உரத்தொழிற்சாலையில் இருந்து துர்நாற்றம்: பொதுமக்கள் அவதி… நடவடிக்கை எடுக்குமா மா.க.வா?


மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கப்பலூர் சிட்கோ இயங்கிவருகிறது. தமிழ்நாட்டில் இரண்டாவது சிட்கோ என பெயர் பெற்றுள்ள இந்த சிட்கோ அருகில் தான் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மதுரையிலிருந்து திருமங்கலம் செல்லும் தேசிய நான்கு வழிச்சாலையில் தோப்பூர் பகுதியில் தனியார் உரத்தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலையில் இருந்து அவ்வப்போது வெளியேறும் துர்நாற்றத்தால் பொதுமக்களுக்கு கண்ணெரிச்சல் மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுகிறது. சுற்றுவட்டார பகுதிகளில் லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்த பகுதியில் கடந்த சில மாதங்களாக அதிகாலை மற்றும் இரவு நேரத்தில் துர்நாற்றம் வீசுகிறது.

துர்நாற்றத்தை கட்டுப்படுத்த முடியாமல் தொடர்கிறது. இரவு நேரங்களில் குடும்பத்தினர் தூங்க முடியாததால் கதவு, ஜன்னலையும் மூடும் நிலை ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் பெரும் அவதிப்படுகின்றனர்.
மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு பலமுறை புகார் தெரிவித்தும் தொடர்ந்து துர்நாற்றம் வீசி வருகிறது. இதே நிலை நீடித்தால் இப்பகுதி மக்களுக்கு நுரையீரல் பிரச்னை, கண்பார்வை கோளாறு, குழந்தைகளுக்கு மூச்சுத் திணறல் போன்ற பிரச்சனை ஏற்படும் அபாயம் உள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘தோப்பூரில் உள்ள தனியார் உரத்தொழிற்சாலையில் இருந்து அடிக்கடி துர்நாற்றம் வீசுகிறது. இரவு நேரங்களில் துர்நாற்றம் அதிகமாகிறது. சாலையில் வாகனம் ஓட்டி செல்லமுடியவில்லை.
இந்த தொழிற்சாலையில் உரம் தயாரிக்க பயன்படுத்தப்படும் ரசாயன மூலப்பொருட்களை கையாள்வதில் நிறுவன ஊழியர்கள் மெத்தனமாக உள்ளனர்.


இதனால் சுற்றுப்புற சுகாதாரம் பாதிக்கப்படுவதோடு நிலத்தடிநீர் சீரழிந்துவிடும். மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் மற்றும் தொழிற்சாலை ஆய்வாளர்களும் தொழிற்சாலையை முறையாக கண்காணிப்பதில்லை. எனவே இப்பகுதியை சுற்றி உள்ள அனைத்து தொழிற்சாலைகளையும் ஆய்வு செய்து காற்று மற்றும் மண் வளம் பாதிப்பு குறித்து கண்டறிய வேண்டும்,’’ என்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!