, தேமுதிக, தமாகா, புதிய தமிழகம் கட்சி, புதிய நீதிக் கட்சி ஆகியவற்றுடன் மெகா கூட்டணி அமைத்து போட்டியிட்டது. கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியது போக 22 தொகுதிகளில் அதிமுகபோட்டியிட்டது. அத்தேர்தலில் தேனி தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் மட்டும் வெற்றி பெற்றார். மற்ற 21 இடங்களிலும் அதிமுக தோல்வியை தழுவியது.
அந்த தேர்தலில் அதிமுக மொத்தம் 82 லட்சத்து 87 ஆயிரத்து 420 வாக்குகளை பெற்றிருந்தது. இது தமிழத்தில் பதிவான மொத்த வாக்குகளில் 35.20 சதவீதமாகும். 2014 தேர்தலில் தனித்து போட்டியிட்டு 37 இடங்களில் வென்ற அதிமுக, 2019 தேர்தலில் பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டும் 1 இடத்தில் மட்டுமேவென்றது. வாக்கு சதவீதமும் குறைந்தது.
அதன்பிறகு, 2024 மக்களவை தேர்தலில் பழனிசாமி என்ற ஒற்றைத் தலைமையின் கீழ் அதிமுக தேர்தலை எதிர்கொண்டது. இந்ததேர்தலில் தேமுதிக, புதிய தமிழகம்,எஸ்டிபிஐ ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து 34 இடங்களில் போட்டியிட்டது. மொத்தம் 88 லட்சத்து 40 ஆயிரத்து 413 வாக்குகள் பெற்றது. இது தமிழகத்தில் மொத்தம் பதிவான வாக்குகளில் 20.46 சதவீதமாகும்.
7 தொகுதிகளில் டெபாசிட் காலி: தென்சென்னை, வேலூர், தேனி, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர். 24 இடங்களில் 2-ம் இடத்தை பிடித்தது. 10 இடங்களில் 3-ம் இடத்துக்கு தள்ளப்பட்டது. கடந்த 2004-ம் ஆண்டைப்போலஅதிமுக உறுப்பினர் இல்லாத மக்களவை அமைய உள்ளது.
இத்தகைய சூழலில்தான் ஓ.பன்னீர்செல்வம், அதிமுகவை ஒற்றுமையால் மீட்டெடுப்போம்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழக அரசியலில் இது முக்கியத்துவம் பெறுகிறது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.